விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு பிரித்தானிய அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கையினை மீள்பரிசீலனை செய்யவேண்டுமெனக்கோரி மட்டக்களப்பு- ஏறாவூரில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் நடாத்தப்பபட்டது.
ஜனநாயக மக்கள் கட்சியின் தலைவர் கே. வாஜித் தலைமையில் சுகாதார விதிமுறைகளுக்கமைவாக நடைபெற்ற இப்போராட்டத்தில் குறைந்த தொகையினரே பங்கேற்றனர்.
'பிரித்தானிய அரசே! புலிகள் மீதான தடையை நீக்காதே' என்ற வாசகம் மும்மொழிகளிலும் எழுதப்பட்ட பதாதையொன்றை கவனயீர்ப்புப் போராட்டக்காரர்கள் ஏந்திநின்றனர்.
இதையடுத்து இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஊடாக இலண்டன் உள்துறை செயலாளர் பிரிதி படேலுக்கான மகஜர் பிரதேச செயலாளர் திருமதி நிஹாறா மௌஜுதிடம் கையளிக்கப்பட்டது.
போராட்டக்காரர்கள் இங்கு கருத்து வெளியிட்டனர்.
முழு மனித சமுதாயத்திற்கும் எதிராகச் செயற்பட்ட எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தை ஒரு பயங்கரவாத அமைப்பாகக்கருதி உலகிலுள்ள முப்பதிற்கு மேற்பட்ட நாடுகள் தடைசெய்துள்ள நிலையில் பிரித்தானிய அரசாங்கம் இத்தடையை நீக்க மேற்கொள்ளும் முயற்சியானது சர்வதேச ரீதியில் பயங்கரவாத இயக்கம் மீதாக தடை வலுவிழந்துசெல்ல வாய்ப்பை ஏற்படுத்தும்.
அதேநேரம் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட இழப்பிற்காக நட்டஈடு இதுவரை கிடைக்காத நிலையில் அவ்வமைப்பு மீதான தடை நீக்கப்பட்டால் அவ்வியக்கம் சாதாரண ஓர் அமைப்பாகவே கருதப்படும் அபாயம் இருக்கிறது. எனவே பிரித்தானியா புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்குவது குறித்த மீள்பரிசீலனை செய்யவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
0 Comments