Home » » மட்டக்களப்பில் கொரோனா அச்சத்திலும் சமூக பொறுப்பினை நிறைவேற்றிய இளைஞர்களுக்கு நன்றி கூறிய முதல்வர்

மட்டக்களப்பில் கொரோனா அச்சத்திலும் சமூக பொறுப்பினை நிறைவேற்றிய இளைஞர்களுக்கு நன்றி கூறிய முதல்வர்


கொரோனா அச்சம் காரணமாக மட்டக்களப்பு மாநகர சபையினால் அமைக்கப்பட்ட தற்காலிக சந்தைகளில் சேவையாற்றிய சமூக அமைப்புகளின் தொண்டர்களை மட்டக்களப்பு மாநகர முதல்வர் சந்தித்து நன்றிகளை கூறியுள்ளார்.
நாடு பூராகவும் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டமானது தற்காலிகமாக தளர்த்தப்படும் வேளைகளில் மட்டக்களப்பு மாநகர நிர்வாக எல்லைக்குள் சனநெரிசலினைக் குறைத்து சமூக இடைவெளியினைப் பேணும் முகமாக மாநகர சபையினால் நான்கு விற்பனைச் சந்தைகளை திறந்த வெளிகளில் அமைக்கப்படிருந்தன.
இவ்விடங்களில் பொதுமக்களின் சன நடமாட்டத்தினை கண்காணித்து ஒழுங்குபடுத்தும் பொறுப்புகளை மாநகர முதல்வர் மட்டக்களப்பில் உள்ள சமூக அமைப்புகளிடம் வழங்கி இருந்தார்.
இந்நிலையில் தற்போது ஊரடங்குச் சட்டமானது இலகுபடுத்தப்பட்டுள்ள நிலையில் மக்களின் பாதுகாப்பு தொடர்பில் மாநகர சபையினால் மேற்கொள்ள எண்ணியுள்ள தொடர் நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுறுத்தும் கலந்துரையாடலின் போதே மேற்படி தொண்டர் பணிகளை முன்னெடுத்த இளைஞர், யுவதிகளுக்கு தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த முதல்வர்,

கொரோனா தொற்று மக்களிடையே பரவாமல் தடுக்கும் வகையிலான பாதுகாப்பு செயற்பாடுகளை மிக கவனமாகவும் துரிதமாகவும் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பினை உள்ளூராட்சி மன்றம் என்ற வகையில் மாநகர சபையானது சிறப்பாக மேற்கொண்டு வருகின்றது.
இதற்கு பல தரப்பினர் தமது அர்ப்பணிப்பு மிக்க பங்களிப்புகளை வழங்கி இருந்தனர்.
குறிப்பாக பொதுவெளிகளில் சந்தைகள் அமைக்கப்பட்டபோது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கிடையில் சமூக இடைவெளிகளை பேணி, பொதுமக்களுக்கான ஆலோசனைகளையும் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் மேற்கொண்டு வரும் மட்டக்களப்பு மாவட்ட சாரணர் இயக்கத்தினர், சென் ஜோன்ஸ் அம்புலனஸ், அம்கோர் மற்றும் எகெட் காரிதாஸ் தொண்டர் குழுவினர்களுக்கு தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பாக வெபர் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த சந்தையில் ஏனைய மூன்று சந்தைகளை விடவும் அதிக சனநெரிசலும், வியாபாரிகளும் வருகை தந்திருந்தனர்.
இத்தகைய தரப்பினரோடு நல் உறவினை பேணிய எகேட் கரிதாஸ் தொண்டர் பணியாளர்கள் சமூக இடைவெளியினை மிகச் சிறப்பாக பேணியதோடு, கொரோனா தொற்று தொடர்பான விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கு வழங்கியும் இருந்தனர்.
அதே போல் பொது மக்கள் கூடும் இடங்களில் கொரோனா தொற்று நீக்கும் பணிகளை மாநகர சபையானது முன்னெடுத்த போதெல்லாம் மட்டக்களப்பு மாவட்ட கபடி அணியினரும் தமது பங்களிப்புகளைச் செய்திருந்தனர்.
இக்கட்டான நிலமைகளின் போது இத்தகைய தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புகள் பேர் உதவியாக அமைந்துள்ளதாகவும். இவர்களின் அளப்பரிய பணிகளுக்கு மதிப்பளித்து இவர்களின் அறிவுரைகளுக்கு ஏற்ப நடந்துகொண்ட பொது மக்களுக்கும் நன்றிகளை பகிர்ந்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.



Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |