Home » » கூட்டமைப்பின் ஒற்றுமையின்மைக்குக் காரணம்

கூட்டமைப்பின் ஒற்றுமையின்மைக்குக் காரணம்ஒற்றுமை குறைந்தால் பலத்தை இழப்போம். என்று எச்சரித்திருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன்

"தமிழ்த் தேசியக்கூட்டமைப்பில் இருந்து நாங்கள் யாரையும் விலகிப் போகுமாறு கூறவில்லை, விலகிப் போகின்றவர்களை நாங்கள் பிடித்து எம்முடன் கட்டி வைக்கவும் முடியாது" - எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார்

ஒருவகையில் பார்த்தால் அவர் கூறுவது சரியாக இருந்தாலும், அப்படிப் பலரும் விலகிப் போவதற்குக் காரணம் யாது என்பதுதான் நோக்கப்பட வேண்டும். யாரையும் விலகிப் போக வேண்டும் என்று வற்புறுத்தி விலக்குகின்ற வேலை நடக்காமல் இருக்கலாம். ஆனால் ஆள்கள் தாமாக விலகிப் போகக் கூடிய களச் சூழலை ஏற்படுத்தி,அதன்மூலம் அவர்களை வெளியேற்றவைக்கலாம். இதுதான் கூட்டமைப்பில் நடக்கின்றது என்பதைப் கூட்டமைப்பின் தலைமை - குறிப்பாக சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராசா போன்றோர் உணரவேண்டும் ஒப்புக்கொள்ள வேண்டும்  ஏற்றுத் திருந்த முற்பட வேண்டும்.

ஒருவகையில் பார்த்தால் கூட்டமைப்பின் நிலைமை ஒட்டகத்துக்கு இடம் கொடுத்த கதை போன்றதாகிவிட்டது. யுத்த நெருக்கடி, போரில் சம்பந்தப்பட்ட தரப்புகளின் அச்சுறுத்தல் ஆகியவற்றுக்கு மத்தியில், மிலேனியத்தின் ஆரம்பத்தில் துணிந்து கூட்டமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுத்தவர்கள் பலரும் இன்று கூட்டமைப்பில் இல்லை. இடையில் ஒண்டவந்தவர்களின் கூடாரமாகி விட்டது கூட்டமைப்பு என்பதுதான் யதார்த்தம்,

இப்படி மாறுவதற்கு இடமளித்துப் பல்லிளித்துப் பார்த்திருந்த மாவை சேனாதிராசா போன்ற பொறுப்பற்ற தலைவர்களே இந்த ஒற்றுமைச் சிதைவுக்குக் காரணம் எனலாம். யாரையும் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுமாறு யாரும் கூறவில்லை என்பது உண்மைதான். ஆனாலும் பலரும் தாமாகவெளியேறுவதை தவிர வேறு வழியில்லை என்ற இக்கட்டுக்குள் தள்ளப்படும் சூழ்நிலை சில தரப்புகளால் - குறிப்பாக கூட்டமைப்பின் தலைமைக்கு நெருக்கமான தரப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வந்தன . முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பது வெள்ளிடை மலை.

சுரேஷ் பிரேமச்சந்திரன், பேராசிரியர் சிற்றம்பலம், நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன், அனந்தி சசிதரன், சிவகரன், அருந்தவபாலன்,சிவசக்தி ஆனந்தன் என்று இந்தப் பட்டியல் நீண்டது. இன்னும் பலரும் இந்தப் பட்டியலில் புதிதாகச் சேரக்கூடிய வாய்ப்பே அதிகம் உண்டு. இதிலே, சுரேஷ் பிறேமச்சந்திரன் ,சிவசக்தி ஆனந்தன் போன்ற ஒரிருவரைத் தவிர, பிற எல்லோரும் இலங்கைத் தமிழரசுக்கட்சியைச் சேர்ந்தவர்கள்தாம்.

உள்கட்சி ஜனநாயகம், தகுதியானவர்களுக்கே முன்னுரிமை மற்றும் செம்பு தூக்கிகள்,காவடிக்காரர், பந்தம் பிடிப்போர் போன்றோரை புறமொதுக்கி திறமையும், தகுதியுமுள்ளோருக்கே கட்சியில் முக்கிய இடம் போன்ற ஜனநாயகத்தின் அடிப்படைகளை தமிழ்க்கூட்டமைப்பு- குறிப்பாக இலங்கைத் தமிழரசுக்கட்சி - கடைப்பிடிக்குமானால் இப்படி கூட்டமைப்பை விட்டு வெளியேறுவோர் குறித்து சுமந்திரன் கவலைப்பட வேண்டியிருக்காது என நாம் நம்புகிறோம். தமிழ்க் கூட்டமைப்பு என்பது பல கட்சிகளின் இணைவு என்றால் அதை வழிநடத்துவதற்கு சில அடிப்படைகள் கட்டாயம் பின்பற்றப்பட்டேயாக வேண்டும். முக்கிய தீர்மானங்களை கூட்டமைப்பு எடுக்க முன்னர் கூட்டமைப்பின் வழிகாட்டல் குழு அடிக்கடி விவாதிக்கவேண்டும். கருத்தொருமைப்பாட்டைப் பேண வேண்டும். 

பலகட்சிகளையும் சேர்ந்தோர் கூட்டமைப்பின் பெயரால் கூட்மைப்பின் பட்டியலால் - நாடாளுமன்றத்துக்குத்தெரிவு செய்யப்படக்கூடும். ஆனால் அந்த எம்.பிக்களின் மொத்தக் கூட்டுத்தான் கூட்டமைப்பு என்ற கருத்தியலில் இருந்து சம்பந்தன், சுமந்திரன், மாவை போன்றோர் வெளியே வரவேண்டும். அந்த எம்.பிக்களை கைகளில் வைத்துக் கொண்டு கூட்டமைப்பின் பெயரில் எதையும் நாங்கள் தீர்மானித்து முன்னெடுக்கலாம் என்ற திமிர்த்தனத்திலிருந்து கூட்டமைப்பின் தலமை முதலில் வெளியே வரவேண்டும்

கூட்டமைப்பு என்பது பல கட்சிகளின் கூட்டு அந்தக் கட்சிகளின் ஒத்திசைவில் கூட்டமைப்பு இயங்கவேண்டுமே ஒழிய, அந்தக் கட்சிகளின் எம்.பிக்களின் ஒத்திசைவோடு மட்டும் கூட்டமைப்பை        இயக்கிவிடலாம், நினைத்ததை செய்யலாம் என்ற மிதப்போடு கூட்டமைப்பின் தலைவர்கள் என்றுகூறிக் கொள்வோர் இயங்கக் கூடாது. கூட்டமைப்பை இன்னும் பலப்படுத்த வேண்டும், புதிய தரப்புகளையும் உள்ளீர்த்து அதனை வலுவான சக்தியாக்க வேண்டுமானால், வெளியில் நிற்கும் தகுதி, திறமையுடையவர்களை அரவணைக்க கூட்டமைப்பு தலைமை தயாராகவேண்டும். 

மாவை சேனாதிராசா போன்ற தலைவர்களுக்கு அந்தபண்பியல்பில்தான் அதிகம் குறைபாடுகளுண்டு. அவர்களால் கூட்டமைப்பை பலப்படுத்துவது என்பது கேள்விக்குறியே.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |