Home » » ஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு ..!

ஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு ..!

நாடளாவிய ரீதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8 மணிமுதல் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் நாளை திங்கட்கிழமை(27.04.2020) காலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

நாளையிலிருந்து மே மாதம் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை வரை கொழும்பு , கம்பஹா , களுத்துறை , புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தினமும் காலை 5 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்ப்படுத்தப்படும். அதற்கமைய இம்மாவட்டங்களில் இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை மாத்திரமே ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்.

அத்தோடு இடர்வலையங்களில் இனங்காணப்பட்டுள்ள சில பொலிஸ் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் நாளை திங்கட்கிழமை ஊரடங்கு தளர்த்தப்படும் என்று கடந்த வாரம் அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும், நேற்று சனிக்கிழமை குறித்த பகுதிகளில் மே மாதம் 4 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதனால் ஏற்படும் கஷ்டங்களை தெளிவுடனும் பொறுப்புடனும் பொறுத்துக்கொள்ளுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் வேறு பொருட்களை வீடுகளில் இருந்தே பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தொடர்ச்சியாக வழங்களை மேற்கொள்ள அரசாங்கம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

எந்த மாவட்டத்திலாயினும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் சிறு தேயிலை தோட்டங்கள், ஏற்றுமதி பயிர்கள் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட மக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாகவே கருதப்படும். எவரும் இந்த கிராமங்களுக்கு உள்வருவதோ அல்லது வெளியேறுவதோ மறு அறிவித்தல் வரை முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |