ஸ்ரீலங்காவில் கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது நிபந்தனைகளின்றி ரணில் - மைத்திரி அரசாங்கத்தை ஆட்சிபீடம் ஏற்றுவதற்கு முழுமையாக ஒத்துழைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது அரசாங்கம் தம்மை ஏமாற்றி விட்டதாக நீலிக் கண்ணீர் வடித்து தங்களுக்குள்ளேயே குமுறுவதாக இலங்கை மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் விஸ்ணு காந்தன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை பல்வேறு நெருக்கடிகளில் இருந்தும் பாதுகாத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமே தமிழ் மக்கள் தமது எதிர்காலம் தொடர்பில் கேள்வியெழுப்ப வேண்டும் எனவும் விஸ்ணு காந்தன் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இலங்கை மக்கள் தேசியக் கட்சியின் ஊடக சந்திப்பொன்று கொழும்பு - என்.எம்.பெரேரா மண்டபத்தில் இன்றைய தினம் நடைபெற்றது.
ஸ்ரீலங்காவின் மூன்று பிரதான சிங்களக் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் அவர்களில் ஒருவரை நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டிய நிலைக்கு வடக்கு கிழக்கு தமிழ் மக்களும் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் விஸ்ணு காந்தன், கடந்த காலங்களில் நிபந்தனைகளின்றி தமிழ் மக்களை வாக்களிக்க வைத்தமையே இதற்கு பிரதான காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தம் மற்றும் அதற்கு பின்னராக காலப்பகுதியிலும் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுவரும் காரணத்தாலேயே தமிழ் மக்கள் சிங்களத் தலைவர்கள் எவருக்கும் வாக்களிக்க தயங்குவதாகவதாகவும் இலங்கை மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் விஸ்ணு காந்தன் கூறுகின்றார்.
எவ்வாறாயினும் தமிழ் மக்கள் தமது வாக்குப் பலத்தை தகுந்த நேரத்தில் பயன்படுத்தாது ஒதுங்கியிருந்தால் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் தேவையற்ற ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் எனவும் இலங்கை மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் எச்சரித்துள்ளார்.
0 Comments