Home » » கொரோனா அச்சத்தால் பிரித்தானியாவிலிருந்து அழைத்துவரப்பட்ட மாணவர்கள் கட்டுநாயக்காவில் கூச்சலிட்டு குழப்பம்!

கொரோனா அச்சத்தால் பிரித்தானியாவிலிருந்து அழைத்துவரப்பட்ட மாணவர்கள் கட்டுநாயக்காவில் கூச்சலிட்டு குழப்பம்!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிரித்தானியாவில் நெருக்கடிளுக்கு முகங்கொடுத்து ஸ்ரீலங்கா திரும்பிய மாணவர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்தியமை தொடர்பில் அதிகாரிகள் விசாரணை ஆரம்பித்துள்ளனர்.
தனிமைப்படுத்தலுக்காக அழைத்து வரப்பட்ட நிலையில் தங்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டியே ஸ்ரீலங்கா மாணவர்கள் இவ்வாறு கூச்சலில் ஈடுபட்டனர்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பிரித்தானியாவில் கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக சிக்கித் தவித்த 208 ஸ்ரீலங்கா மாணவர்கள் இன்றைய தினம் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் ஸ்ரீலங்காவிற்கு அழைத்து வரப்பட்டனர்.
பிரித்தானியாவிலிருந்து நாடு திரும்பும் முதலாவது மாணவர்கள் குழு இது என்பதை அறிக்கை வெளியிட்டுத் தெரிவித்திருந்த பிரித்தானியாவில் உள்ள ஸ்ரீலங்கா தூதரகம், இரண்டாவது குழுவினர் நாளைய தினம் ஸ்ரீலங்காவுக்கு திரும்பவுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.
இவர்கள் நாளொன்றுக்கு 7500 ரூபா படி கட்டணம் செலுத்தும் விசேட விடுதிகளில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய இன்றைய தினம் காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அடைந்த ஸ்ரீலங்கா மாணவர்களில் சிலர் குழப்பத்தை தோற்றுவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் வைத்து தனிமைப்படுத்தலுக்காக அழைத்துவரப்பட்ட போதிலும் தகுந்த வசதிகள் தங்களுக்கு செய்து தரப்படவில்லை என்று தெரிவித்தே இவர்கள் கூச்சலிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் நீர்கொழும்பிலுள்ள 02 நட்சத்திர விடுதிகளில் ஆண்கள் 44 பேர், பெண்கள் 47 பேர், சிறுவர்கள் 03 பேர் தனிமைப்படுத்தலுக்காக பொலிஸாரின் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதேபோல களுத்துறையில் உள்ள நட்சத்திர விடுதியொன்றுக்கு ஆண்கள் 33 பேர், பெண்கள் 29 பேர் என அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏனைய மாணவர்கள் ஆண்கள் 15 பேர், பெண்கள் 30 பேர் அரசாங்கத்தின் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |