Home » » கொரோனாவால் ஸ்ரீலங்காவில் புதிதாக வகுக்கப்பட்டுள்ள திட்டம்!

கொரோனாவால் ஸ்ரீலங்காவில் புதிதாக வகுக்கப்பட்டுள்ள திட்டம்!

அறிகுறிகள் இன்றி, மக்களோடு மக்களாக உள்ள கொரோனா தொற்றாளர்களை கண்டுபிடிக்க, கொரோனா அதி அபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 6 மாவட்டங்களில் பொது மக்களிடையே பரிசோதனைகளை முன்னெடுக்க விஷேட திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் தொடர்பில் ஸ்திரமான நிலைப்பாடொன்றினை எடுக்கும் பொருட்டு இந்த பரிசோதனைகளை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் சிரேஷ்ட தொற்று நோய் ஆய்வாளர் விஷேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
இது தொடர்பில் விசேட செய்தியாளர் சந்திப்பின் போது அவர் குறிப்பிட்டதாவது,
“தற்போது கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதில் சிறிய வீழ்ச்சியை அவதானிக்க முடிகின்றது. நாம் பரிசோதனைகளை அதிகரித்துள்ள சந்தர்ப்பத்திலேயே அடையாளம் காணப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதனூடாக நாட்டில் இருக்கும் கொரோனா தொற்றாளர்களில் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிகிறது.

எனினும் எமக்கு மற்றொரு சவால் உள்ளது. அது தான் எந்த நோய் அறிகுறியும் இல்லாத கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இருப்பின் அவர்களை நாம் அடையாளம் காண வேண்டும். அதனால் நாம் கொரோனா தொடர்பில் அதி அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் இருந்து மாதிரிகளைப் பெற்று பரிசோதனை செய்ய வேண்டும். அப்போது உறுதியாக நாம் கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளோம் என்பதை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கும்.
உண்மையிலேயே நாம் கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தால் அடுத்த வாரமாகும் போது, தொற்றாளர்கள் பதிவாகும் எண்ணிக்கை மிகப்பெரும் அளவில் வீழ்ச்சி காண வேண்டும். அப்படியானால் மட்டுமே நாம் அன்றாட நடவடிக்கைகளின் பால் மீளலாம். ' என்றார்.
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் இதுவரை இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் பழகியோரை மையப்படுத்தியுள்ளது.
தற்போது அடையாளம் காணப்படும் பெரும்பாலான தொற்றாளர்கள் தனிமைப்படுத்தல் மையங்களிலும் சுய தனிமைப்படுத்தலிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளவர்களில் இருந்தே அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
இந் நிலையிலேயே இந்த தொற்று, சமூகத்தின் மத்தியில் உள்ளதா என்பதை உறுதி செய்ய, சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.
இந் நிலையிலேயே அதி அபாய வலயங்களாக பிரகடனம் செய்யப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், யாழ்., கண்டி மற்றும் இரத்தினபுரியில் இரு பொலிஸ் பிரிவுகளில் பொது மக்களின் மாதிரிகளைப் பெற்று பரிசோதிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.
எவ்வாறாயினும், தற்போதைய சூழலில், கொரோனா தொற்றாளர்கள் பதிவாவது குறைவடைந்திருந்தலும், எதிர்வரும் 20 ஆம் திகதிவரை தற்போது உள்ள இறுக்கமான ஊரடங்கு நடைமுறைகளை பேண வேண்டும்.
இலங்கையில் பொது மக்களிடையே பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு, தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் கூட, உலக அளவில் குறித்த தொற்று கட்டுப்பாட்டுக்குள் வரும் வரையிலும் அல்லது அது தொடர்பில் தடுப்பூசியொன்று கண்டுபிடிக்கும் வரையில் பொது மக்கள் மிக அவதானத்துடன் பல கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும்.
அண்மையில் கண்டறியப்பட்ட தொற்றாளர்கள் எவரும், கொரோனா அறிகுறிகள் தென்படாதவர்கள் எனவும், எனவே அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்றாளர்களை கண்டறிவதே மிகப் பெரிய சவாலாக உள்ளது.
கொரோனா தொற்று பரவும் வேகம் இலங்கையில் குறைவடைவதற்கான காரணம், பி.சி.ஜி. எனும் தடுப்பூசி போடப்படுவதாக கூறபப்டும் நிலையில், சில நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது மேலோட்டமாக அது தெரியவருகிறது. அந்த விடயம் குறித்து ஆழமான பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றன.
பி.சி.ஜி. தடுப்பூசி ஏற்றும் கொள்ளையில்லாத இத்தாலி, நெதர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்த தடுப்பூசி ஏற்றப்படுகின்ற நாடுகளில் பதிவான மரணங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதென வெளிநாட்டு ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கொரோனா வைரஸால் 17,000 மரணங்கள் பதிவான இத்தாலியில் ஒருபோதும் அனைவருக்கும் பி.சி.ஜி. தடுப்பூசி ஏற்றப்பட்டதில்லை. 63 மரணங்கள் மாத்திரம் பதிவாகியுள்ள ஜப்பானில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டாலும் அங்கு அனைத்து பிரஜைகளுக்கும் பி.சி.ஜி. தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. அத்தோடு, பி.சி.ஜி. தடுப்பூசியை இரண்டு கால கட்டங்களில் வழங்கியுள்ளதால், ஆய்வாளர்கள் ஜப்பான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளை தமது ஆய்வின்போது ஒப்பிட்டுள்ளனர்.
ஜப்பான் 1947 ஆம் ஆண்டு இந்த தடுப்பூசி கொள்கையை நடைமுறைப்படுத்தியதுடன் ஈரானில் அது 1984 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. பிந்திய காலக்கட்டத்தில் பி.சி.ஜி. தடுப்பூசி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட நாடுகளில் அதிகளவிலான மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி ஏற்றப்பட்ட வயது முதிர்ந்தவர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுவாச நோய் தடுப்பூசி வழங்குவதன் மூலம் மருத்துவ பணியாளர்களை பாதுகாக்க முடியுமா என்பது தொடர்பில் ஆய்வுகளை நடத்துவதாக கடந்த வாரம் அவுஸ்திரேலிய ஆய்வாளர்கள் அறிவித்தனர். சுகாதார அமைச்சின் தரவுகளுக்கு அமைய, இலங்கையில் இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை 1949 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது ”என்றார்.
இதேவேளை, இந்த தடுப்பூசி இலங்கையில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் வைத்தியசாலையில் இருந்து வெளியேற முன்னரேயே கட்டாயமாக ஏற்றபப்டுவதாக பிரதி சுகாதார பணிப்பாளரும் தொற்று நோய் தொடர்பிலான விஷேட வைத்திய நிபுணருமான பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |