Home » » உலகத் தமிழருக்கு ஒரே ஒரு தேசியத் தலைவர் பிரபாகரன் மட்டுமே! மன்னாரில் கருணா

உலகத் தமிழருக்கு ஒரே ஒரு தேசியத் தலைவர் பிரபாகரன் மட்டுமே! மன்னாரில் கருணா


இறுதி யுத்தத்தின் பின் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாகவே நான் யுத்தம் இடம்பெற்ற இடத்திற்கு சென்று சடலத்தை அடையாளப்படுத்தினேனே தவிர அதற்கு முன் நான் ஒரு போதும் அப்பகுதிக்கு செல்லவில்லை என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமுர்த்தி முரளிதரன்(கருணா) தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இன்றையதினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இறுதி யுத்தத்தில் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டுள்ளதாக கூறுகின்றார்கள். நீங்கள் மட்டும் சென்று உறுதிபடுத்தி கூறினால் மட்டுமே நான் நம்புவேன் என அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ என்னிடம் கூறினார்.
நான் அவ்வாறு நடந்திருக்கக்கூடாது என நினைத்து களத்திற்குச் சென்றேன். அங்கு சென்று பார்த்தேன் அவர் தான். ஆனால் அதனைக்கூட எங்களுடையவர்கள் உரிமை கோருகின்றார்கள் இல்லையே.


அவர் வருவார், அவர் வருவார் என அவரை வெளி நாட்டில் விற்றுக்கொண்டே இருக்கின்றார்கள். அவர் செய்தது ஒரு வீரத்தியாகம். இன்று நாங்கள் சுபாஸ் சந்திரபோஸ் அவர்களை எப்படி பாராட்டுகின்றோம். ஆனால் இன்னும் இவரை நாங்கள் மாவீரர் பட்டியலில் சேர்க்கவில்லை. சேர்த்தால் அது ஒரு வரலாறு.
நேற்று முளைத்த ஒரு அரசியல் தலைவர் ஒருவரை மேடையில் வைத்து ஒருவர் பேசுகின்றார் எங்களுடைய அண்ணன் தேசியத் தலைவர் இங்கு இருக்கின்றார் தமிழ்த் தலைவன் என உரை போகின்றது.
ஆனால் அவர் அரசியலுக்கு வந்து மூன்று வருடங்களும் இல்லை. உலகத்திலேயே தமிழனுக்கு ஒரே ஒரு தேசியத் தலைவன். அதுதான் தலைவர் பிரபாகரன். வாரவன் போரவன் எல்லாம் தலைவனாகிட முடியுமா? தேசியத் தலைவருடன் நான் 30 வருடங்கள் இருந்துள்ளேன்.
எனவே அன்றைய போராட்டங்களை இன்றைய காலகட்டத்தில் அரசியல் வடிவத்தில் கொண்டு செல்ல வேண்டிய நிலையில் உள்ளோம். மாற்றம் ஒன்றை உருவாக்க வேண்டும். நேரத்திற்கு நேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றது. அதற்கு பின் நாங்கள் ஓடத் தொடங்கினோம் என்றால் பிழைத்து விடும்.
எனவே மக்களாகிய நீங்கள் நிதானமாகவும், கவனமாகவும் சிந்தியுங்கள். நாங்களும் தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணி என்கின்ற கட்சியை தொடங்கினோம். உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சுமார் 70 பேர் உட்பட உறுப்பினர்கள் பலர் இருக்கின்றார்கள். இக்கட்சியை வடக்கு, கிழக்கு ரீதியாக வளர்க்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்து போகும் என எனக்கு நன்றாக தெரியும். அக்கட்சி ஏற்கனவே உடைந்து போய் விட்டது. விக்னேஸ்வரன் ஒரு பக்கம், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஒரு பக்கம் என பிரிந்து கிடக்கின்றது.
எனவே எமது கட்சியை உறுதியான கட்சியாக வளர்த்து எடுக்க வேண்டும். மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த போது சில திட்டங்களை அவருடன் கதைத்தேன். அப்போது சிறிலங்கா சுதந்திர கட்சியின் உப தலைவராக நான் இருந்தேன்.
இதுவரை ஒரு தமிழனும் அக்கட்சியில் அப்பதவியில் இருக்கவில்லை. எனினும் எனக்கு தொடர்ந்தும் அப்பதவியில் இருக்க விருப்பம் இல்லை. மைத்திரியை ஜனாதிபதியாக்க வேண்டும் என சம்பந்தன் தலைமையிலானோர் முயற்சி செய்தனர்.
ஜனாதிபதியாகவும் கொண்டு வந்தனர். ஆனால் ஒரு அரசியல் கைதியைக்கூட மைத்திரி, ரணில் ஆகியோர் விடுதலை செய்யவில்லை. சுமார் 334 அரசியல் கைதிகள் மாத்திரமே உள்ளனர். 12 ஆயிரம் முன்னாள் போராளிகளை மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியில் புனர்வாழ்வு வழங்கி நாங்கள் விடுதலை செய்தோம்.
அவர்களின் ஆட்லரி இயக்க தலைவரில் இருந்து பெரிய பெரிய தளபதி எல்லாம் வெளியில் இருக்கின்றார்கள். இல்லாது விட்டால் அவர்களை எல்லாம் சுட்டுத்தள்ளி இருப்பார்களே. குறித்த கால கட்டத்தில் அரசியல் கைதிகளின் கதையே வரவில்லை.
அவர்கள் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்த போதே இப்படியான சிலர் உள்ளே இருக்கின்றார்கள் என்பது தெரியவந்தது. எனினும் தற்போதைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ உறுதி வழங்கியுள்ளார் அவர்களை விடுவிப்பது என. எனவே அவர்கள் விடுவிக்கப்படுவார்கள். சட்டச்சிக்கல் இருக்கின்றது. எனினும் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள். அதற்கான வாய்ப்புக்கள் உள்ளது.
சிறுபான்மை மக்கள் எனக்கு வாக்களித்தார்களோ இல்லையோ. சிறுபான்மை இன மக்களையும் இணைத்துக் கொண்டு தான் எங்களுடைய பயணம் தொடரும் என அவர் தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகாவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க முடியும் என்றால் ஏன் கோத்தாவிற்கு வாக்களிக்க முடியாது? சரத் பொன்சேகா நேரடியாக சீருடையுடன் சண்டை பிடித்தவர்.
எங்களவர்களை கொன்றதில் சரத் பொன்சேகாவுக்கும் பங்கு உள்ளது. எனினும் அன்றைய காலகட்டத்தில் மஹிந்த ராஜபக்ஸ வடக்கு கிழக்கு மக்களை கைவிடவில்லை. பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தார் என குறிப்பிட்டுள்ளார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |