கணவனின் மோசமான நடவடிக்கையால் மூன்று பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, மனைவி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் தமிழகம் நீலகிரி மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,
நீலகிரி மாவட்டம் கூடலூர், ஸ்ரீமதுரை சேமுண்டி பகுதியைச் சேர்ந்தவர், முருகன் சாரதி. இவரது மனைவி வினிதா [34]. இவர்களுக்குத் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில் அபித்ஷா 13, அனுஸ்ரீ 10, அக்க்ஷதா 8 ஆகிய மூன்று பெண் குழைந்தைகள் உள்ளனர். மகிழ்ச்சியாக இருந்த இவர்களின் குடும்பத்தில், முருகனின் குடிப்பழக்கம் மற்றும் வேறு ஒரு பெண்ணிடம் இருந்த நெருங்கம் ஆகியன, கணவன்-மனைவி இடையே விரிசலை ஏற்படுத்தியது.
கணவனின் மோசமான செயலை வினிதா கண்டித்துள்ளார். ஆனால், முருகன் மாறவில்லை. முருகனின் நடவடிக்கைகளால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான வினிதா, ஒருகட்டத்தில் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார். தான் இறந்தால் மூன்று பெண் குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் என்ற பயத்தில் அந்த விபரீத முடிவை எடுத்தார். கடந்த 4-ம் தேதி, குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் விஷம் அருந்தியுள்ளார். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர், வினிதா மற்றும் மூன்று மகள்களையும் உடனடியாக கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துனர். மேல்சிகிச்சைக்காக நால்வரும் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இதில், சிகிச்சை பலனின்றி தாய் வினிதா உயிரிழந்தார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், “குடும்பத் தகராறு காரணமாக 3 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து, தாயும் விஷம் அருந்தியுள்ளார். ஆனால், தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழக்க, குழந்தைகள் மூவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். தற்கொலைக்குக் காரணமாக இருந்த வினிதாவின் கணவர் முருகனைக் கைதுசெய்துள்ளோம்’' என தெரிவித்திருந்தனர்.
மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், “இறந்துபோன வினிதா, அதிக விஷத்தை அருந்தி, தன் மூன்று மகள்களுக்கும் மருந்தின் அளவை குறைத்திருக்கக்கூடும். இதனால், மூன்று பெண் குழந்தைகளும் அவரின் பாசத்தால் உயிர் பிழைத்தனர்” என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments