Home » » நேற்று மாத்திரம் மேலும் 559 பேருக்கு கொரோனா தொற்று- மொத்த எண்ணிக்கை 22000ஐக் கடந்தது!!

நேற்று மாத்திரம் மேலும் 559 பேருக்கு கொரோனா தொற்று- மொத்த எண்ணிக்கை 22000ஐக் கடந்தது!!

 


இலங்கையில் நேற்றைய தினம் மொத்தமாக 559 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இதனால் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 22 ஆயிரத்தையும் கடந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு நேற்யை தினம் அடையாளம் காணப்பட்ட 559 கொரோனா நோயாளர்களில் 553 பேர் மினுவாங்கொடை - பேலியகொட கொத்தணிப் பரவலில் சிக்கியவர்கள் ஆவர்.

ஏனைய ஆறு பேரில் இருவர் இந்தியர்களும், துருக்கி, மாலைதீவு மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் ஆகியவற்றிலிருந்து வருகை தந்த கப்பலில் தொழில்புரிபவர்கள் ஆவர்.

சுகாதார அமைச்சின் தோற்று நோயியல் பிரிவின் தரவுகள் படி தற்போது நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 22,028 ஆகவுள்ளது.

இதேநேரம் நேற்றைய தினம் 369 கொரோனா நோயாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ள நிலையில் குணமடைந்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையும் 15,816 ஆக உயர்வடைந்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள 56 வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 6,116 பேர் சிகிச்சை பெற்று வருவதுடன், கொரோனா தொற்று சந்தேகத்தில் 650 பேர் வைத்தியக் கண்காணிப்பிலும் உள்ளனர்.

இதற்கிடையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில் மூவரின் மரணம் நேற்றைய தினம் இடம்பெற்றிருப்பதாக உறுதி செய்துள்ளார்.

அதனால் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 99 ஆக அதிகரித்துள்ளது.

01.கொழும்பு 08 பிரதேசத்தைச் சேர்ந்த, 87 வயதான ஆண் நபர். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 2020 நவம்பர் மாதம் 26 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் -19 வைரஸ் தொற்றுக்குள்ளானதுடன் பாக்டீரியா தொற்று மற்றும் நாள்பட்ட நுரையீரல் நோய் அதிகரித்தமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

02. பம்பலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதான ஆண் நபர். கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2020 நவம்பர் மாதம் 25 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். உயர் இரத்த அழுத்தம், நிமோனியா மற்றும் கொவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்ட மாரடைப்பு ஆகியவை மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

03. பேலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதான பெண். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 2020 நவம்பர் மாதம் 23 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றுடன் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளானமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |