அம்பாறை மாவட்டத்தின் கல்முனை சுகாதார பிராந்தியத்திற்குட்பட்ட பகுதியில் மூன்று பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் திருகோணமலையில் ஒருவருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அ.லதாகரன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பகுதியில் ஒருவரும் பொத்துவில் பகுதியில் இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பேலியகொலை மீன்சந்தையுடன் தொடர்புபட்டவர்களை இனங்கண்டு தனிமைப்படுத்தி அவர்கள் சோதனைகளுக்குட்படுத்தப்படுவதுடன் அவர்களில் கொரோனா தொற்று உள்ளவர்கள் இனங்காணப்பட்டு அவர்களுடன் தொடர்புபட்டவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதனடிப்படையில் சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த ஒருவர் கொரனா தொற்று அடையாளப்படுத்தப்பட்டதுடன் பொத்துவில் பகுதியை சேர்ந்த இருவரும் இன்று அடையாளப்படுத்தப்பட்டனர்.
பொத்துவில் பகுதியை சேர்ந்தவர்கள் பேலியகொடையுடன் நேரடி தொடர்பு உடையவர்கள் எனவும் சாய்ந்தமருதில் அடையாளம் காணப்பட்டவர் பேலியகொட மீன்சந்தையுடன் தொடர்புபட்டு இனங்காணப்பட்டவருடன் பழகியவர் எனவும் சுகாதார பணிப்பாளர் தெரிவித்தார்.
இதுவரையில் திருகோணமலை மாவட்டத்தில் 10பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 28பேரும் கல்முனை பிராந்தியத்தில் 12பேரும் அம்பாறை பகுதியில் 03பேரும் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மூன்று மாவட்டங்களிலும் உள்ள பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை கடுமையான முறையில் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
0 Comments