சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த சட்டத்தில் சற்று முன்னர் கையெழுத்திட்டுள்ளார்.
அதன்படி இன்று முதல் 20 ஆவது திருத்த சட்டம் அமுல்படுத்தப்படும்.
-
20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் கடந்த 21, 22 ஆகிய தினங்களில் இடம்பெற்றதையடுத்து 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது.
இதன்போது, திருத்த சட்டம் மீதான இரண்டாவது வாசிப்பு 2/3 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதுடன், ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் வழங்கப்பட்டன.
அதனை அடுத்து, குழு நிலையில் இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான சரத்து மீது எதிர்க்கட்சியினரால் வாக்கெடுப்பு கோரப்பட்டதுடன் அதுவும் 2/3 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இங்கு ஆதரவாக 157 வாக்குகள் கிடைக்கப்பெற்றமை சிறப்பம்சமாகும்.
குழு நிலையின்போது முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் உட்பட 20 ஆவது திருத்தச் சட்ட மூலம் மீதான மூன்றாவது வாசிப்பும் 2/3 பெரும்பான்மை வாக்குகளால் மீண்டும் நிறைவேற்றப்பட்டது.
இதன்போது ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் வழங்கப்பட்டன.
அதற்கமைய, 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை வாக்குகளால் கடந்த 22 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments