நீர்கொழும்பு பல்லன்சேன பிரதேசத்தில் இளம் குற்றவாளிகளை தடுத்து வைக்கும் நிலையத்திற்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிசார்ட் பதியூதீன், அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையம் தற்போது தனிமைப்படுத்தல் நிலையமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதேவேளை தன்னை கைது செய்வதை தடுத்து உத்தரவிடுமாறு கோரி ரிசார்ட் பதியூதீன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ரீட் மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டதுடன் அதனை நவம்பர் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குமுதினி விக்ரமசிங்க மற்றும் சோபித ராஜகருண ஆகியோரின் அமர்வின் முன் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, மனுதாரை கைது செய்யுமாறு ஆலோசனை வழங்கும் அதிகாரம் சட்டமா அதிபருக்கு இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் தனது மனுதார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதால், இந்த மனுவை தொடர்ந்தும் முன்னெடுப்பதா இல்லையா என்பது தொடர்பான ஆலோசனை தனக்கு கிடைக்கவில்லை எனவும் சட்டத்தரணி கூறியுள்ளார்.
இதனையடுத்து மனு மீதான விசாரணைகளை நவம்பர் 6 ஆம் திகதி நடத்தலாம் என தீர்மானித்த நீதியரசர்கள், அன்றைய தினம் மனுதாரர் தரப்பின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.
ஆறு தினங்களாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் ரிசார்ட் பதியூதீனை குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் நேற்று அதிகாலை தெஹிவனையில் உள்ள தொடர்மாடி வீடமைப்புத் தொகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கைது செய்தனர்.
0 comments: