உலக வல்லரசான அமெரிக்காவில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளதுடன் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 37 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
உலகையே உலுக்கு வரும் கொரோனா வைரஸ் 16 லட்சத்து 97 ஆயிரத்து 533 பேருக்கு பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 12 லட்சத்து 18 ஆயிரத்து 737 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 49 ஆயிரத்து 830 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 687 பேர் பலியாகியுள்ளனர்.
அமெரிக்காவில் மட்டும் 5 லட்சத்து 2 ஆயிரத்து 49 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 33 ஆயிரத்து 483 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்நாட்டில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனவுக்கு பலியானோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 719 ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக கடந்த வாரம் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவில் இரண்டு லட்சம் பேரை இழக்கப் போகின்றோம் என்று எச்சரித்திருந்தார்.
அவரின் இந்த எச்சரிப்பும் கணிப்பும் சரியாக அமைந்துவிடுமானால் வரலாற்றில் எப்போதும் இல்லாத அழிவை அமெரிக்கா எதிர்கொள்ளும் என்கிறார்கள் அமெரிக்க செய்தியாளர்கள்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இத்தாலியிலும் கடுமையான உயிர் சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதேபோன்று தற்போது பிரான்ஸ் நாட்டிலும் கடுமையான இழப்புக்களை அந்நாடு சந்தித்துக் கொண்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments