Home » » எல்லைகள் தமிழர்களினதோ அல்லது முஸ்லிங்களினதோ கூரைக்கு மேலால் போட முடியாது : தே.கா தலைவர் அதாஉல்லா !!

எல்லைகள் தமிழர்களினதோ அல்லது முஸ்லிங்களினதோ கூரைக்கு மேலால் போட முடியாது : தே.கா தலைவர் அதாஉல்லா !!

நூருல் ஹுதா உமர்

எல்லைகள் போடப்படும் போது தமிழர்களினதோ அல்லது முஸ்லிங்களினதோ கூரைக்கு மேலால் போட முடியாது. அது கூடாது. யுத்தம் எதற்காக இந்த நாட்டில் நடைபெற்றது என்பது தெரியாமல் பல உயிர்களையும், விலைமதிக்க முடியாத சொத்துக்களையும் இழந்திருக்கிறோம். ஆகவே நீதி,நியாயத்தை நாங்கள் நிலைநாட்ட வேண்டும். அண்மைய பிரதமரின் சந்திப்பில் எமது எண்ணங்களை தெளிவாக அரசுக்கு கூறிவைத்துள்ளோம். நான்கு சபைகளையும் பிரித்து நான்கு பிரதேச செயலகங்களை உருவாக்க வேண்டும். அரசியலுக்காக இனவாதம் பேசி பயனில்லை. இந்த பிரதேச மக்களின் தேவைகளை பெறுவதில் நாங்கள் நியாயமாக நடக்க வேண்டும். எமது பதவிகளை கொண்டு நமது மக்களை நிம்மதியாக வாழவைக்க வேண்டும் என தேசிய காங்கிரசின் தேசிய தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்தார்.   


வெள்ளிக்கிழமை இரவு சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக்கழக சாதனை உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு கழக தலைவர் ஏ.எல்.முகம்மத் தலைமையில் பௌசி விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அவர். தொடர்ந்தும் தனது உரையில்,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை இஸ்தாபித்த மறைந்த தலைவர் அஸ்ரப் சிங்கள மக்களுக்கும் முஸ்லிங்களுக்கும் உறவுப்பாலமாக இருக்க எண்ணினார். அவருடைய ஆசிரியர்கள் எல்லோரும் தமிழர்களே. பின்னர் வந்த காலப்பகுதியில் தமிழர் விடுதலை போராட்ட களத்தில் குதித்த ஒரு குழுவினர் எதற்காக போராடுகிறோம், விடுதலை என்றால் என்ன ? யாருக்கு ? எப்போது ? எப்படி என்று தெரியாமல் போராடி பல்லாண்டு காலம் தமிழ் மக்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளார்கள். பொங்கலுக்கு தீர்வு தருவதாக கூறி மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் தமிழ் கூட்டமைப்பும். இனவாதத்தை பேசி பிரிவினைவாதத்தை வளர்க்கும் முஸ்லிம் காங்கிரசும் இணைந்து தமிழ் மக்கள் சந்தேகிக்கும் அளவுக்கு ஒரு நிலையை உருவாக்கி வைத்துள்ளார்கள்.

தமிழர்களும் முஸ்லிங்களும் ஒரு தாய் வயிற்றில் பிறந்த பிள்ளைகளாக பின்னி பிணைந்து வாழ்கிறோம். தினசரி ஒருவரை ஒருவர் எங்காவது பார்க்காமல் இருப்பதில்லை. நாம் யார் நினைத்தாலும் பிரிந்து வாழக்கூடாது உறவுகள். இந்த உறவு மிக நீண்ட கால உறவாகும் 

தமிழ்-முஸ்லீம்-சிங்கள மக்களை சூடாக்கியவர்கள் அரசியல்வாதிகள். தமிழ் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரசும் ஒன்றாக பயணித்த போதும் கல்முனை மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்த்துவைக்க முன்வரவில்லை. வரலாற்று துரோகமாக அதை நான் பார்க்கிறேன். சாய்ந்தமருது பிரச்சினை நாடறிந்த பிரச்சினை. ஒரு சமூகம் மற்றைய சமூகத்தை கண்டு மறைத்து கதைக்கும் நிலைக்கு நாம் ஆளாக்கப்பட்டோம்.

கடந்த அரசில் தமிழ் தலைமைகளும் முஸ்லிம் தலைமைகளும் இது விடயமாக பேசியபோது அங்கு சமூகமளித்திருந்த நான் மூத்த தமிழ் தலைவரான சம்பந்த ஐயாவிடம் இந்த பிரச்சினையை தொடரவிடாமல் தீர்க்க வழிசமைக்க வேண்டும். நாங்கள் உங்களை நம்புகிறோம் என்றேன் . கடந்த காலங்களில் பல முக்கிய முஸ்லிம் தலைவர்கள் தமிழ் தலைமைகளின் தலைமையின் கீழ் பயணித்துள்ளார்கள் அந்த அனுபவத்துடன் கல்முனை விடயத்தை மத்தியஸ்தம் செய்வதை மூத்த தமிழ் தலைவரான சம்பந்த ஐயாவிடம் கொடுத்தோம்.

தமிழ் தலைமைகளும் முஸ்லிம் தலைமைகளும் கேட்டிருக்க யாருக்கும் யாரும் அநியாயம் செய்ய வேண்டியதில்லை. அவரவருக்கான தேவைகளை நியாயமாக வழங்க வேண்டும் நீங்கள் வந்து இதை செய்து முடியுங்கள். இல்லாது போனால் ஆணைக்குழுவை நியமித்து தீர்வை பெறுவோம் என்றேன். கல்முனையின் வரை படத்தை வைத்துக்கொண்டு எல்லைப்பிரிப்பு கோட்டை வரைந்திருக்க முடியும். ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை. அதை செய்யும் திராணியும் தைரியமும் எனக்கு இருக்கிறது.

சம்பந்தன் ஐயா வரமுடியாமையை காரணம் காட்டி பல்வேறு திட்டங்ககளை முன்மொழிந்தார். ஒரே தலைமையை ஆதரிக்கும் தமிழ் தலைமைகளும் முஸ்லிம் தலைமைகளும் மக்களை வாழவைக்க எதையும் செய்யவில்லை, இனவாதத்தை மட்டுமே விதைத்துவிட்டு சென்றார்கள். இந்த துவேசத்தை இல்லாமலாக மாற்ற பல வருடங்கள் செல்லும்.

அக்கறைப்பற்ற்றில் ஒரே இரவில் இருசபைகளை உருவாக்கியதை ஆதாரமாக கொண்டு நான் அமைச்சராக இருந்த போது என்னுடைய அமைச்சரவை விவாதம் ஒன்று பாராளுமன்றத்தில் சென்றுகொண்டிருந்த போது தமிழமைச்சர் ஒருவர் கல்முனைக்கு சபை கேட்டார். தமிழர்களுக்கான பிரதேச சபை உரித்தை வழங்க தயாராகவே இருந்தேன். அவர்களின் உரிமை வழங்கப்பட வேண்டும். ஆனால் செயலகம் என்பது மக்களின் தேவை என்பதை விட அது அரசின் தேவை. அரச காரியங்களை செய்ய அரசாங்கம் அமைக்கும் அலுவலகம் அது. அது எங்கும் இருக்கலாம் அது பிரச்சினை இல்லை. அந்த மக்களுக்கு தேவை செயலகம் என்பதை விட உள்ளுராட்சி சபையே. அதன் மூலம் தான் அந்த மக்களின் பங்குகள் சரியாக கிடைக்க வழியேற்படும்.

எல்லைகள் போடப்படும் போது தமிழர்களினதோ அல்லது முஸ்லிங்களினதோ கூரைக்கு மேலால் போட முடியாது. அது கூடாது. யுத்தம் எதற்காக இந்த நாட்டில் நடைபெற்றது என்பது தெரியாமல் பல உயிர்களையும், விலைமதிக்க முடியாத சொத்துக்களையும் இழந்திருக்கிறோம். ஆகவே நீதி,நியாயத்தை நாங்கள் நிலைநாட்ட வேண்டும். அண்மைய பிரதமரின் சந்திப்பில் எமது எண்ணங்களை தெளிவாக அரசுக்கு கூறிவைத்துள்ளோம். நான்கு சபைகளையும் பிரித்து நான்கு பிரதேச செயலகங்களை உருவாக்க வேண்டும். அரசியலுக்காக இனவாதம் பேசி பயனில்லை. இந்த பிரதேச மக்களின் தேவைகளை பெறுவதில் நாங்கள் நியாயமாக நடக்க வேண்டும். எமது பதவிகளை கொண்டு நமது மக்களை நிம்மதியாக வாழவைக்க வேண்டும்.

தேசிய காங்கிரஸின் சிந்தனை எப்போதும் நாட்டின் கரிசனையை இலக்காக கொண்டதாக இருக்கும் அதில் எவ்வித சந்தேகங்களுமில்லை. நாங்கள் எங்களுக்குள் சந்தேகப்பட தேவையில்லை. ஒற்றுமையின் மூலமே நமது தேவைகளை அடைய முடியும். அரசியல்வாதிகள் மக்களை சூடாக்கி அரசியல்செய்வதை நிறுத்த வேண்டும்.


சகோதரர் ஹக்கீமை நம்பி நாங்கள் வியர்வை சிந்தி கஷ்டப்பட்டு வளர்த்த முஸ்லிம் காங்கிரசின் தலைமையை வழங்கினோம். ஆனால் அவர் எமது மக்களின் அபிலாசைகளை மதிக்காமல், எமது மக்களின் தேவைகளை புரிந்துகொள்ளாமல் காலத்தை கடத்திவருகிறார். தாராபுரத்திலிருந்து ஒரு சகோதரர் நஞ்சுபோத்தலை காட்டி அரசியல் செய்து இப்போது தேசிய சத்தியதலைவர் என பெயரெடுத்திருக்கிறார். எமது மக்களின் தேவைகளை அறியாமல் மைதானத்தில் பிளாஸ்டிக் பொருட்களை நிரப்பிவைத்துக்கொண்டு கூவிக்கூவி அரசியல் செய்கிறார். இவற்றை படித்த, தலைவர் அஸ்ரபின் அரசியலை கண்ட மக்கள் நீங்கள் ஆராய வேண்டும்.

தலையில் கழிவை வைத்துக்கொண்டு இறால் சுத்தம் என்பது போல இப்போது கோத்தா ஜனாதிபதியாக இருக்கையில் சஜித்தை பிரதமராக்குவோம் எனும் புதிய கோசத்தை ஆரம்பித்துள்ளார்கள். இவர்களை கோத்தாவின் அரசில் இணைத்துக்கொள்ள வாய்ப்புக்கள் இல்லாமல் போனதும் சம்பந்தமே இல்லாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். மக்களை எல்லாக்காலமும் ஏமாற்ற முடியாது. சத்தியம் நேரம் வரும்போது வெல்லும். கல்முனை விவகாரத்தில் நாங்கள் உண்மைக்கு உண்மையாக இருந்தோம்.

ஒலுவிலில் துறைமுகம் அமைத்தது எமது மீனவர்களின் தேவைக்காகவே. பைசால் காசிம் துறைமுகத்தை உடைக்க போகிறாராம். இப்படி உலகில் எங்காவது துறைமுகத்தை உடைத்ததாக நாம் கேள்விப்பட்டுள்ளோமா ? இது ஒருபுறமிருக்க ஒவ்வொரு ஊராக சென்று அதாவுல்லாவை பற்றி எளிய கதைகளை கூறி மக்களை நம்பவைத்து சிறிய தொகை பணம், கோப்பைகள் போன்றவற்றை கொடுத்து வாக்குகளை பெற்று மக்களை ஏமாற்றுவது.

ஒழுங்கான அரசாங்கத்தை அமைக்கவேண்டுமாக இருந்தால் படிக்காத முஸ்லிங்களுக்கு வாக்குரிமை வழங்கவேண்டாம் என சார் பொன்னம்பலம் ராமநாதன் போன்றோர்கள் பேசியது சரிதானா என சிந்திக்கும் அளவுக்கு தற்கால முஸ்லிம் சமூகத்தின் போக்குகள் இருக்கிறது. படிப்பு என்பது பட்டம் பெறுவது மட்டுமல்ல பொதுவான அறிவும்தான். அந்த அறிவு எம் மக்களிடம் மங்கிக்கொண்டு வருவது போன்றே தெரிகிறது. நாம் உண்மைக்காகவும்,சத்தியத்திற்காகவும் வாழ்பவர்கள். எதற்க்கும் சந்தேகிக்க தேவையில்லை.

கடந்த காலங்களில் நாம் துப்பாக்கி வேட்டுக்களை கேட்டு கொண்டு வாழ்ந்திருக்கிறோம். மூதூரில் அண்மையில் முன்னாள் போராளிகள் பேசியபோது இன்று நாங்கள் நிம்மதியாக குடும்பத்துடன் வாழ்வதற்க்கு காரணமான இருந்த என்னுடைய புகைப்படத்தை கண்டால் மரியாதை செய்வதாக சொன்னார்களாம். அவர்கள் மாவீரர்களாக துயிலாமல் இருக்க காரணமாக எங்களுடைய தீர்மானங்கள் இருந்திருப்பதில் பிழைகள் இல்லை.

எத்தனையோ தாய்மார்கள் தமது பிள்ளைகளை இயக்கங்களுக்கு கொடுத்து விட்டு தவித்திருக்கிறார்கள் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். இங்கு வாழும் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒருதாய் மக்களாக வாழ்ந்திருக்கிறோம். நாங்கள் ஒருமித்து நிம்மதியாக வாழும் படியாக ஒரு யாப்பை பற்றி நாங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். எல்லா மக்களும் சிறப்பாக, நிம்மதியாக வாழவேண்டும்.

தேசிய கீதத்தை சுதந்திரம் கிடைத்த நாள் முதல் தமிழிலும் பாட வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. கடந்த முப்பது வருடங்கள் தேசிய சுதந்திர நிகழ்வை நிம்மதியாக கொண்டாட முடியாமல் தவித்த , தேசிய கொடியை தீக்கிரையாக்கிய வரலாறுகள் இருக்கிறது. உலகம் முழுவதும் ஒரே தேசிய கீதம் இருக்க இலங்கைக்கு மட்டும் இரு தேசிய கீதங்கள் ஏன் எனும் சந்தேகங்கள் வலுக்க காரணமாக எமது தலைமைகளின் செயற்பாடுகள் அமைந்துள்ளது. பிரதமர் மஹிந்த அவர்களை சந்தித்த கூட்டத்தின் போதும் தேசிய கீதத்தை சகல மக்களும் பாடக்கூடியதாக தமிழ் சொற்களையும் இணைத்து ஒரு கீதமாக அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். உண்மைகளை கூறுகின்ற போது யாரும் ஏற்றுக்கொள்வார்கள் . இதனை எம்மால் செய்விக்க முடியும். ஆனால் எமது தலைமைகள் அதர்க்கு வேறு வித அர்த்தங்களை கற்பித்துக் கொண்டிருப்பார்கள் என்றார்.

இந்நிகழ்வில் அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், தொழிலதிபர் ஏ.ஹிபத்துல் ஹரீம், கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் எம்.சம்சுதீன், தேசிய காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், விளையாட்டு அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |