கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை பாதுகாக்க கிடைக்கப் பெற்ற நிதிகள் தொடர்பில் உண்மை தகவலை வெளியிட வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க கூறினார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது,
கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க உலக வங்கியிலிருந்து 127 மில்லியன் டொலரும் சீனாவிலிருந்து முதற்கட்டமாக 500 டொலரும், இரண்டாம் கட்டமா 750 டொலரும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் அரசாங்கம் அதனை நிராகரித்துள்ளது .
தற்போது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்குவதாக குறிப்பிட்ட சலுகைகள் எதுவும் இதுவரையில் பெற்றுக் கொடுக்கப்படவில்லை.
5000 ரூபாய் நிதியும் இன்னும் முழுமையாக பெற்றுக் கொடுக்கப்படதா நிலையில் இம்மாதத்திற்கான நிதியையும் வழங்குவதாக அறிவித்துள்ளது.
வெளிநாடுகளில் பணிப்புரிவோரை நாட்டுக்கு வரவேண்டாம் என்கின்றனர்.
இவர்களாளேயே எமது நாட்டுக்கு பெரும் வருமானம் கிடைக்கின்றது. இவர்களை பாதுகாப்பான முறையில் அழைத்து வருவதே அரசாங்கத்தின் கடமை. இதைவிடுத்து இவர்களை நாட்டுக்குள் பிரவேசிக்க வேண்டாம் என்று உத்தரவிடமுடியாது.
தற்போது வைரஸ் பரவலினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையில் அரச வருமானம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மேல் மாகாணத்தில் காணப்படும் தொழிற்சாலைகளிலிருந்தே அரசாங்கத்திற்கு அதிகமான வரி கிடைக்கப் பெற்றது. தற்போது அதற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அரச ஊழியர்களுக்கான சம்பளம் வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட வாய்ப்பிருக்கின்றது.
வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் செயற்பாடுகளில் இன்னும் வெற்றி கிடைக்கவில்லை.
எதிர்வரும் தினங்களில் 1000 பேர் வரையிலான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படலாம் என்று சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் தொடர்ந்தும் நாட்டை மூடக்கி வைத்திருக்கவும் முடியாது.
வைரஸ் பரவல் தொடர்பான உண்மை தரவுகளை அரசாங்கம் வெளியிடவேண்டும். தொற்றுக்குள்ளானவர்களின் தொகை மற்றும் உயிரிழந்தவர்களின் தொகை அதிகரித்தால் அதனை இரவு வேளையில் வெளியிட்டு வைரஸ் பரவலினால் ஏற்படும் நெருக்கடியை அரசாங்கம் மூடி மறைத்து வருவதாக தோன்றுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments