- நூருல் ஹுதா உமர் -
கடந்த காலங்களில் மக்கள் தாமாகவே முன்வந்து எடுத்த பிழையான தீர்மானம் இப்போது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஊடகங்களின் செய்திகள் மூலம் மக்களின் தீர்மானம் பிழையான முறையில் எடுக்கப்பட்டதே நாட்டின் இன்றைய நிலைக்கு காரணம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.
நேற்று (01) மாலை அக்கரைப்பற்றில் நடைபெற்ற விருது விழாவொன்றில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ்,
எப்போதும் இல்லாதது போன்று இன்றைய காலகட்டம் மிக முக்கியமான காலகட்டமாக மாறியிருக்கிறது. ஆட்சியை மாற்றுகின்ற தேர்தல் போன்று எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் முக்கியத்துவம் பெற்றிருக்கின்ற இந்த காலகட்டத்தில் மிக நிதானமாக சிந்தித்து எமது சமூகம் செயலாற்ற வேண்டி இருக்கிறது. ஊடகங்களின் வாயிலாக பலரையும் விளம்பரப்படுத்தலாம். அதுதான் எமது சரியான தெரிவு என்று பின்னால் செல்பவர்களாக நாங்கள் இருக்க முடியாது. ஐ.தே.க. யிலிருந்து இப்போது பலரும் வேட்பாளராக வரமுடியும் என அவர்கள் சார்ந்த கருத்துக்கள் இப்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் ஐ.தே.கட்சிக்கு பிரதானமாக முட்டுக் கொடுக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை சொல்கிறது ஐ.தே.கட்சி சார்பிலான வேட்பாளராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க வர வேண்டும் என்று. இந்த செய்தியிலிருந்து முஸ்லிம் சமூகம் நிறையவே ஆழமாக சிந்திக்க வேண்டும்.
நாடே வேறுதிசைக்கு தயாராகிக்கொண்டிருக்க மக்கள் எல்லோரும் மாற்றுதெரிவை பேசிக்கொண்டிருக்கும் போது சுமந்திரன், சம்பந்தன் போன்ற தமிழ் தலைமைகள் பிரதமரை முன்னிறுத்தி பேச காரணம் என்ன? தமிழ் தலைமைகள் அவர்களின் நீண்டகால போக்குடைய சில விடயங்களை இலக்குவைத்து அவர்களின் அரசியல் காய் நகர்த்தல்களை செய்கிறார்கள். ஆனால் முஸ்லிங்களாகிய எமக்கு சமூகம் ரீதியான எந்த நோக்கும் இல்லை. 2015 இல் முஸ்லிம் சமூகம் விட்ட வரலாற்று தவறில்தான் இன்றும் நாம் நின்றுகொண்டிருக்கிறோம்.
இன்னும் சில வாரங்களில் தேர்தல் அறிவிக்கப்பட இருக்கும் இந்த சூழ்நிலையில் முஸ்லிங்களின் இலக்குகள் பற்றி எம்மிடம் எந்த வித ஆயத்தங்களுமில்லை. தீர்மானங்களோ அல்லது கருத்தாடல்களோ இல்லாமல் தான் இருக்கிறோம். இந்த பொழுதுகளில் நாங்கள் எமது கட்சியை பாதுகாப்பதற்கே போராடு வேண்டியிருக்கிறது. திருகோணமலையில் அந்த மக்களுக்கு சகல தகுதியும் இருந்தும் அந்த மக்களின் தேவைகளை நேரடியாக எதிர்த்து தடுக்கிறார்கள். மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரதேச அரசியல்வாதிகளும், பள்ளிவாசல் முக்கியஸ்தர்களும் எம்மை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கூறியபோது மிக வேதனையாக இருந்தது.
மக்களின் பிரச்சினையை தீர்க்கமுடியாத சூழலில் இருப்பதை எண்ணி மிகவும் வேதனைப்படுகிறேன். தமது ஊரில்,தனது சொந்த காணியில் மக்கள் வாழமுடியாத சூழ்நிலை உருவாகப்போவது கண் கூடாக தெரிந்தும் அதற்கான தீர்வை பெற முடியாமல் இருக்கிறது. எல்லோரும் அறிந்த கல்முனை பிரச்சினையை இப்போது நாங்களே இருந்து பேசி சரியான முறையில் மத்தியஸ்தம் செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டும் இருக்கிறோம். இப்படி பல சிக்கல்கள் நிறைந்த ஒரு காலகட்டத்திலையே நாம் வாழ்கிறோம் -என்றார்.
இந்நிகழ்வில் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில், முன்னாள் மாகாண சபை அமைச்சர் எம்.எஸ்.ஸுபைர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம், உள்ளுராட்சி மன்ற தலைவர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
UMAR LEBBE NOORUL HUTHA UMAR
BBA (HRM), Dip.In. Journalism, IBSL, ICDL
+94 766735454 / +94 757506564
0 Comments