Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

2 ஆம் கட்ட தாக்குதலுக்கு தயாராக இருந்த சாரா குறித்து அதிர்ச்சி தகவல்- குற்றத் தடுப்புப் பிரிவு

இலங்கையில் 2 ஆம் கட்டத் தாக்குதலை நடத்துவதற்கு தயாராக இருந்த மகேந்திரன் புலச்தினி ( சாரா) என்ற பெண் இறக்கவில்லை எனவும் அவர் தப்பிச்சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கே இவ்விடயம் தொடர்பாக இரகசிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. குறித்த தகவலுக்கமைய கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு விசாரணையை முன்னெடுத்து வருகிறது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் சாராவின் சிறிய தந்தை மற்றும் அம்பாறை உப கராஜின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அபூபக்கர் ஆகியோரையே கைது செய்து குற்றத் தடுப்பு பிரிவு விசாரணையை முன்னெடுத்துள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து, 2 ஆம் கட்ட தாக்குதலுக்கு தயாராகி இருந்ததாக கூறப்படும் சஹ்ரானின் பெற்றோர், சகோதரர்கள் உள்ளிட்ட குழு கல்முனை – சாய்ந்தமருது பகுதியில் கடந்த 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி வீடொன்றுக்குள் குண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்துகொண்டது.

இந்த குழுவில் நீர்கொழும்பு – கட்டுவாபிட்டிய தேவலய குண்டுதாரியின் மனைவியான சாராவும் இருந்ததாக கூறப்பட்டபோதிலும் அவர் இறந்தமைக்கான எந்த தடயங்களும் இதுவரை கண்டறியப்படவில்லை.

இந்நிலையிலேயே சாய்ந்தமருது வீட்டில் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னரேயே சாரா அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக நம்பப்படும் நிலையிலேயே கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு விசாரணையை தற்போது ஆரம்பித்துள்ளது.

குறித்த விசாரணையின் ஆரம்பகட்டமாகவே பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவரும், சாராவின் சிறிய தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடந்த காலப்பகுதியில் குறித்த பொலிஸ் அதிகாரி களுவாஞ்சிக் குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியுள்ளார்.மேலும் இவர் சாய்ந்தமருது பகுதிக்கு அடிக்கடி விஜயம் மேற்கொண்டுள்ளமை தொடர்பாகவும் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த பொலிஸ் அதிகாரி,சாரா தப்பிச் செல்ல உதவினாரா என்பதை அறியவே அவருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றத் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments