Home » » மாணவர்கள் மத்தியில் ஊடக கல்வியை மேம்படுத்துவதற்காக நாடு முழுவதிலும் 25 ஊடக பாடசாலைகளை அமைக்க திட்டம்!!

மாணவர்கள் மத்தியில் ஊடக கல்வியை மேம்படுத்துவதற்காக நாடு முழுவதிலும் 25 ஊடக பாடசாலைகளை அமைக்க திட்டம்!!

 


நாட்டின் பாடசாலை மாணவர்களின் ஊடக கல்வியை மேம்படுத்துவதற்காக மாவட்டங்களை கேந்திரமாகக் கொண்டு 25 வெகுஜன ஊடக பாடசாலைகள் நாடு முழுவதிலும் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.


கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் திருமதி. சாரா ஹல்டன் (Sarah Hulton) மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சில் இன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பின் போது வெகுஜன ஊடகத்துறை குறித்த பல விடயங்கள் தொடர்பில் அமைச்சர் தலைமையிலான குழுவினர் இவருடன் விரிவாக கலந்துரையாடினர்.

பாடசாலைக் கல்வியின் போது மாணவர்களுக்கு வெகுஜன ஊடகம் தொடர்பான தெளிவு மற்றும் ஊடக நெறிமுறைகள் தொடர்பாக உரிய கல்வியை வழங்க வேண்டும் என்றும் இதற்காக மாவட்ட மட்டத்தில் ஊடக பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்படுவதாகவும் அமைச்சர் இதன்போது கூறினார்.

இதன் முதற்கட்ட நடவடிக்கையாக வடக்கை கேந்திரமாகக் கொண்டு யாழ் மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கு ஊடக கல்வி அறிவை மேம்படுத்தும் பணி மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாகவும் இதற்கமைவாக இந்த வேலைத்திட்டத்தை நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்படவிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தகவல்களை வழங்கும் பொழுது சரியான வகையிலும் துரிதமாகவும் வழங்குவதற்காக அரசாங்க தகவல் திணைக்களம் குறுஞ்செய்தி சேவையைப் போன்று சமூக ஊடகங்கள் ஊடாக செய்திகளை வழங்கும் புதிய வேலைத்திட்டம் ஒன்றையும் ஆரம்பித்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

இதற்கு மேலதிகமாக ஏனைய ஊடக நிறுவனங்களை தொடர்புபடுத்தி இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதாகவும் அமைச்சர் கூறினார். ஊடக சுதந்திரத்திற்கு எந்த வகையிலும் தடையை மேற்கொள்வதில்லை என்றும் இருப்பினும் நெறிமுறைகளை பாதுகாத்து சரியான பொறுப்புடன் கையாளப்படவேண்டும் என்றும் இதற்காக நாட்டில் முழுமையான ஊடக சுதந்திரம் வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் ஜெகத் பி. விஜயவீர, அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ, அமைச்சின் பிரத்தியேக செயலாளர் ரமித் ரம்புக்வெல்ல, இணைப்பு செயலாளர் பிரிக்கேடியர் ஜெ.பி.எ.ஜயவர்தன ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |