இலங்கை தமிழர் பூமி எனவும் இந்த மண்ணின் பூர்வீக குடிகள் தமிழர்கள் எனவும், தமிழ் மொழி இந்த நாட்டில் பிரதான மொழி எனவும் பாராளுமன்ற உறுப்பினர் விக்கினேஸ்வரன் சபையில் முன்வைத்த கருத்துக்கள் தவறானது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார சபையில் தெரிவித்தார்.
மேலும் விக்கினேஸ்வரனின் கருத்தை ஹன்சார்ட்டில் இருந்து நீக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் கூடியது.
இதன்போது மேலும் தெரிவித்த அவர்,
பாராளுமன்றத்தில் நாம் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளும் போது இந்த நாட்டில் இன்னொரு இராச்சியத்தை உருவாக்குவதோ அல்லது அதற்கு துணை போவதோ, நிதி மூலமாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவ மாட்டோம் என வாக்குறுதியளித்தோம்.
யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து அனைவரும் இலங்கையர்கள் என்ற எண்ணப்பாட்டிற்கு சகலரும் ஒன்றிணைய நினைக்கும் இந்த நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் விக்கினேஸ்வரன் நேற்றைய தினம் சபையில் முன்வைத்த கருத்துக்கள் மிகவும் மோசமானது.
தமிழ் மொழி இந்த நாட்டில் பிரதான மொழி எனவும், இந்த நாட்டின் பூர்வீக குடிகளின் மொழி எனவும் பாராளுமன்றத்தில் கூறினார்.
இந்த கருத்துக்கள் பாராளுமன்றத்தில் ஹன்சார்ட் பதிவிற்கு சென்றுள்ளது. இது தவறான கருத்தாகும். இந்த பூமி யாருடையது, யார் பூர்வீக குடிகள் என்பது குறித்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலைப்பாடுகள் இருக்க முடியும்.
ஆனால் அந்த நிலைப்பாடுகள் இலங்கை பாராளுமன்றத்தில் ஹன்சார்ட் பதிவிற்கு செல்ல முடியாது. எனவே விக்கினேஸ்வரனின் கருத்தை ஹன்சார்ட்டில் இருந்து நீக்க வேண்டும் என சபாநாயகரிடம் கேட்டுக்கொள்கிறேன் என்றார் தான் இது குறித்து ஆராய்ந்து பார்ப்பதாக சபாநாயகர் கூறியுள்ளார்.
0 comments: