கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகார எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் இருந்து புதிதாக நால்வருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், கல்முனைப் பிராந்தியத்தில் தற்போது 17 கொரோனா தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.
இதற்கமைவாக, இறக்காமம் பிரதேசத்தில் இருந்து இருவரும், அக்கரைப்பற்று மற்றும் மருதமுனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த தலா ஒவ்வொருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அத்தோடு இவர்கள், பேலியகொடை, மினுவாற்கொடை கொத்தணி பரவலுடன் தொடர்பு பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
இறக்காமம் பிரதேசத்தில் உள்ள நபருக்கும், அவரது மனைவிக்கும் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில், அவர்கள் இருவரும் தெல்தெனிய கொரோனா தொற்று சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கொழும்பு புத்தக நிலையத்தில் கடமையாற்றிய அக்கரைப்பற்று இளைஞர் ஒருவரும் மருதமுனைப் பிரதேசத்தினைச் சேர்ந்த ஒருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில், இவர்கள் இருவரும் பாலமுனை கொரோனா தொற்று சிசிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 195 பேர் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது அங்கிருந்த ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதனால் அவர்கள் சிசிச்சைக்கென தெல்தெனியவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில் தனிமைப்பட்டிருந்தவர்கள் மத்தியில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது அவர்கள் தொற்றுக்கு இலக்காகவில்லை என அடையாளம் காணப்பட்டவர்களில் 182 பேர் இன்று(02) தத்தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தத்தமது வீடுகளில் மேலும் 14 நாட்களுக்கு சுய தனிமைப்படவுள்ளனர்.
பாலமுனை கொரோனா சிகிச்சை நிலையத்தில் 79 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அக்கரைப்பற்று மற்றும் மருதமனை ஆகிய பிரதேசங்களில் இருந்து கொரோனா தொற்றுக்கு இலக்காகிய இருவர் இன்றைய தினம் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ளதனால் அங்கு 81 கொரோனா தொற்றாளர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.
0 Comments