இந்தியா கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் பறவைகள் செத்து விழுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், பாலக்காடு பகுதிக்கு தமிழகத்தில் இருந்து விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட வாத்து குஞ்சுகள் கூட்டம் கூட்டமாக செத்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கேரளாவில் கொரோனா பீதி ஒரு புறம் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் மறுபுறம் திருவனந்தபுரம், பாலக்காடு பகுதிகளில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் பாதிப்பு உள்ள பகுதிகளில் பறவைகளை பாதுகாப்பாக அழிக்கும் பணி கேரள அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அறிந்த கால்நடை பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து சென்று இறந்த வாத்துகளின் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த வாத்து குஞ்கள் பாதுகாப்பாக குழிகளில் போட்டு எரிக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் எம்.எல்.ஏ விடுதி அருகே காணப்பட்ட மரத்திலிருந்து பறவைகள் திடீர் என செத்து விழுந்துள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதை அறிந்த மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த பறவைகளை ஆய்விற்கு கொண்டு சென்றுள்ளனர். அத்துடன் தீயணைப்பு துறையினர் இறந்த பறவைகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கோழிக்கோடு முக்கம் பகுதியில் வௌவால்களும் கூட்டம் கூட்டமாக செத்து விழுந்துள்ளன. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கால்நடை பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று வௌவால்களை பரிசோதனைக்காக கொண்டு சென்றுள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் திருவனந்தபுரம் மலையின் கீழ் பகுதியில் குரங்குகள் திடீர் திடீரென மயங்கி விழுந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவம் இடத்திற்கு சென்று மயங்கி கிடந்த ஒரு குரங்கை பரிசோதனைக்காக எடுத்து சென்றுள்ளனர். பறவை காய்ச்சல் பீதியால் இறைச்சி கோழி, வாத்து, முட்டை விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது எனவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


0 Comments