தெற்கு பசிபிக்கில் தனியாக உள்ள நியூஸிலாந்தின் இட அமைப்புதான் மற்ற நாடுகளில் தொற்றின் வேகத்தைப் புரிந்துகொள்ள நேரமளித்தது. பிரதமர் ஜெசிந்தா அரசும் சரியாக முடிவெடுத்து, மிகவும் சீக்கிரமே ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது, தொற்றைக் குறைத்தது.
நியூஸிலாந்து சுகாதார அதிகாரிகள் இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, அந்நாடு கொரோனாவை முழுவதுமாக ஒழித்துவிட்டது. கடைசியாக நோய்தொற்றுக்கு உள்ளானவரும் குணமடைந்துவிட்டார். அவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டு 17 நாள்கள் ஆகிய நிலையில், அவர் இப்போது குணமடைந்துள்ளார். 17 நாள்களுக்கு முன் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட போது 40,000 பேர் பரிசோதிக்கப்பட்டிருந்தனர். அவருக்குப் பிறகு, தற்போது யாருக்கும் தொற்று இல்லை. கடந்த பிப்ரவரியிலிருந்து முதல்முறையாகத் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை பூஜ்ஜியத்தைத் தொட்டுள்ளது.
அந்நாட்டின் எல்லைகளுக்குள் மற்ற நாட்டவர்களுக்கு தற்போது வரை முற்றிலும் அனுமதியில்லை. நியூஸிலாந்து குடிமக்களுக்கு மட்டும் சில விதிவிலக்குகள் உள்ளன. எனினும் மறுபடியும் கொரோனா தொற்று வருவதற்கு வாய்ப்புள்ளது என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சுகாதாரத் துறையின் நிர்வாக இயக்குநரான ஆஷ்லி புலூம்ஃபீல்டு, `பிப்ரவரி 28 -க்குப் பிறகு முதல்முறையாக தொற்று அற்ற நிலையை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் முன்பு கூறியதுபோல கோவிட்-19ஐ எதிர்த்து நிலவும் இந்த விழிப்புணர்வு, இதேபோல் தொடரவேண்டியது அவசியம்" என்றார்.
இதைப்பற்றி நிபுணர்கள் கூறும்போது, ``எண்ணற்ற காரணிகளின் உதவியோடுதான் 5 மில்லியன் மக்களைக் கொண்ட இந்நாடு கொரோனாவை ஒழித்துள்ளது. தெற்கு பசிபிக்கில் தனியாக உள்ள நியூஸிலாந்தின் இட அமைப்புதான் மற்ற நாடுகளில் தொற்றின் வேகத்தைப் புரிந்துகொள்ள நேரமளித்தது. பிரதமர் ஜெசிந்தா அரசும் சரியாக முடிவெடுத்து மிகவும் சீக்கிரமே ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது, தொற்றைக் குறைத்தது" என்றனர். நியூஸிலாந்தில் 1,500 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு அதில் 22 பேர் உயிரிழந்தனர்.
இந்த வைரஸை அந்நாடு விரட்டியிருந்தாலும், அது பொருளாதார தாக்கத்தை நிறுத்தப்போவதில்லை என்று கூறப்படுகிறது. ஆயிரக்கணக்கானோர் அவர்களது வேலையை இழந்துள்ளனர். அந்நாட்டு பொருளாதரத்தில் 10% பங்களிக்கும் சுற்றுலாத் துறை மிகவும் சரிந்துள்ளது. எனினும், இந்நாளை நியூஸிலாந்து மக்கள் கொண்டாடுகின்றனர்.
பிரதமர் ஜெசிந்தா அர்டர் கூறுகையில், ``நான் இன்று காலையில் கொரோனா தொற்று முற்றிலும் குறைந்துவிட்ட செய்தியை கேட்டவுடன் மகிழ்ச்சியில் என் 2 வயது மகள் முன் வீட்டில் நடனமாடினேன். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் எனது சந்தோஷத்தில் கலந்து கொண்டாள்" என்றார் மகிழ்ச்சியாக.
இந்த அறிவிப்பு அம்மக்களை பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. அங்கு நிறைய தடைகள் நீக்கப்பட்டுவிட்டன. மீண்டும் விளையாட்டு அரங்குகளைத் திறந்து, விமான இருக்கை அமைப்பைக் கூட்டி, பொதுக்கூட்டங்களுக்கு வரவேற்று, பழைய நிலைக்கு திரும்பவிருக்கும் நியூஸிலாந்து, உலக அளவில் இவ்வளவிற்கு தடைகளைத் தகர்த்த முதல் நாடு என்ற பெருமைக்கும் உரியது. எனினும் தொற்றுக்கு இன்னும் 5% வாய்ப்பு உள்ளதென்பதால், சில முக்கியமான கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.
0 comments: