இலங்கையில் கொரோனா தொற்றினால் 14 ஆவது உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குளியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 50 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொரொனா தடுப்பு தேசிய செயலணியின் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க வர்த்தக வலயத்தில் 22 பேரும், பேலியகொடை மீன் சந்தை வளாகத்தில் 06 பேரும், அவர்களுடன் தொடர்புடைய 22 பேருமே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 28 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 60 பேர் குணமடைந்த நிலையில் இன்று தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 561 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 2 ஆயிரத்து 454 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், 341 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதேவேளை, நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 8 ஆயிரத்து 777 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிவதற்காக இதுவரை 4 இலட்சத்து 15 ஆயிரத்து 243 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிட்டுள்ளது.
0 Comments