Home » » தமிழர்களை தேர்தலில் ஏமாற்றவே கூட்டமைப்பு மகிந்தவை சந்தித்தது-சிவசக்தி ஆனந்தன்

தமிழர்களை தேர்தலில் ஏமாற்றவே கூட்டமைப்பு மகிந்தவை சந்தித்தது-சிவசக்தி ஆனந்தன்



பொதுத்தேர்தலில் மகிந்த வாக்குறுதி அளித்ததாக தமிழ் மக்கள் மத்தியில் பொய்ப்பரப்புரை செய்து வாக்குகளை அறுவடையாக்கி தமது அரசியல் இருப்புக்களை தக்கவைப்பதற்காகவே பிரதமர் மகிந்தவின் அழைப்பினை கூட்டமைப்பு ஏற்றதோடு தனிப்பட்ட சந்திப்பிலும் ஈடுபட்டது என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியிலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவ் செவ்வியில் மேலும் தெரிவித்துள்ளாவது.

கேள்வி:-தமிழர் தாயகத்தில் கொரோனா தொற்று பராமரிப்பு எவ்வாறுள்ளது?

பதில்:- தமிழர் தாயகத்தினைப் பொறுத்தவரையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக காணப்படுகின்றது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மதபோகருடன் தொடர்புபட்டவர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் வெளிமாவட்டங்களிலிருந்து கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை தமிழர் தாயகத்தில் தனிமைப்படுத்தல் முகாம்களை அமைத்து தங்க வைத்துள்ளனர். ஆரம்பத்தில் படையினரின் முகாம்களிற்குள் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் தற்போது பாடசாலைகள் மற்றும் பொதுக்கட்டடங்களில் தங்கவைப்படுகின்றார்கள். இது மிகவும் ஆபத்தானதொன்றாகும்.

அத்துடன் தென்னிலங்கையில் வெளிநாட்டிலிருந்து வருபவர்களை  அம்பாந்தோட்டையில் விமான நிலையத்தில் தரையிறக்கி அங்கேயே தனிமைப்படுத்த முடியும். அதனைவிடவும் அம்மாவட்டத்தில் பொதுநலவாய கூட்டத்தொடருக்காக கட்டப்பட்ட பாரிய அரங்குகள் காணப்படுகின்றன. மேலும் அவசர சிகிச்சைக்காக கொழும்பிற்கும் சொற்ப நேரத்தில் செல்வதற்கு நெடுஞ்சாலை வசதிகளும் காணப்படுகின்றன.

அவ்வாறான நிலைமைகள் இருக்கையில் வெளிநாட்டிலிருந்து வருபவர்களையும், உள்ளாட்டில் தொற்றுச் சந்தேகத்துக்குள்ளானவர்களையும் தனிமைப்படுத்த தமிழர் தாயகத்தினை மையப்படுத்தும் இவ்வாறான நடவடிக்கையின் பின்னணியில் திட்டமிட்ட செயற்பாடொன்று உள்ளதா என்ற சந்தேகங்களும் எமக்கு வலுத்துள்ளது.

இதனைவிடவும் வடக்கில் மாத்திரம் சுமார் ஐந்து இலட்சம் படையினர் நிறுத்தப்பட்டுள்ளார்கள். தற்போது முப்படைகளைச் சேர்ந்த 351பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் படைகளின் முகாம்களில் மக்கள் தனிமைப்படுத்தப்படுவதும், வடக்கில் பாதுகாப்புக் கடமைகள், மற்றும் நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில் படையினர் செயற்படுவதானது பாரிய அச்சத்தினையும் ஆபத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

இவற்றைவிடவும் வைரஸ் தொற்றை கண்டறியும் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கான மருத்துவ பரிசோதனை உபகரணங்களுக்கான பற்றாக்குறைகள் நீடிப்பதாகவு சுகாதார துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.


கேள்வி:- கொரோனா நெருக்கடியால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலில் தமிழ் மக்களுக்கான வாழ்வாதர உதவித்திட்டங்கள் எவ்வாறான நிலையில் உள்ளது?


பதில்:- போர் நிறைவுக்கு வந்து தசாப்த்தினை கடந்துள்ள போதும் தமிழர் தாயகத்தில் வாழ்வாதார தேவைகள் மிகவும் உயர்ந்த மட்டத்திலேயே இருந்தது. போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பல வறுமையின் கோரப்பிடிக்குள்ளேயே இருந்தன. எனினும் கடந்த பத்து ஆண்டுகளில் இந்த நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்படவில்லை.  கடந்த காலத்தில் ஆட்சியிலிருந்து போர் வெற்றியைக் கூறி மார்பு தட்டிய மஹிந்த அரசோ அல்லது கூட்டமைப்புடன் தேனிலவு கொண்டாடிய மைத்திரி-ரணில் கூட்டரசோ இந்த நிலைமை மாற்றுவதற்கான எந்த அடிப்படைகளையும் முன்னெடுப்பதற்கு தயாராக இருந்திருக்கவில்லை.

ஆகவே ஏற்கனவே வாழ்வாதார நெருக்கடிக்குள் இருந்து வந்த தமிழ் சமூகம் தற்போதைய தொடர் ஊரடங்கால் பெரும் நெருக்கடிக்குள் உள்ளாகியுள்ளது. இந்த நிலைமையிலும் ஆட்சியில் உள்ளவர்கள் தமிழ்மக்களை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் தான் பார்கின்றார்கள். குறிப்பாக பெண் தலைமைத்தவ குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள், அன்றாட தொழில்களில் ஈடுபட்டு வந்தவர்களென அனைவரும் வறுமையின் பிடியால் பட்டினியின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ள சோகமான நிலைமை தான் காணப்படுகின்றது.

இந்த நிலையில் எம்மாலான உலர் உணவு, சமைத்த உணவு விநியோகங்களை மேற்கொண்டு வருகின்றோம். இதனைவிடவும் புலம்பெயர் உறவுகளின் கொடைகளில் உதவிகளை முறையாக மேற்கொண்டு வருகின்றோம். ஆனால் யானைப்பசிக்கு சோளப்பொரிபோன்று பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் மக்கள் நல உதவிகள் போதாதிருக்கின்றது.

கேள்வி:- பொதுத்தேர்தலுக்கான கருத்தாடல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் பிரதமரின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்றிருக்கின்றபோதும் தாங்கள் பங்கேற்றிருக்கவில்லையே?


பதில்:- முதலாவதாக பொதுத்தேர்தலொன்று நடைபெறுவதாக இருந்தால் அதற்கான சுமூகமான புறச்சூழல்கள் ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியமாகின்றது. குறிப்பாக பொதுமக்கள் தமது ஜனநாயக கடமையை அச்சமின்றி நிறைவேற்றுவதற்கான உறுதிப்பாடான சூழலொன்று ஏற்பட வேண்டும். அவ்வாறான  நிலைமையொன்று ஏற்படுகின்ற நிலையில் பொதுத்தேர்தலை நடத்தவதற்கு நாம் ஆட்சேபம் தெரிவிக்கப்போவதில்லை. அதுவே தேர்தல் தொடர்பான நிலைப்பாடாக இருக்கின்றது.

அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதமர் மஹிந்தவுடனான சந்திப்பில் பங்கேற்றமைக்கான உண்மையான காரணம் அவர்களது மனச்சாச்சாட்சிக்கே வெளிச்சம்.

ஆனால் மஹிந்தவின் அரசியல் நாடாகத்திற்குள் சிக்குண்டுகொள்வதற்கும் எவ்விதமான தீர்மானங்களும் எடுக்கப்படாவொரு காட்சிக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு நாம் தயாராக இல்லை.

மேலும், நாட்டில் அரங்கேறிய இனப்படுகொலைக்கு பொறுப்புக்கூறவே மாட்டோம் என்றும், காணமல்போனவர்கள் காணாமாலாக்கப்பட்டவர்களாக இருப்பர் என்றும்  அரசியல் கைதிகள் என்று யாருமில்லை என்றும் ஒட்டுமொத்தமாக இனப்பிரச்சினையே இந்த நாட்டில் இல்லை பொருளாதார பிரச்சினையே இருக்கின்றது என்று கூறும் ராஜபக்ஷவினரிடத்தில் சென்று கை குலுக்குவதால் என்ன நடக்கப்போகின்றது.

அவ்வாறிருக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதமருடான அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம், மற்றும் தனிப்பட்ட பிறிதொரு சந்திப்பு ஆகியவற்றில் கலந்து கொண்டது. இதில் பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் ஆகக்குறைந்தது ஒரு தீர்மானத்தனையோ அல்லது இணக்கப்பாட்டினையோ  எடுத்தது என்றோ அடுத்து வரும் நாட்களில் அது நடைமுறையாகுமென்றோ கூற முடியுமா?

அவ்வாறு கூறுவதற்கு எதுவும் இல்லை. நாடாளுமன்ற ஜனநாயகத்தினை காப்பாற்றப்போகின்றோம் என்ற பெயரில் மீண்டும் நாடாளுமன்றத்தினை கூட்டுமாறு கோரிவிட்டு கூட்டமைப்பு திரும்பியிருக்கின்றது. அவ்வாறு கோரப்பட்டபோது ஒருவார்த்தை கூட மஹிந்த தரப்பில் பதில் வழங்கப்படவில்லை. அரசியலமைப்பு தொடர்பில் பேசவிளைந்தபோது புதிய நாடாளமன்றில் பார்க்கலாம் என்று கூறி சம்பந்தரை வாயடைக்கச் செய்துவிட்டது மஹிந்த தரப்பு.

கடந்த காலத்தில் மைத்திரி, ரணில்  பொருட்டாக எடுக்காத நிலைமையே கடந்த மூன்று நான்கு மாதங்களாக தொடர்ந்திருந்தது. இந்த நிலைமைளை மாற்றி புதிய உறவொன்றை ஏற்படுத்தவே அனைத்து எதிர்க்கட்சிகளும் பிரதமரின் கூட்டத்தினை நிராகரித்தபோதும் கூட்டமைப்பினர் பங்கேற்றிருகின்றனர்.

கூட்டமைப்பு தமிழ் மக்கள் பற்றி பிரச்சினைகளை பேசாது விட்டாலும் ஆகக்குறைந்தது ஊரடங்கு சட்டம் சட்டரீதியல்ல என்று வாதிட்டுவரும் சுமந்திரன் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். அந்த தருணத்தில் பிரதமரிடத்தில் அதுபற்றி நேரடியாகவே கேள்வி எழுப்பியிருக்கலாம் அல்லவா? அதனைக் கூட செய்யவில்லையே.

அடுத்து வரவிருக்கும் பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் மத்தியில் எந்த முகத்துடன், எவ்வாறான வாக்குறுதிகளுடன் செல்வதென்ற இக்கட்டான நிலைக்குள் இருக்கிறது கூட்டமைப்பு. ஐ.நா மனித உரிமை பேரவை, புதிய அரசியலமைப்பு, காணாமலாக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகள் உள்ளிட்ட அனைத்து விடயத்திலும் கையறு நிலையிலேயே கூட்டமைப்பு உள்ளது. பொதுமக்களின் அன்றாட வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய வேலைவாய்ப்பு, நலத்திட்டங்கள் உள்ளிட்ட எதிலுமே முன்னேற்றங்கள் இல்லை. ஆகவே தான் அனைத்து நாடாளுமன்ற கூட்டத்திற்குச் சென்ற கூட்டமைப்பு காதும்காதும் வைத்தாற்போல் மஹிந்தவிடத்தில் நேரஒதுக்கீட்டை கோரி பிறிதொரு சந்திப்பையும் நடத்தியுள்ளது.இதனைப் பயன்படுத்தி அடுத்த பொதுத் தேர்தலில் தமது இருப்புக்களை நிலைப்படுத்துவதற்கான வாக்கு அறுவடையை செய்யவே கூட்டமைப்பு விளையவுள்ளது என்பதே உண்மை நிலையாகும்.

கேள்வி:- வெசாக் தினத்தில் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்படவுள்ள கைதிகளில் தமிழ் அரசியல் கைதிகள் எவரும் உள்ளடக்கப்படவில்லையே?

பதில்:- இதுவொரு துர்ப்பாக்கிய நிலைமையாகும். முதலாவதாக தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பரவலால் சிறைச்சாலைகளில் காணப்படுகின்ற நெருக்கடியான நிலைமைகளை கருத்திற்கொண்டு அனைத்து தழிழ் அரசியல் கைதிகளையும் நிபந்தனைக்குட்பட்ட பிணை வழங்கப்பட்ட தற்காலிமாக அவர்களின் அன்புக்குரியவர்களுடன் இருப்பதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கோரியிருந்தேன். ஆனால் இந்த அரசாங்கம் அதனைப் பொருட்டாக கொள்ளவில்லை.

தமிழ் அரசியல் கைதிகளில் பலர் தண்டனைக்காலத்தினை விடவும் அதிகளவு காலம் சிறைவசம் அனுபவித்து விட்டார்கள். அவர்களின் விடுதலையை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். மிருசுவில் படுகொலையாளிக்கு பொதுமன்னிப்பளிக்குமளவிற்கு மனநிலைகொண்டிருக்கும் ஆட்சியாளர் இந்த விடயத்தினை கருத்தில் கொள்வதாக இல்லை.
மேலும் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி போராடுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும்,அல்லது அரசுடன் பேரம்பேசுவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் எமது நிலைப்பாடுகளை புறந்தள்ளி கூட்டமைப்பே விடயங்களை கையாண்டு ஈற்றில் அவற்றை முடக்கியது.

ஆகவே அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு அப்பால் இந்த விடயத்தினை வலுவிழக்கச் செய்ததில் கூட்டமைப்பிற்கே பெரும்பங்குண்டு. சிறையில் உள்ள உறவுகளின் விடியலை தடுத்தது மட்டுமன்றி அவர்களுக்கான சட்ட உதவிகளை வழங்குவதற்கு கூட தயாரில்லாத நிலையில் தான் கூட்டமைப்பு உள்ளது என்பது துரதிஷடவசமானதாகும்.எனினும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் நாம் கட்சி பேதமின்றி முழுமையான ஒத்துழைப்புக்களையும் அழுத்தங்களை தொடர்ச்சியாக வழங்குவோம் என்றார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |