ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவை எதிர்கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்ளுமாறு அக்கட்சியைச் சேர்ந்த 57 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து கையெழுத்து பதிவு செய்து கடிதமொன்றை சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இந்த கடிதம் தொடர்பாக சபாநாயகர் கருஜயசூரிய இன்றைய தினம் பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியை தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நெருக்கடி நிலைமை வலுத்துவருகின்றது.
கட்சியின் தலைமைத்துவத்தையும், எதிர்கட்சித் தலைவர் பதவியையும் அக்கட்சியின் முன்னாள் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாஸ கோரிவரும் நிலையில், இதுவரை அப்பதவிகளை கட்சித் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விட்டுக் கொடுக்கவில்லை. இதன் காரணமாக சமரசப் பேச்சுக்களுக்கான ஏற்பாடுகள் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட போதிலும், அந்த பேச்சை சஜித் பிரேமதாஸ நிராகரித்துவிட்டார்.
இதன் காரணமாக கட்சிக்குள் இருக்கும் நெருக்கடி நிலை தொடர்ந்தும் உக்கிரமடைந்துள்ளது. இந்த நிலையில், எதிர்கட்சித் தலைமை பதவியை சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கும்படி ஐக்கிய தேசியக் கட்சியின் 57 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து கையெழுத்து பதிவு செய்து கடிதமொன்றை சபாநாயகருக்கு நேற்று மாலை அனுப்பிவைத்துள்ளனர்.
இந்த உத்தியோகபூர்வ கோரிக்கை கடிதத்தின் பிரதியை சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் அகிலவிராஜ் காரியவசத்திற்கு இன்று வியாழக்கிழமை அனுப்பிவைத்திருக்கின்றார்.
வெகுவிரைவில் எதிர்கட்சித் தலைவர் யார் என்பதை கட்சிக்குள் முடிவு செய்து தனக்கு அறிவிக்கும்படி சபாநாயகர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். எதிர்கட்சித் தலைவர் யார் என்பதை அவ்வாறு விரைவில் தனக்கு அறியப்படுத்தும் பட்சத்தில், அடுத்த நாடாளுமன்ற அமர்வில் அதனை அறிவிப்பதற்கும் இலகுவாக இருக்கும் என்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments