கிழக்கு மாகாணத்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று இன்று மேலும் 13பேர் அடையாளம் காணப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 144ஆக அதிகரித்துள்ளது என கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று (2020.11.26) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் இன்று 10 கொரோனா தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்து அங்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அக்கரைப்பற்று சந்தை தொகுதியை சேர்ந்த 20 பேரிடம் செய்யப்பட்ட PCR பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதனை தொடர்ந்து அந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டு அனைவருக்கும் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அங்கு மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனைகளின் அடைப்படையில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அங்கு சிறிய கொரோனா கொத்தணி ஒன்று உருவாகும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஒரு நாளுக்கு 200 PCR பரிசோதனைகளையே செய்யக்கூடியதாக உள்ளதாகவும் ஆனால் கிழக்கு மாகாணத்தில் PCR பரிசோதனைகள் தாமதமடைவதாக சொல்லப்படுவது தவறு எனவும் கூடியது இரு நாட்களில் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைள் இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இன்று இனங்காணப்பட்ட கொரோனா நோயாளர்கள் மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் இருவரும், அக்கரைப்பற்று பிரதேசத்தில் 10 கொரோனா நோயாளர்களும், சாய்ந்தமருது பிரதேசத்தில் ஒருவருமான அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அக்கரைப்பற்று பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண மக்கள் போதிய அவதானம் அற்று காணப்படுவதாகவும், குழுக்களாக செயற்படுவதாகவும், சமூக இடைவெளியை பின்பற்றாது உள்ளதாகவும் இதனால் பாரதூரமான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆகவே, பொது மக்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும், சமூக இடைவெளியை சரியாக கடைபிடிக்குமாறும், முகக்கவசங்களை அணியுமாறும், குழுக்களாக செயற்படுவதை குறைக்குமாறும், தேவைகளுக்கு மாத்திரம் வெளியில் செல்லுமாறும், சுகாதார துறையால் அறிவிக்கப்பட்டுள்ள சட்டதிட்டங்களை சரியாக கடைப்பிடிக்குமாறும் அவ்வாறு கடைபிடிக்காதவர்களை கைது செய்து தனிமைப்படுத்துவதுடன் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இத்துடன் டெங்கு நோய் அபாயம் காணப்படுவதால் கொரோனா தொற்றுடன் டெங்கு நோய் தொடர்பாகவும் போதிய அவதானத்துடன் இருக்குமாறும், சுற்று சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments