காத்தான்குடி லத்தீப்)மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் செயல்பட்டுவந்த பாரிய இறால் பண்ணை கைவிடப்பட்டதையடுத்து 2014 ஆம் ஆண்டு கடற்தொழில் நீரியல் வள அமைச்சு சமர்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைய எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இப்பகுதியில் சுமார் 202 .343 கெக்டயர் அரச காணியில் பரந்த நீர்வாழ் உயிரின வளர்ப்பு செயல்பாட்டுக்காக முதலீட்டாளர்களுக்கு அரச காணி அபிவிருத்தி சட்டத்தின் கீழ் காணிகளை பகிர்ந்து அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
2019ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் விஷேட கூட்டத்திலும் இந்த விஷேட திட்டத்துக்கான அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது இந்த விசேட திட்டத்தை அமுல் நடத்துவது பற்றிய ஏனைய நடவடிக்கைகள் மற்றும் சவால்கள் பற்றி ஆராய்வதற்கான விசேட கூட்டம் இன்று (26.10.2020) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கே.கருணாகரன், இராசமாணிக்கம் சாணக்கியன், தேசிய கரையோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு அதிகார சபையின் கிழக்கு மாகாண உதவிப் பணிப்பாளர் எஸ். ரவிக்குமார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி சத்யகௌரி தினேஷ், கொக்கட்டிச் சோலை பிரதேச சபை தவிசாளர் எஸ்.புஸ்பலிங்கம் மற்றும் இத்திட்டம் சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்களின் அதிகாரிகள் பலரும் இங்கு பிரசன்னமாகியிருந்தனர்.
இந்த விசேட கூட்டத்தில் வயல் நிலங்கள் பாதிக்காத வகையிலும் மற்றும் இத்திட்டத்தின் ஊடாக எதிர்நோக்கும் ஏனைய சவால்கள் பற்றி துறை சார்ந்த நிபுணர்கள் மட்டத் தில் ஆராய்வது என்றும் இதேபோல இப்பிரதேசத் தில் இத்திட்டத்தின் ஊடாக மக்களுக்கு பாதிப்பின்மை பற்றி மக்களுக்கு தெளிவூட்டுவது எனவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
இதனடிப்படையில் துறை சார்ந்த நிபுணர்களின் கருத்துக்களை அறிந்து கொள்ளும் விசேட கூட்டம் மாவட்ட செயலகத்தில் நாளை மறுதினம் நடத்துவது என்றும் இதனைத்தொடர்ந்து சமூக மட்ட விழிப்புணர்வு கருத்தரங்குகளை பட்டிப்பளை பிரதேச செயலக மட்டத்தில் நடத்துவது என்றும் இந்த விசேட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது .
0 Comments