தமிழ் மக்களுக்கு விசேடமாக கேடான 20ம் திருத்தத்திற்கு ஆதரவாக, தமிழ் மக்களின் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் வாக்களிக்கக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான வியாழேந்திரன் மற்றும் பிள்ளையான ஆகிய எவரும் வாக்களிக்கக்கூடாது என்றும், அவர்கள் வாக்களிக்ககூடாது என்பதை அவர்களுக்கு வாக்களித்த மக்கள் கூற வேண்டும் என்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
டக்ளஸ் தேவானந்தா மற்றம் அங்கஜன் இராமநாதன் ஆகியோருக்கும் வடக்கில் தான் இதனைக் கூறியுள்ளதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 20வது திருத்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் முக்கியத்துவம் கொடுப்பதைவிட மக்களின் இன்றைய நிலைமைக்கு முகங்கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதுமே அரசாங்கத்தின் பாரிய ஒரு பொறுப்பாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை மக்கள் பக்கம் இருந்து தீர்மானிக்க வேண்டும். 20வது திருத்த சட்டத்திற்குள் தங்களை கட்டுப்படுத்தி கொள்ளாமல் நாட்டின் சூழ்நிலைக்கு ஏற்ப அரசாங்கம் செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இன்று இலங்கையில் கொரோனா தொற்று மிகவும் வேகமாக பரவி வருகின்றது. இந்தநிலையில் அரசாங்கம் ஏனைய விடயங்களுக்கு முன்னுரிமை வழங்குவதைவிட கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கே முக்கியத்துவம் வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி ராதாகிருஸ்ணன் கோரியுள்ளார்
0 comments: