Home » » நிறைவேற்று அதிகாரம் ஜனநாயக பண்புகளை குழிதோண்டிப் புதைக்குமா? விளக்கமளிக்கிறார் சட்டத்தரணி ஹாதி இஸ்மாயில்

நிறைவேற்று அதிகாரம் ஜனநாயக பண்புகளை குழிதோண்டிப் புதைக்குமா? விளக்கமளிக்கிறார் சட்டத்தரணி ஹாதி இஸ்மாயில்




நூருல் ஹுதா உமர்


நல்லாட்சி அரசாங்கத்தில் காணப்பட்ட குறைபாடுகளை பிரச்சாரமாக கொண்டு ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கத்தால்பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அரசியல் அமைப்பின் 20வது திருத்தச் சட்டத்தின் மூலம் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த பல ஜனநாயக உரிமைகளும் ஜனநாயக பண்புகளும் குழிதோண்டிப் புதைக்கப்படுகிறது என்ற கருத்து முன்வைக்ககப்படுகின்ற வேளையில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டு அனுபவித்து வந்த நிறைவேற்று அதிகாரங்களையே மீண்டும் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களும் கோரி நிற்கின்றார் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. 1978ம் ஆண்டின் அரசியலமைப்பினூடாக நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளாவே ஜெ.ஆர். ஜயவர்தன, ரணசிங்க பிரேமதாச, தி.பி. விஜேதுங்க, சந்திரிக்கா பண்டாரநாயக்கா, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் காணப்பட்டார்கள் என்ற விடயம் குறிப்பிடத்தக்கது என மாற்றத்திற்கான முன்னணியின் செயற்பாட்டாளர் சட்டத்தரணி ஹாதி இஸ்மாயில் தெரிவித்தார்.

20 வது திருத்த சட்டமூலத்தில் சிறுபான்மைக்கும் நாட்டுக்கும் உள்ள சாதக பாதக நிலைகளை ஆராயும் நிகழ்வொன்று நேற்று (05) மாலை மருதமுனையில் நடைபெற்றபோது அங்கு விளக்கமளித்து பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தனது உரையில்,

இவற்றிற்கு மேலதிகமாக புதிய அரசியல் அமைப்பு ஒன்று இன்னும் 6 மாத காலத்தில் முன்வைக்கப்படும் என்றும் அதற்கு நிபுணர்கள் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது என்ற பேச்சும் அரச தரப்பால் முன்வைக்கப்பட்டு அதனூடாகவே நாட்டின் இறையாண்மையைப் பாதுகாத்து பல்துறை சார்ந்த அபிவிருத்தியை மேற்கொள்ள முடியும் என்று வாதம் முன் வைக்கப்படுகிறது. ஒட்டுமொத்தத்தில் பார்க்கையில் 20வது திருத்தச் சட்டம் தொடர்பில்  அமைச்சர்களுக்கிடையில் போதியறிவு காணப்படாமையினால் இன்னும் பல சரத்துக்கள் சேர்க்கப்படும் என்றும் முன்னுக்குப்பின் முரணான  வெவ்வேறான கருத்துக்களும் தெரிவிக்கின்றனர்.

 நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினால் ஆணைப் பெண்ணாகவும்-பெண்ணை ஆணாகவும் மாற்ற முடியாது என ஜெ.ஆர். ஜயவர்தன கூறியது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று  சிறுபான்மையின கட்சிகள் ஒரு போதும் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்திற்கு கூட வந்துவிடக் கூடாது என்பதிலேயே கண்ணுங்கருத்துமாக நின்று அதனை நிறைவேற்றியிருந்தனர்.

20வது திருத்தச் சட்டத்தினூடாக மேற்கொள்ளப்படும் திருத்தங்களாக பின்வருவன கூறப்படுகின்றன.

  @ 19வது திருத்தச் சட்டத்தின் ஊடாக ஜனாதிபதிக்கு எதிராக அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்வதற்கான சந்தர்ப்பம் நீக்கப்படுகிறது.

  @ தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்படும் உத்தரவுகள் அல்லது சிறப்பம்சங்களை செயற்படுத்தத் தவறும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்வது தொடர்பில்  குறித்த ஆணைக் குழுவுக்கு இருந்த அதிகாரம்  நீக்கப்படுகிறது.

  @ பிரதமர் செயலகம் மற்றும் பொது நிறுவனங்களில் வேலை செய்யும் தணிக்கையாளர்களை அகற்றும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படுகிறது.

  @ இரண்டரை வருடம் முடிவடைந்த பின்னர் எந்த நேரத்திலும் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மீண்டும் வழங்கப்படுகிறது.

  @ இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட நபரொருவர் ஜனாதிபதித் தேர்தலில் அல்லது பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது.

  @ இரத்து செய்யப்பட்ட பல அவசர சட்டங்களை மீண்டும் கொண்டு வருவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படுகிறது.

  @ இலஞ்சம் ஊழல் போன்ற விடயங்களில் முறைப்பாடு ஒன்று இல்லாமலேயே அதனை விசாரணை செய்வதற்காக இலஞ்ச ஆணைக்குழுவிற்கிருந்த அதிகாரம் நீக்கப்படுகிறது.

  @ கணக்காய்வாளரை நியமிக்க தேவைப்படுத்தப்படும் தகுதி தராதரங்களுக்கப்பால் எவரையும் நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படுகிறது.

இவ்வாறான வாதப்பிரதி வாதங்களுக்கப்பால் நிறைவேற்று அதிகாரம் என்ற போர்வையில் சகல அதிகாரங்களும் தனி நபரிடம் குவிக்கப்பட்டு சிறுபான்மை இனங்களுக்கு எதிராக உரிமைகள் மீறப்படும் வகையில் செயற்படுத்தப்படக் கூடாது என்பதிலும், அரசியலமைப்பு உரிமைகளும் ஜனநாயக பண்புகளும் மீறப்படக் கூடாது, ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும், சட்டத்தின் முன் சகலரும் சமமாக மதிக்கப்பட்டு அவர்களது மத உரிமைகளை அனுபவிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்  என்பதிலேயும் சிறுபான்மையினர் கண்ணுங்கருத்துமாக இருக்க வேண்டியது காலத்தின் தேவையாகும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளின் ஆட்சிக் காலங்களில்தான் 1983ம் ஆண்டு ஜூலை கலவரம், தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை தொடர்ந்து புலிப் பயங்கரவாதம், முஸ்லிம்களுக்கு எதிராக மாவனல்லை கலவரம் அளுத்கமை கலவரம், ஜிந்தோட்டை கலவரம், கண்டி-திகன கலவரம் அதேபோன்று சஹ்ரானின் குண்டு வெடிப்பு சம்பவமும் நடந்தேறின. சிறுபான்மை இனங்களின் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட கட்சிகளின் தலைவர்கள் பின்வருவனவற்றை கருத்திற் கொண்டே எதிர்காலத்தில் செயற்பட வேண்டியுள்ளது.

ஜெ.ஆர். ஜயவர்த்தன நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி இலங்கை-இந்திய ஒப்பந்தம் செய்வதற்கு தேவையான தீர்மானத்தை மேற்கொண்டதுடன் ஆர். பிரேமதாசவின் எதிர்ப்புக்கும் சில அமைச்சர்களின் எதிர்ப்புக்கும் மத்தியிலும் இந்தியாவுடனான ஒப்பந்தம் (Indo-Lanka agreement) செய்வதற்கும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையையே பயன்படுத்தினார்.

ஆர். பிரேமதாசா நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தியே புலிப் பயங்கரவாதிகளை கொழும்பில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் வைத்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தீர்மானத்தினை மேற்கொண்டிருந்தார்.

இலங்கை-இந்திய ஒப்பந்தம் மூலம் இலங்கைக்கு வரவழைக்கப்பட்ட இந்தியப் படையினரை (Indian peace keeping forces) நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கு  நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி ஆர். பிரேமதாசா இந்தியாவுக்கு திரும்பி அனுப்பியிருந்தார்.

*  அதேபோன்று காத்தான்குடி பள்ளிவாசல்களில் புலிகளால்  சுடப்பட்ட வேளையில் விமானம் மூலம் படையினரை அனுப்பி அதற்கான முழுப் பாதுகாப்பையும் ஆர். பிரேமதாசா ஏற்படுத்தியிருந்தார்.

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக  தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் பிரேமதாசாவுடன் பல தரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு பாராளுமன்ற, மாகாணசபை தேர்தல்களுக்கான தெரிவு வெட்டுப்புள்ளி வீதத்தினை 12லிருந்து 5க்கு குறைப்பதற்கும், சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதித்துவம் அதிகரிப்பதற்கமான சந்தர்ப்பத்தை வழங்கியதும் நிறை வேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையாகும்.

*  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் காலத்தில் கண்டி தலதா மாளிகைக்கு பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலின் போது விரைந்து செயற்பட்டு உரிய பாதுகாப்பை வழங்கினார். அதேபோன்று மாவனல்லை நகரில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப் பட்ட பொழுது பாதுகாப்பதற்காக படையினரை பயன்படுத்துவதற்கும் நிறைவேற்று அதிகாரமே உதவியது.

*  மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் அளுத்கமையில் முஸ்லிம்களின் உடமைகள் அளிக்கப்பட்டு வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட போது வெளிநாட்டில் இருந்த மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உடனடியாக நாடு திரும்பி ஒரே இரவோடு வன் செயல்களை கட்டுப்படுத்த கட்டளையிட உதவியதும் இந்த நிறைவேற்று அதிகார முறைமையே.

இவ்வாறு நிறைவேற்று அதிகாரங்கள் பயன்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்கள் அவ்வாறே இருக்க 2015ல் நல்லாட்சி என்ற போர்வையில் நிறைவேற்று அதிகாரங்கள் 19வது திருத்தச் சட்டத்தின் மூலம்  ஜனாதிபதியிடமிருந்து குறைக்கப்பட்டு பிரதமருக்கு வழங்கப்பட்டிருந்த காலத்திலேயே கண்டி-திகன கலவரம் திட்டமிடப்பட்ட வகையில் முஸ்லிம்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்டது. இவ்வாறு நல்லாட்சியில் நிறைவேற்றதிகாரம் அங்கும் இங்குமாக பகிரப்பட்டிருந்த காலப்பகுதியிலேயே ஞானசார தேரரின் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டதுடன் முஸ்லீம்களின் பொருளாதாரம் அழிக்கப்பட்டு வியாபார ஸ்தலங்கள் தீக்கிரையாக்கப்பட்டு உயிர்கள் காவுகொள்ளப்பட்டது.

இவ்வாறான தொடர் செயற்பாடுகள் காரணமாக மக்களின் மனதில் ஏற்பட்ட வெறுப்பினால் யாருடைய கையில் பாதுகாப்பு சம்பந்தமான கட்டளையிடும் அதிகாரம்  இருக்கின்றது?  யார் முப்படைகளின் தளபதி? என்ற வினாக்கள்  எழுப்பப்பட்டது. இக்காலப் பகுதியிலேயே திகன கலவரம் ஆரம்பித்து பல்வேறு மாவட்டங்களுக்கும் வியாபித்து அம்பாரை வரை நீடித்தது என்பதை யாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.

*  குறித்த நல்லாட்சியில் பலம்பொருந்திய அமைச்சர்களாக முஸ்லிம் கட்சித் தலைவர்கள் இருந்தபோதிலும் அவர்களால் எதையும் சாதிக்க முடியாத நிலையும், எதிர்க்கட்சித் தலைவராக R சம்பந்தன் இருந்தும் எதனையும் பாராளுமன்றத்தில் கூற முடியாத அளவுக்கு காணப்பட்டது. இந் நல்லாட்சி காலத்திலேயே சஹ்ரானின் குண்டு வெடிப்பும் இடம்பெற்றது. இது தொடர்பில்  விசாரணைகளை மேற்கொள் வதற்கு ஆணைக்குழுவொன்றை நிறுவுவதிலேயே ஜனாதிபதி மைத்திரிக்கும் பிரதமர் ரணிலுக்கும் இடையில் இழுபறி நிலை காணப்பட்டது. நல்லாட்சி காலத்தில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் யாருக்கு அதிகாரம் கூடுதலாக இருக்கிறது என்ற போட்டியிலேயே காலத்தை கடத்தியதால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக்கருதி மக்கள் மாற்று அரசாங்கம் ஒன்றை தேடினர்.

சிறுபான்மைக் கட்சிகள் எதிர்க்கட்சியில் அமர்ந்து இருக்கிறோம் என்பதற்காக சமூகத்திற்கு நன்மை பயக்குமா? இல்லையா? என்பதை ஆராய்ந்து பார்க்காமல் திருத்தச் சட்டத்தை எதிர்க்க வேண்டியதுமில்லை. எனவே பல்லின சமூகம் வாழுகின்ற இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கின்ற ஒரு முறையாகவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை காணப்படுகிறது என விளக்கமளித்தார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |