புத்தளம் தலைமையக பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சேர்விஸ் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த நபர் ஒருவர் வீதியோரத்தில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் நிந்தனியைச் சேர்ந்த 55 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புத்தளம் தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பி.குமாரதாச, புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சந்ரா பெர்ணான்டோ, மேற்பார்வை பொதுசுகாதார உத்தியோகத்தர் என்.சுரேஷ் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
கெட்டிப்பொலவில் ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வந்த இவர், அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு , நேற்று (04) தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து இன்றைய தினம் (05) வீட்டிற்கு வருகை தந்துள்ள நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதேவேளை, உயிரிழந்த குறித்த நபர், கெட்டிப்பொலவில் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலை நிறைவு செய்துகொண்டமைக்கான சான்றிதழ் கெட்டிப்பொல சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக புத்தளம் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் என்.சுரேஷ் தெரிவித்தார்.
உயிரிழந்த குறித்த நபரின் சடலம் சுகாதார அறிவுறுத்தலின் பிரகாரம் பூரண பாதுகாப்பில் புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உயிரிழந்த நபரின் இரத்த மாதிரிகள் PCR பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பரிசோதனை முடிவுகள் கிடைத்தவுடன் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என புத்தளம் மேற்பார்வை பொதுசுகாதார பரிசோதகர் என்.சுரேஷ் மேலும் தெரிவித்தார்.
0 comments: