Home » » டக்ளசுக்கு அமைச்சர் பதவி வழங்கியவர்கள் அதாஉல்லாவுக்கு ஏன் வழங்கவில்லை ?

டக்ளசுக்கு அமைச்சர் பதவி வழங்கியவர்கள் அதாஉல்லாவுக்கு ஏன் வழங்கவில்லை ?

 

சாய்ந்தமருது முகம்மத் இக்பால்)

2015 இல் மகிந்த ராஜபக்சவுக்கு மிகவும் இக்கட்டான அரசியல் நெருக்கடி ஏற்பட்டபோது டக்லஸ் தேவானந்தா, அதாஉல்லாஹ், ஆகியோர் அவருக்கு பக்கபலமாக இருந்தார்கள்.

தன்னுடன் இருந்த அனைத்து முஸ்லிம் தலைவர்களும் தன்னை கைவிட்டுச்சென்ற சமயத்திலும் தனக்கு பக்கபலமாக இருந்த ஒரேயொரு முஸ்லிம் தலைவர் அதாஉல்லாஹ் என்ற நன்றியுணர்வு மஹிந்த ராஜபக்சவுக்கு உள்ளது.

அவ்வாறிருந்தும் டக்ளசுக்கு அமைச்சு பதவி வழங்கமுடியும் என்றால் ஏன் அதாஉல்லாவுக்கு வழங்கமுடியாது என்பதுதான் இன்றைய கேள்வியாகும்.

டக்ளசும், அதாஉல்லாஹ்வும் பொதுஜன பெரமுனவுக்கு அப்பால் வேறு கட்சியை சேர்ந்தவர்கள். அத்துடன் இவர்கள் இருவரும் “மொட்டு” சின்னத்தில் போட்டியிடாமல் பிரிந்துசென்று அவர்களது சொந்த கட்சியில் போட்டியிட்டார்கள்.

அதாஉல்லாஹ்வுக்கு அமைச்சர் பதவி வழங்குவதற்கு எதிராக பலரும் எதிர்ப்பு தெரிவித்ததுபோன்று டக்லஸ் தேவானந்தாவுக்கு எதிராக எவரும் குறுக்கே இருக்கவில்லை. அதனால் தமிழர்கள் சார்பாக டக்ளசுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

யுத்தம் முடிவுற்றதன் பின்பு சிங்கள இனவாதிகளின் பார்வை முஸ்லிம்கள் மீது திரும்பியது. இவ்வாறான இனவாதிகளுக்கு ராஜபக்ச அணியினர் அடைக்களம் வழங்கியதுடன் தென்னிலங்கையில் முஸ்லிம்களுக்கெதிரான இனவாத பிரச்சாரத்தின் மூலமாகவே மீண்டும் ஆட்சியை கைப்பேற்றினார்கள் என்பது இரகசியமல்ல.

இந்தநிலையில் இன்று அமையப்பெற்ற அமைச்சரவையில் முஸ்லிம்கள் யாரையும் அமைச்சர்களாக நியமிக்கக்கூடாது என்பதில் தென்னிலங்கை இனவாதிகள் மிகவும் விழிப்பாக இருந்தார்கள். ஆனாலும் அத்தனை எதிர்ப்புக்களையும் தாண்டி சட்டத்தரணி அலிசப்ரி அவர்களுக்கு நீதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

பொதுஜன பெரமுனவின் முஸ்லிம் பிரிவு தலைவர் என்றவகையில் அலிசப்ரிக்கு அமைச்சர் பதவி வளங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்த இனவாதிகளை சமாளித்தது போன்று அதாஉல்லாஹ்வுக்கு எதிரான எதிர்ப்புக்களை ராஜபக்சவினரால் சமாளிக்க முடியவில்லை அல்லது சமாளிப்பதற்கு கால அவகாசம் போதவில்லை.

அதாவது அலிசப்ரியை இனவாதிகள் மட்டுமே எதிர்த்தார்கள். ஆனால் அதாஉல்லாஹ்வுக்கு எதிராக இனவாதிகளும், அலிசப்ரி தலைமையிலான பொதுஜன பெரமுனவின் முஸ்லிம் பிரிவினரும், மற்றும் அம்பாறையில் பொதுஜன பெரமுன கட்சி சார்பாக வெற்றிபெற்ற மூன்று சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

சுருக்கமாக கூறப்போனால் கல்முனை தொகுதி தேர்தல் களத்தில் தங்களது பொதுஜன பெரமுன கட்சிக்கு எதிராக செயல்பட்ட அதாஉல்லாஹ்வுக்கு அமைச்சர் பதவி வழங்ககூடாது என்பது அக்கட்சியில் உள்ள பலரது அபிப்பிராயமாகும்.

மகிந்த ராஜபக்சவை பொறுத்தவரையில் நன்றி உணர்வுள்ளவர் மட்டுமல்லாது பழுத்த அரசியல்வாதி. அனைவரையும் சமாளித்து செயல்படும் ஆளுமையுடையவர். தனக்கு இக்கட்டான நிலைமையில் கைகொடுத்த அதாஉல்லாஹ்வை அவர் கைவிடமாட்டார்.

தனது கட்சியில் அதாஉல்லாஹ்வுக்கு எதிரான சக்திகளை சமாளிப்பதற்கு மஹிந்தவுக்கு கால அவகாசம் தேவை. அவ்வாறு மஹிந்தவின் முயற்சி வெற்றியளித்தால் சில நாட்கள் சென்றபின்பு அதாஉல்லாஹ்வுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம்.

அவ்வாறு பிரதமர் மஹிந்தவின் முயற்சி வெற்றியளிக்காவிட்டால், அபிவிருத்திக்காக அமைச்சரையும்விட அதிகமான நிதி ஒதுக்கீடுகளும், ஏனைய அதிகாரங்களும், சலுகைகளும் பாராளுமன்ற உறுப்பினர் அதாஉல்லாஹ்வுக்கு வழங்கப்படலாம்.

எது எப்படி இருப்பினும், ஐந்து வருடங்கள் அதிகார பட்டினி கிடந்த அதாஉல்லாஹ் ஆதரவாளர்கள், இறைவனை மறந்து செய்துகொண்ட கற்பனையினால் ஏற்பட்ட விபத்து என்பதுதான் இந்த கட்டுரையாளரின் நிலைப்பாடாகும்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |