Home » » சாய்ந்தமருது தற்கொலைக் குண்டுத் தாக்குதல்! விஷேட தடயவியல் பொறுப்பதிகாரி வாக்குமூலம்!

சாய்ந்தமருது தற்கொலைக் குண்டுத் தாக்குதல்! விஷேட தடயவியல் பொறுப்பதிகாரி வாக்குமூலம்!


கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஐ.என் றிஸ்வான் முன்னிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி சாய்ந்தமருது பகுதியில் வொலிவேரியன் கிராமத்தில் இடம்பெற்ற இரு பிரதான குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு காரணமாக மரணமானவர்களின் மரணவிசாரணை தொடர்பான வழக்கு நேற்றைய தினம் இடம்பெற்றது.

இதன் போது குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரி ஒருவரின் நெறிப்படுத்தலுடன் பல்வேறு கேள்விகள் தொடுக்கப்பட்டது.

பிற்பாடு பொலிஸ் பரிசோதகர் ஆர்.எல் சமரவீரவிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டன.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரி கேள்வி: குறித்த இடத்திற்கு நீங்கள் கடமைக்காக வரும் போது என்ன இடம்பெற்றிருந்தது?

பொலிஸ் பரிசோதகர் ஆர்.எல் சமரவீர பதில்: கடமைக்காக நான் சம்பவ இடத்திற்கு சென்ற போது எரிந்தும் எரியாத நிலையில் பாதிக்கப்பட்ட வீட்டினுள் சடலங்களையும் வீட்டின் முன்பாக உள்ள பிரதான வீதியில் ஒரு சடலம் துப்பாக்கியுடன் கிடப்பதை அவதானித்தேன். எனவே தான் இங்கு துப்பாக்கி சூட்டு சம்பவமும் இடம்பெற்றதை அறிந்து கொண்டேன் என அம்பாறை பொலிஸ் விசேட தடயவியல் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.எல் சமரவீர தெரிவித்தார்.

இதன்போது அவ்விடத்தில் தடயப்பொருட்களை சேகரித்ததுடன் காயமடைந்த நிலையில் இருந்த ஒரு பெண் மற்றும் குழந்தை ஆகியோரை மீட்டு அம்பாறை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தோம். பின்னர் வைத்தியசாலையில் சிகிச்சையின் பின்னர் அவர்களிடம் ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்டோம்.

சம்பவம் நடந்த வீடு அதை அண்டிய வெளியிடங்கள் உள்ளடங்கலாக 17 பேர் மரணமடைந்துள்ளதாக எமக்கு அறியக்கிடைத்தது. இதை உறுதிப்படுத்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவரை நாடினோம். அவரும் சாட்சியாக மாறி இறந்தவர்களின் பெயர்களையும் உறவு முறைகளையும் எங்களிற்கு தெரிவித்தார்.

அவர் நீதவான் நீதிமன்றில் கூறிய தகவல்களாவன,

முஹமட் ஹாசீம் முகமட் றில்வான் (முகமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின் சகோதரர்)

முகமட் நஸார் பாத்திமா நப்னா ( முஹமட் ஹாசீம் முகமட் றில்வானின் மனைவி)

முஹமட் ஹாசீம் முகமட் ஜெய்னி/முகமட் சின்னா மௌலவி( முஹமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின் சகோதரர்)

ஆதம்லெப்பை பாத்திமா அப்ரீன் ( முஹமட் ஹாசீம் முகமட் ஜெய்னியின் மனைவி)

ஹயாது முஹமட் ஹாசீம் (முஹமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின் தந்தை)

அப்துல் சத்தார் சித்தி உம்மா( முஹமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின் தாய்)

முகமட் ஹாசீம் ஹிதாயா( முஹமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின் சகோதரி)

இப்றாகிம் லெப்பை முஹமட் றிசாட் (முஹமட் ஹாசீம் முகமட் றில்வானின் மைத்துனரும் முகமட் ஹாசீம் ஹிதாயாவின் கணவர்)

அப்துல் ரஹீம் பிரோஸா (சியோன் தேவாலய தற்கொலை குண்டுதாரி ஆசாத்தின் மனைவி)

மகேந்திரன் புலஸ்தினி /சாரா ஜெஸ்மி (நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலய தற்கொலை குண்டுதாரி முகமட் ஹஸ்தூன் என்பவரின் மனைவி)

அகமது லெப்பை முகமட் நியாஸ்(தேசிய தௌஹீத் ஜமாத் பிரதான உறுப்பினர்)

முகமட் றில்வான் மீரா ( முஹமட் ஹாசீம் முகமட் றில்வானின் மகள்)

முகமட் றில்வான் மருவான் சஹீட் ( முஹமட் ஹாசீம் முகமட் றில்வானின் மகன்)

முகமட் ஜெய்னி அமாயா( முஹமட் ஹாசீம் முகமட் ஜெய்னியின் மகள்)

முகமட் இமாம் ஹாசிம்( முஹமட் ஹாசீம் முகமட் ஜெய்னியின் மகன்)

முகமட் சஹ்ரான் வாசீட் ( முஹமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின் மகன்)

மற்றுமொரு சடலம் இணங்காணப்படவில்லை இது தவிர இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் முகமட் சஹ்ரான் ருசைதா ( முஹமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின் மகள்) அப்துல் காதர் பாத்திமா ஹாதியா /சித்தியா (முஹமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின் மனைவி) மேற்குறித்த 17 பேர் உள்ளடங்கலாக மரணமாகியதுடன் காயங்களுக்கு உள்ளாகினர்.

அத்துடன் இவ்வனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வீட்டின் முன்னால் உள்ள பிரதான பாதையில் துப்பாக்கியுடன் ஒருவர் சடலமாக காணப்பட்டார். அதேநேரம் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்று மரணம் ஏற்பட்டிருக்கலாம் என உணர்ந்தேன். மேலும் பாதிக்கப்பட்ட வீட்டினை அவதானிக்கும் போது உள்ளே எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் 2 பிரதான குண்டு வெடிப்புகளால் ஏற்பட்ட தீ காரணமாக மரணங்கள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.

இவ்வாறு இறந்தவர்களது பிரேத பரிசோதனை யாவும் ஏப்ரல் 28,29 ஆம் திகதிகளில் அம்பாறை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ருச்சிர நதீரவினால் நடாத்தப்பட்டது. அதன் பின்னர் மரணமானவர்களது சடலங்கள் அம்பாறை மாவட்டம் புத்தங்கல பகுதியில் அமைந்துள்ள பொது மயானத்தில் 2019/5/2 அன்று அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டது என குறிப்பிட்டார்.

மேலும் குறித்த பொலிஸ் பரிசோதகரின் வாக்கு மூலம் நிறைவடைந்ததை அடுத்து எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதிவரை குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |