Home » » எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் களமிறங்குவேன்! கருணா திட்டவட்டம்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் களமிறங்குவேன்! கருணா திட்டவட்டம்


கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படும் விடயத்தில் நற்செய்தி ஒன்று கிடைத்துள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு முன்பாக நேற்றிரவு ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தரம் உயர்த்தும் என்ற விடயத்தில் நான் தீவிரமாக செயற்பட்டு வருகின்றேன். கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து இதை உடனே தரம் உயர்த்தி தரவேண்டும் என்று அழுத்தமாகக் கூறினேன்.

இதிலேயே ஒரு நற்செய்தி ஒன்று வந்திருக்கின்றது நாளை நாடாளுமன்ற குழு கூட்டம் இடம்பெற இருக்கின்றது. இதற்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரும் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளரும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதில் அவர்கள் எவ்வாறு செயற்பட வேண்டுமென்று அவர்களிடமும் நான் தெளிவாக கூறி இருந்தேன். நாளைய கூட்டத்தின் பின்னர் கல்முனை வடக்கு உப பிரதேச செயலக சம்பந்தமான வெளிப்படைத்தன்மை தெரியவரும்.



அதற்கான முயற்சிகள் தீவிரமாக எடுக்கப்பட்டிருக்கிறது. நான் பிரதம மந்திரியிடம் தெளிவாக கூற இருக்கிறேன்.

நீங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் அப்போது தான் மக்கள் எங்களை மதிப்பார்கள். ஆகவே அந்த விடயம் இடம்பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் கூடுதலாக உள்ளது. அதற்காகத்தான் அவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே இது ஒரு சிறந்த நற்செய்தியாக நாங்கள் பார்க்கிறோம் என குறிப்பிடவுள்ளேன்.

இலங்கையின் தேசிய கீதம் தமிழில் பாட முடியாது என தான் கூறியதாக தவறான தகவல் என்று பேசப்பட்டு வருகிறதை ஏற்கமுடியாது .

எமது ஜனாதிபதியும், பிரதமரும் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடலாம் என்று கூறியிருக்கிறார்கள்.இந்த விடயம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று.

தமிழ் மொழியில் பாடலாம் என்பது இதனை ஏன் இங்கு விவாதிக்கிறார்கள் என்று கேட்டதே ஒழிய தமிழ் மொழியில் பாட கூடாது என நான் கூறவில்லை.

நாடாளுமன்றத்தில் இருக்கும் போதே நான் தமிழில் தேசிய கீதம் பாட வேண்டும் என கூறி இந்த விடயத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தி கொண்டு வந்தவன்.

இந்த விடயத்தில் எனக்கு பக்கபலமாக இருந்தவர் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆவார்.

எனவே இதனை தற்போது தவறான முறையில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனும் இதனை தவறாக கூறியிருக்கின்றார்.

தமிழில் தேசிய கீதம் பாடுவதை நான் தடுத்து இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். முதலில் அவர் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். எங்களுடைய கட்சி தனித்தமிழ் கட்சி.

எமது கட்சியின் பெயர் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி. தமிழர்களுக்காக குரல் கொடுக்கவேண்டும். தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் எமது கட்சியை தொடங்கி அதில் பாரிய வளர்ச்சியை கண்டு வருகின்றோம்.

அவ்வாறான நாங்கள் தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதை எவ்வாறு நாங்கள் மறுப்போம் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

எங்களது வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத அவர்களது கடந்த கால தவறுகளை நியாயப்படுத்துவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நாகரீகமற்ற அரசியலை தற்போது செய்து வருகின்றனர்.

அதனை முதலாவதாக முன்னின்று செய்து வருபவர் கோடீஸ்வரன் எம்.பி அம்பாறை மாவட்டத்திலே அவர் நிச்சயமாக தோற்கப்போகின்றார். மக்கள் அவருக்கான பதிலடி கொடுப்பார்கள்.

ஐக்கிய தேசிய கட்சியானது அழிந்து போகின்ற ஒரு கட்சியாக தான் காணப்படுகின்றது .

தேர்தல் ஆரம்பமாவதற்கு ஒவ்வொரு முறையும் அதற்குள்ளே தலைமைத்துவ போட்டிகள் இடம்பெற்று வருகின்றது.

ஜனாதிபதித் தேர்தல் வந்தாலும் தலைமை போட்டி நாடாளுமன்றத் தேர்தலிலும் தலைவர் என்ற போட்டி இடம்பெற்று வருகின்றது. உண்மையிலேயே இது ஒரு உட்கட்சி பிரச்சினை தான்.

எனவே தான் அவர்களை எமது மக்கள் நம்புவதற்கில்லை. மக்கள் அந்த ஐக்கிய தேசியக் கட்சியை வீசி எறிந்திருக்கிறார்கள். வருகின்ற தேர்தலில் அவர்கள் தோல்வி அடைவார்கள்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக திடமான முடிவை எடுத்திருக்கிறேன் .

ஏனெனில் இங்குள்ள திறமை மிக்க புத்திஜீவிகள் இளைஞர்களை இணைத்துக் கொண்டு நாங்கள் தனித்துவமாக போட்டியிடுவதற்கு முடிவெடுத்திருக்கிறோம்.

பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்காக பல அபிவிருத்திப் பணிகள் செய்வதற்காகவும் அந்த மக்களின் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்காக இன்று நான் துணிந்து அம்பாறை மாவட்டத்தில் எமது மக்களின் நம்பி நான் போட்டியிடுவதாக முடிவெடுத்திருக்கிறேன்.

அதற்கு நான் சொல்லுகின்ற இடங்கள் எல்லாம் அந்த மக்கள் பாரிய ஆதரவை வழங்கி வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.








Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |