Home » » தமது டெஸ்ட் கோட்டையில் இலங்கைக்கு வரலாற்று வெற்றி

தமது டெஸ்ட் கோட்டையில் இலங்கைக்கு வரலாற்று வெற்றி

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் காலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் திமுத் கருணாரத்னவின் சதம் மற்றும் வீரர்களின் சிறந்த பங்களிப்புடன் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியீட்டி, தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
காலி மைதானத்தை பொருத்தவரை இன்றைய தினம் அதிகூடிய வெற்றி இலக்கினை அடைந்து இலங்கை அணி வரலாறு படைத்ததுடன், ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் தங்களுடைய முதல் வெற்றியையும் பதிவுசெய்துள்ளது. இதன்மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின், தொடருக்கான 120 புள்ளிகளில், 60 புள்ளிகளை இலங்கை பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி அந்த அணி 249 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 267 ஓட்டங்களை பெற்று, 18 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸுக்காக களமிறங்கிய நியூசிலாந்து அணி பிஜே வெட்லிங்கின் 77 ஓட்டங்களின் உதவியுடன் 285 ஓட்டங்களை பெற்றது.
அதன்படி, நான்காவது நாளான நேற்றைய தினம் மதியபோசன இடைவேளைக்குள் தங்களது இன்னிங்ஸை நிறைவுசெய்த நியூசிலாந்து அணி இலங்கை அணிக்கு 268 என்ற சவாலான ஓட்ட எண்ணிக்கையை வெற்றியிலகக்காக நிர்ணயித்தது.
நியூசிலாந்து அணி நிர்ணயித்த வெற்றியிலக்கினை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி, அணித் தலைவர் திமுத் கருணாரத்ன மற்றும் லஹிரு திரிமான்னே ஆகிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் அரைச் சதங்களின் உதவியுடன் நேற்றை ஆட்டநேர முடிவில் விக்கெட்டிழப்பின்றி 133 ஓட்டங்களை பெற்றிருந்தது. 
முதல் டெஸ்ட் போட்டியின் வெற்றிக்கு மேலும் 135 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், இன்றைய தினம் களமிறங்கிய இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில், திமுத் கருணாரத்ன சற்று வேகமாக ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
எனினும், திமுத் கருணாரத்னவுடன் சிறந்த ஆரம்ப இணைப்பாட்டத்தை பெற்றுக்கொடுத்த லஹிரு திரிமான்னே 64 ஓட்டங்களை பெற்ற நிலையில், வில் சமர்வில்லின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்காக 161 ஓட்டங்களை பகிர்ந்தனர். இந்த ஓட்ட எண்ணிக்கையானது டெஸ்ட் கிரிக்கெட்டின் நான்காவது இன்னிங்ஸில் இலங்கை அணி பெற்றுக்கொண்ட அதிகூடிய இணைப்பாட்டமாக அமைந்தது.
லஹிரு திரிமான்னேவின் ஆட்டமிழப்பின் பின்னர் களமிறங்கிய குசல் மெண்டிஸ் வேகமாக துடுப்பெடுத்தாட முற்பட்டதுடன், 6 பந்துகளுக்கு 10 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இலங்கை அணி அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்த போதும், அனுபவ துடுப்பாட்ட வீரர் அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் நிதானமாக துடுப்பெடுத்தாடினர்.
இதில், நேற்று ஆரம்பம் முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த திமுத் கருணாரத்ன தன்னுடைய 9வது டெஸ்ட் சதத்தை பதிவுசெய்தார். எனினும், மெதிவ்ஸுடன் இணைந்து 44 ஓட்டங்களை பகிர்ந்த திமுத் கருணாரத்ன 122 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார்.
ஆனால், அனுபவ துடுப்பாட்ட வீரர் என்ற ரீதியில் அஞ்செலோ மெதிவ்ஸ் (28) நிதானமாக துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை குவிக்க, மறுமுனையில் குசல் பெரேரா வேகமாக 23 ஓட்டங்களையும், தனன்ஜய டி சில்வா 14 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க இலங்கை அணி 6 விக்கெட்டுகள் கைவசம் இருக்க வெற்றியை பெற்றுக்கொண்டது. நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் டிம் சௌதி 33 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை வீழ்த்தினார்.
இதேவேளை, காலி மைதானத்தில் அதிகூடிய வெற்றியிலக்கினை பெற்றுக்கொண்ட அணி என்ற பெருமையை இலங்கை பெற்றுக்கொண்டது. இதற்கு முன்னர் 2014ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 99 ஓட்டங்களை பெற்று இலங்கை அணி வெற்றி பெற்றிருந்தது.

அதுமாத்திரமின்றி ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் தங்களுக்கான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணி 60 புள்ளிகளை பெற்றுக்கொண்டது. அதேநேரம், ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான புள்ளிப்பட்டியலில் முதலிடத்தையும் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை 24 புள்ளிகளுடன் அவுஸ்திரேலிய அணி பிடித்துள்ளது.
இந்தநிலையில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 22ம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |