Home » » மட்டக்களப்பில் நடைபெற்ற படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!!

மட்டக்களப்பில் நடைபெற்ற படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!!

 


படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று திங்கள் கிழமை(2020.10.19) மட்டக்களப்பு ஊடக அமையத்தில் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக இடம்பெற்றது.


2000ஆம் ஒக்ரோபர் 19ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் கச்சேரியடிப் பகுதியில், உள்ள தனது வீட்டில் ஊடகங்களுக்கு செய்தி எழுதிக் கொண்டிருந்த ஊடகவியலாளர் ம.நிமலராஜன், ஆயுததாரிகளால் துப்பாக்கியால் சுட்டும், குண்டு வீசியும் படுகொலை செய்யப்பட்டார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று மதியம் குறித்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

நிமலராஜனின் உருவப்படத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகவியலாளருமான பா.அரியநேந்திரன் அவர்கள் மலர் மாலை அணிவித்து அஞ்சலி சுடரேற்றி வைத்தார். அதனை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட ஊடக அமையத்தின் தலைவரான திரு.கிருஷ்ணகுமார் அவர்களும், செயலாளர், மாற்று பொருளாளர், ஏனைய ஊடகவியலாளர்களும் அஞ்சலி சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தினார்கள்.

இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் அவர்கள் கடந்த 2000 ஆண்டு யுத்தகாலத்தில் பல ஊடகங்கவியலாளர்கள் உண்மை செய்திகளை வெளியிட முடியாத காலத்தில் மறைந்த ஊடகவியலாளரான நிமலராஜன் அவர்கள் உண்மையான செய்திகளை ஊடகங்களுக்கு வழங்கி கொண்டிருந்தவர் ஆவார், இவர் கொலை செய்யப்பட்டு 20 ஆண்டுகள் ஆகியும் நீதி இன்னும் கிடைக்காமை உள்ளதை சுட்டிக்காட்டியதுடன் தற்போதும் ஊடகவியலாளர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் இடம்பெறுவதையும் தனது கருத்துக்கள் வாயிலாக தெரிவித்தார். 
 
ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 2000ஆம் ஆண்டு, ஒக்ரோபர் 19ஆம் திகதி இரவு 10 மணியளவில் யாழ்ப்பாணம் நகரின் உயர் பாதுகாப்பு வலயப் பகுதியாக அப்போது இருந்த, கச்சேரியடிப் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து அவர் படுகொலை செய்யப்பட்டார்.

அன்று மாலையில், நாகர்கோவிலில் விமானப்படை உலங்குவானூர்தி விடுதலைப் புலிகளால் சுட்டுவீழ்த்தப்பட்ட செய்தியை பிபிசி தமிழோசைக்கு தொலைபேசி மூலம் வழங்கிவிட்டு, வீரகேசரி நாளிதழுக்காக தொலைநகலில் அனுப்புவதற்காக அந்தச் செய்தியை எழுதிக் கொண்டிருந்த போதே, அவரது வீட்டுக்குள் நுழைந்த ஆயுததாரிகள் அவரைச் சுட்டுப்படுகொலை செய்தனர்.

அதையடுத்து, அவரது வீட்டுக்குள் கைக்குண்டை வீசிவிட்டுச் சென்றதில், நிமலராஜனின் தந்தை, தாய், மருமகன் உள்ளிட்டோர் படுகாயமடைந்தனர்.

பிபிசி தமிழோசை, ஹிரு எவ்எம், சூனியன் எவ்எம் வானொலிகளுக்கும், வீரகேசரி, ராவய, ஆதவன் இதழ்களுக்கும் செய்தியாளராளராக யாழ்ப்பாணத்தில் இருந்து பணியாற்றியிருந்தார் நிமலராஜன்.

மயில்வாகனம் நிமலராஜன் ஈவிரக்கமின்றிப் படுகொலை செய்யப்பட்டு, 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

ஆனாலும், இந்தப் படுகொலை குறித்த முறையான விசாரணைகள் நடத்தப்படவோ, குற்றவாளிகள் தண்டிக்கப்படவோ இல்லை.

மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை குறித்த விசாரணைகளின் மீது அரசு கடைப்பிடித்த மெத்தனப்போக்கு, பிற்காலத்தில், இன்னும் தமிழ் ஊடகவியலாளர்கள் பலரும் படுகொலை செய்யப்படுவதற்கு ஊக்குவிப்பாக அமைந்திருந்தது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |