கொரோனா முடக்கத்திலிருந்து வியட்நாம் வெற்றிகரமாக வெளிவர ஆரம்பித்திருக்கிறது. பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்படுகின்றன.
வியட்நாமில் இதுவரை 288 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுளது. இதுவரை உயிரிழப்புகள் ஏற்படவில்லை.
இவ்விடயத்தில் வியட்நாம் அரசின் நடவடிக்கைகள் குறித்து சர்வதேச ஊடகங்கள் விரிவாகவும் வெளிப்படையாகவும் செய்திகளை வெளியிடுகின்றன.
அமெரிக்கா, இத்தாலி போன்ற வளர்ந்த நாடுகளால்கூட சாதிக்க முடியாததை வியட்நாம் சாதித்துள்ளது.
ஜனவரி மாதத்திலிருந்தே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுக்கத் தொடங்கியது.
ஜனவரி 22 இல், வியட்நாமில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, உடனடியாக, கோவிட்-19 தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான தேசிய வழிநடத்தும் குழுவை உருவாக்கியது வியட்நாம் அரசு.
அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் அக்குழுவுக்குத் தலைமை வகித்தார். சீனாவுக்கு வெளியே, பிற எந்த நாட்டையும் விட முன்னதாகவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது வியட்நாம்தான்.
ஆரம்பக் கட்டத்திலேயே தீர்க்கமான நடவடிக்கைகளை வியட்நாம் எடுத்ததால்தான் கொரோனா வைரஸை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்த முடிந்தது என்று சர்வதேச நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
0 Comments