Home » , » சொல்லியடித்த ராஜபக்ச தரப்பு! சாதித்துக் காட்டிய ஜனாதிபதி கோட்டாபய - நிறைவேறியது 20வது திருத்தச் சட்டம்

சொல்லியடித்த ராஜபக்ச தரப்பு! சாதித்துக் காட்டிய ஜனாதிபதி கோட்டாபய - நிறைவேறியது 20வது திருத்தச் சட்டம்

 


ஸ்ரீலங்கா அரசாங்கம் கூறி வந்தது போலவே 20ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தின் இரண்டாவது வாசிப்பு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 156 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

எதிராக 65 உறுப்பினர்கள் வாக்களித்தனர். பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 20ஆவது திருத்தத்தை ஆதரித்து வாக்களித்துள்ளனர்.

கடந்த ஜனாதிபதி, பொதுத் தேர்தலின் போது ஸ்ரீலங்காவில் ஆட்சி மாற்றம் மட்டுமல்லாது அரசியலமைப்பிலும் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்று பிரசாரங்களை மேற்கொண்டு அறுதிப் பெரும்பான்மை பலத்தை பெற்றது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி.

பங்காளிக் கட்சிகளின் ஆசனங்களோடு பெரும்பான்மையாக ஆட்சியமைத்த ராஜபக்ச தரப்பினர், 20ஆவது திருத்தச் சட்டத்தை சர்வஜன வாக்கெடுப்பின்றி நிறைவேற்றுவோம் என்றும் சூளுரைத்திருந்தனர்.

இந்நிலையில், நேற்றைய தினமும் இன்றைய தினமும் 20ஆவது திருத்தச் சட்டம் மீதான விவாதங்கள் இடம்பெற்ற நிலையில் சற்று முன்னர் அதன் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது பெரும்பான்மை வாக்குகளால் 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக ஆளும் தரப்பிலிருந்த பங்காளிக் கட்சிகள் 20ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள இரட்டைக் குடியுரிமை தொடர்பில் அதிருப்தி வெளியிட்டிருந்தனர். எனினும் நேற்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடனான சந்திப்பின் பின்னர் 20க்கு ஆதரவாக வாக்களிப்பது என்று முடிவெடுத்ததாக இன்று அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், 20ஆவது திருத்தச் சட்டமானது தனி நபர் ஒருவரிடம் அதிகாரம் குவிவதாகவும், சர்வாதிகாரப் போக்குக்கு இது வழிவகுக்கும் என்றும், ஜனநாயகத்திற்கும், மனிதவுரிமைகளுக்கும் அடிக்கப்பட்ட சாவுமணி இது என்று எதிர்க் கட்சிகள் நாடாளுமன்றத்தில் விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், இரட்டைக் குடியுரிமை தொடர்பில் பௌத்த சங்கத்தினரும் தமது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார்கள் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, இரட்டைக் குடியுரிமை தொடர்பில் மாற்றங்களை கொண்டுவருவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடன்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |