Home » » பொறுத்திருந்து பாருங்கள் இது எதிர்காலத்தில் நிகழும் -மங்கள சூளுரை

பொறுத்திருந்து பாருங்கள் இது எதிர்காலத்தில் நிகழும் -மங்கள சூளுரை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இந்த ஆட்சியில் தமிழ், முஸ்லிம் மக்கள் அச்சமான நிலையில் உள்ளார்கள். சட்ட ஆட்சி, ஜனநாயகம் என்று அனைத்துமே கேள்விக்குறியாகியுள்ளன" என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்..
இலங்கையின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
"ஜனாதிபதியாகப் பதவியேற்ற கோட்டாபய ராஜபக்ச குறுகிய காலத்தில் நாட்டில் ஏற்படுத்திய அழிவுகள், ஐக்கிய தேசியக் கட்சியின் பிளவுகள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொறுப்பற்ற தன்மை ஆகிய காரணங்களினாலேயே நாடாளுமன்றத் தேர்தல் போட்டியிலிருந்து விலகினேன்.
ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்த நடுத்தர மக்கள், அவர் எந்த நோக்கத்தில் செல்கின்றார் என்பதை நன்குணர்ந்து சிந்திக்க ஆரம்பித்துவிட்டனர். கடும்போக்கு இனவாதிகளின் ஆர்ப்பரிப்பும் தலைதூக்கிவிட்டது. நாடு இராணுவத்தின் பிடிக்குள் சென்று கொண்டிருக்கின்றது. வீழ்ந்திருந்த பொருளாதாரம் கொரோனா வைரஸால் மேலும் மோசமான நிலையை அடைந்துள்ளது. இவ்வாறான போக்கானது நாம் படிப்படியாக முன்னகர்த்திக்கொண்டிருந்த நாட்டை மீண்டும் பாதாளத்துக்குள் தள்ளிவிட்டுள்ளது.
கோட்டாபயவின் இந்த ஆட்சியில் தமிழ், முஸ்லிம் மக்கள் அச்சமான நிலையில் உள்ளார்கள். சட்ட ஆட்சி, ஜனநாயகம் என்று அனைத்துமே கேள்விக்குறியாகியுள்ளன.
இவ்விதமான நிலைமைகளுக்கு எதிராக நிச்சயமாக வலுவான மக்கள் எழுச்சி ஏற்படும். அந்தச் சக்திக்கு மேலும் வலுச்சேர்க்க முற்போக்கான - ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைத்துத் தரப்புக்களையும் இன, மத, மொழி பேதமின்றி ஒன்றிணைக்க வேண்டும். அதுவே இந்த நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அடிப்படையாக அமையும். பொறுத்திருந்து பாருங்கள். இது எதிர்காலத்தில் நிகழும்" - என்றார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |