Home » » தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கப் போகின்றார்கள் -சிறிமதன்

தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கப் போகின்றார்கள் -சிறிமதன்

ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் பிரதான மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களும் தங்கள் வாக்குறுதிகளை பெரும்பாண்மையினரிடம் அள்ளி வீசிக்கொண்டு இருக்கின்றார்கள்.ஆனால் தமிழ் மக்களின் பிரதான அடிப்படை கோரிக்கைகள்  தொடர்பாக எவரும் வாய்திறந்ததாக தெரியவில்லை.

தமிழ் மக்கள் மத்தியில் ஜனாதிபதித் தேர்தல் பெரிதாக பேசப்படவில்லையென்றாலும் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் ஜனாதிபதித் தேர்தலை பெரியவிடயமாக பார்க்கின்றார்கள். கடந்தகாலத்தில் ஜனாதிபதி வேட்பாளர்கள் கொடுத்த வாக்குறுதிகள் ஏராளம் காற்றில் பறக்கவிடப்பட்டதே வரலாறு இம்முறை ஒன்றும் புதிதாக நடந்துவிடப்போவதில்லை என்பதே தமிழ் மக்களின் நிலைப்பாடக இருக்கின்றது.

இலங்கையில் ஜனாதிபதியாக வந்தவர்கள் எல்லோரும் ஒரு இனம் சார்ந்த ஜனாதிபதியாகவே இருந்து வந்தார்கள் இனியும் அவ்வாறுதான் இருக்கப்போகின்றார்கள் இது எழுதப்படாத விதி.பெரும்பாண்மை மக்களை பகைத்து எந்த ஜனாதிபதி வேட்பாளர்களாலும் இலங்கையில் ஆட்சி செய்யமுடியாது.

இந் நிலையில் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் பங்கு எவ்வாறு அமையும் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. ஒரு பக்கத்தில் ஐந்து கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை 13 கோரிக்கைகளாக முன்வைத்து பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களிடமும் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடமும் அதை சமர்ப்பித்து அவர்களின் வழங்கும் பதிலை வைத்தே முடிவெடுப்போம் என கூறுகின்றனர்.மறுபுறத்தில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்தி தமிழ் மக்களின் நிலைப்பாட்டை சர்வதேச சமூகத்திற்கு தெரியப்படுத்துவதற்கு தமிழர் ஒருவருக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் இன்னொரு சாரார் தேர்தலை புறக்கணிக்கவேண்டும் எனவும் கூறுகின்றனர்.

இந்நிலைகளை நோக்கும்போது தமிழ் மக்களிற்கான தலைமைத்துத்திற்கு இன்னும் வெற்றிடம் இருப்பதுபோலவே தோன்றுகின்றது.அரசியல் கட்சி என்பது மக்களுக்கு பின்னால் செல்வதல்ல மக்களை வழிநடத்துவதே அரசியல் கட்சிக்குரிய வரைவிலக்கணமாகும்.

தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினையை தீர்ப்பதற்கு இலங்கையை ஆளுகின்ற ஜனாதிபதியால் மட்டும் முடிகின்ற காரியமல்ல இலங்கையின் ஜனாதிபதியையும் அரசியல்வாதிகளையும் தீர்மானிப்பது வெளிநாட்டு தூதுவராலயங்களே என்பது நிதர்சனமான உன்மை.தமிழ் மக்களின் உரிமை பிரச்சினைக்காக எந்த நாடும் முண்டி அடித்துக்கொண்டு உதவப்போவதில்லை தங்கள் நாட்டின் நலன் இல்லாத எந்தவிடயங்களிலும் உலகநாடுகள் தலையிடப்போவதில்லை என்பதுதான் உண்மை.

தமிழரின் உரிமைக்காக உலக வல்லரசு சக்திகளை எதிர்த்து தமிழர்கள் போரடியபோது அவை எமக்கு எதிராக திரும்பி எம்மையே அழித்தது என்பது வரலாறு அந்தவகையில் சர்வதேச சக்திகளிடமிருந்துதான் எமக்கு தீர்வு வரும்மென்பதும் இலவுகாத்த கிளியின் செயற்பாட்டுக்கு ஒப்பாகும்.சர்வதேசத்தின் நலனும் தமிழ் மக்களின் நலனும் எப்பொழு ஒரு புள்ளியில் சந்திக்கின்றதோ அப்போது தான் எமக்கான ஒரு தீர்வு கிடைக்கும் அதுவரைக்கும் தீர்வு என்பது வெறும் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தேர்தல் பிரச்சாரங்களிலுமே காணப்படும்.

ஜனாதிபதித் தேர்தலை பொறுத்தவரை இலங்கை மக்கள் என்பதை தாண்டி சிங்கள மக்களுக்கான தலைமையை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலாகவே பார்க்கப்படுகின்றது. இதில் தமிழ் மக்களை வெறும் வாக்குகளின் எண்ணிக்கைகளாவே அவர்களால் உணரப்படுகின்றது.

இவ்வாறானதொரு நிலையில் தமிழ் மக்கள் எவ்வாறு இவ் தேர்தலை எதிர்கொள்ளப் போகின்றார்கள் என்பது தெரியவில்லை தமிழர்களின் கோரிக்கைகள் தொடர்பில் பரசீலிக்கப்படும் என்று கூறும் எதாவது ஒரு கட்சி சார்ந்து வாக்களிக்கப் போகின்றார்களா? அல்லது இத் தேர்தலின் மூலம் தமிழ் மக்களுக்கு எந்தவித தீர்வும் கிட்டபோவதில்லை என்று தேர்தலை புறக்கணிக்கப் போகின்றார்களா? அல்லது தமிழரின் பிரச்சினையை சர்வதேச சமூகத்திற்கு எடுத்து சொல்லப்போகின்றோம் என தமிழர் ஒரு வருக்கு வாக்களிக்கப் போகின்றார்களா? அல்லது மூன்றாவது ஏதும் அதிர்ச்சிகர முடிவை தமிழர்கள் தீர்மானித்து வைத்திருக்கின்றார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.  
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |