இந்தியாவில் உயர்கல்விக்காக சென்று நிர்க்கதிக்குள்ளாகியுள்ள ஸ்ரீலங்கா மாணவர்களை எதிர்வரும் நாட்களில் நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாகிஸ்தானிலுள்ள ஸ்ரீலங்கா மாணவர்களும் நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் பணிப்பாளர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
உலக நாடுகளில் பிரச்சினையாக உருவெடுத்துள்ள கொரோனா தொற்று நெருக்கடியை அடுத்து ஸ்ரீலங்காவைச் சேர்ந்த மாணவர்கள், நாடு திரும்புவதற்கு அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன்வைத்துவருகின்றனர்.
அந்த வகையில் அண்மையில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் கல்வி கற்றுவரும் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் சார்பில் தம்மை நாட்டிற்கு அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி சமூக வலைத்தளத்தில் காணொளியொன்று வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் உயர்கல்வி கற்றுவரும் 200 ற்கும் அதிகமான ஸ்ரீலங்கா மாணவர்களை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் அறிவுறுத்தலுக்கு அமைய வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து அவர்களை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் ஷெஹான் சுமனசேகர குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிற்கு மீள அழைத்துவரும் திட்டத்தின் கீழ் சார்க் நாடுகளில் உள்ள மாணவர்கள் ஸ்ரீலங்காவிற்கு அழைத்துவரப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதல் கட்டமாக பாகிஸ்தானில் இருந்து 115 ஸ்ரீலங்கா மாணவர்கள் எதிர்வரும் செவ்வாய்கிழமை ஸ்ரீலங்காவை வந்தடைவார்கள் என ஷெஹான் சுமனசேகர கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து இந்தியாவிலுள்ள 105 மாணவர்கள் ஸ்ரீலங்கா ஏயார் லயன்ஸ் நிறுவனம் மூலம் நாட்டிற்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த 215 மாணவர்களும் சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களுக்கு அமைய தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டு, தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவுசெய்த பின்னர் 215 மாணவர்களும் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் ஷெஹான் சுமனசேகர மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 Comments