Home » » கல்முனை பிரதேச செயலக விடயத்தில் எனது ஒத்துழைப்பு ஹரீஸுக்கு தெரியும்! ஹிஸ்புல்லா பகிரங்கமாக தெரிவிப்பு

கல்முனை பிரதேச செயலக விடயத்தில் எனது ஒத்துழைப்பு ஹரீஸுக்கு தெரியும்! ஹிஸ்புல்லா பகிரங்கமாக தெரிவிப்பு

கல்முனை மாநகர பிரச்சினையை ஒட்டு மொத்த சமூகத்தின் பிரச்சனையாக கொண்டுவந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் எடுத்த முயற்சிகளுக்கு நான் ஒத்துழைப்பை வழங்கி இருக்கிறேன் என ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

கல்முனை பிரதேசத்தில் நேற்று இடம் பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் கல்முனைப் பிரதேசத்தில் பிரச்சனை ஏற்பட்ட போதெல்லாம் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் அவர்களுடன் இணைந்து இந்த மண்ணை பாதுகாக்க எந்தவிதமான அதிகாரத்தை பயன்படுத்த முடியுமோ முடியுமானவரை வழங்கியிருக்கிறேன்.
இந்த கல்முனை மண்ணை பாதுகாக்க உங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்கள் எடுத்த முயற்சிகள் ஏராளமானவை. இந்த கல்முனை மண்ணில் இன்னும் ஒரு பிளவோ, இன்னும் ஒருவர் கூறுபோட்டு இந்த இலங்கையை நிரந்தர காஷ்மீர் போன்ற சூழலை கல்முனை மண்ணில் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் முஸ்லிம் சமூகம் தெளிவாக இருக்கின்றோம்.
கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை என்பது கல்முனை மாநகர பிரச்சினையை மாத்திரமல்ல இது ஒட்டு மொத்த சமூகத்தின் பிரச்சனை என்று ஹரீஸ் எடுத்த முயற்சிகளில் நான் ஒத்துழைப்பை வழங்கி இருக்கிறேன் என்பது அவருக்கு நன்கு தெரியும்.
எதிர்காலத்தில் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் புதிய அரசியல் சூழ்நிலை ஏற்படும். அப்போது உங்கள் பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில் மூன்று ஆண்டுகளுக்குள் இந்த கல்முனை நகரம் முழுமையாக கட்டியெழுப்பப்படும் என்பதை உறுதிபடக் கூறுகிறேன்.
வெளிநாட்டு நிதி உதவியுடன் சாய்ந்தமருது கல்முனை ஒலுவில் பிரதேச மீனவர்களின் நலன் கருதி ஒரு மீன்பிடி துறைமுகத்தை அமைத்து தருவேன் என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
கடந்த மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் பேருவளை, அளுத்கமை சம்பவங்களினால் மஹிந்த அரசை வீட்டுக்கு அனுப்பி புதிய அரசாங்கத்தை கொண்டு வந்தீர்கள். குறிப்பாக 12 இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை இந்த நல்லாட்சி அரசாங்கம் பெற்றுக்கொண்டு ஆட்சிபீடம் ஏறியது.
இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் நான்கரை ஆண்டுகளில் 105 பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டு, மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் எரிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடிகளை முஸ்லிம் சமூகம் சந்தித்தது.
பேருவளை, அளுத்கம பிரச்சினைகளைச் சொல்லிச்சொல்லி ஆட்சிக்கு வந்த மைத்திரிபால சிறிசேன ரணில் விக்ரமசிங்க அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்குவதில் தயக்கம் காட்டினர்.
புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சர் என்ற அடிப்படையில் இரண்டாவது தடவையாக நாடாளுமன்றத்தில் அறிக்கைகளை சமர்ப்பித்து பல போராட்டங்களை நடத்தி அந்த மக்களுக்கு முழு நஷ்டஈட்டையும் பெற்றுக் கொடுத்தேன்.
ஆனால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் தங்களது போராட்டத்தை தோற்கடித்து அரசை தோற்கடிக்க வேண்டும் என்று முஸ்லிம் சமூகத்தை விட வேகமாக தமிழ் சமூகம் செயற்பட்டது.
ஆனால் தமிழ் தலைமைகள் ரணிலிடம் ஓடிப்போய் ஆதரவு கொடுக்கவில்லை. மாறாக ரணில் விக்ரமசிங்க அவர்களை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து தங்களது ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்தனர். அதை தற்போது செயல்படுத்தியும் வருகின்றனர்
இந்தக் கோரிக்கைகளை தமிழ் பிரதேசங்களில் உள்ள 98க்கு மேற்பட்ட அரச படையினரின் முகாம்கள் அகற்றப்பட்டு அந்த மக்களுக்கு 12 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் மீட்கப்பட்டது,
யாழ் பலாலி சர்வதேச விமான நிலையம் , மீன்பிடி துறைமுகங்கள், யாழ் புகையிரத சேவை, போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டு திட்டங்கள் என தமிழ் தலைமைகள் பேரம் பேசி தங்களுடைய சமூகத்திற்கு பெற்றுக்கொடுத்திருக்கின்றனர்.
ஆனால் முஸ்லிம் தலைமைகள் இந்த சந்தர்ப்பங்களையெல்லாம் தவறவிட்டுள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |