Home » » மேற்கிந்திய தீவினரை முகம் சுழிக்க வைத்த நடுவர்களின் தீர்ப்புகள்!!

மேற்கிந்திய தீவினரை முகம் சுழிக்க வைத்த நடுவர்களின் தீர்ப்புகள்!!அவுஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கிண்ண லீக் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அடைந்த தோல்விக்கு மத்தியஸ்தர்களின் மோசமான (தவறான) தீர்ப்புகளே காரணம் என அந் நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கல் ஹோல்டிங் குறைகூறியுள்ளார். 

இதேவேளை சில தீர்ப்புகள் ஏமாற்றத்தையும் விரக்தியையும் தோற்றுவித்ததுடன் மோசமானவை என கார்லோஸ் ப்றத்வெய்ட் விபரித்தார். எதிரணியை விட தமது அணி வீரர்களுக்கே தவறான தீர்ப்புகள் வழங்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

ஆனால் ட்ரென்ட் ப்றிஜ் விளையாட்டரங்கில் அவுஸ்திரேலியாவிடம் 15 ஓட்டங்களால் தோல்வி அடைந்தமைக்கு இந்தத் தீர்ப்புகள்தான் காரணம் என்பதை அவர் நிராகரித்தார்.

அதி சிறந்த மத்தியஸ்தர்கள் குழுவில் ஐ.சி.சி.யினால் இணைக்கப்பட்டு உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் மத்தியஸ்தம் வகிக்க நியமிக்கப்பட்டவர்களில் நியூஸிலாந்தின் க்றிஸ் கவானியும் இலங்கையின் ருச்சிர பல்லியகுருகேவும் அடங்குகின்றனர்.

இவர்கள் இருவரும் அவுஸ்திரேலியாவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையில் நொட்டிங்ஹம்ஷயர், ட்ரென்ட் ப்றிஜ் விளையாட்டரங்கில் வியாழனன்று நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் லீக் போட்டியில் மத்தியஸ்தர்களாக கடமையாற்றினர். அவர்கள் இருவரினதும் நான்கு தீர்ப்புகள், மேற்கிந்தியத் தீவுகளின் துடுப்பாட்ட வீரர்களால் மூன்றாவது மத்தியஸ்தரின் மீளாய்வுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அவற்றை மீளாய்வு செய்த மூன்றாவது மத்தியஸ்தர் தீர்ப்புகளை மாற்றுமாறு கள மத்தியஸ்தர்களுக்கு அறிவித்தார்.

ஒரு சந்தர்ப்பத்தில் க்றிஸ் கேலை நோக்கி மிச்செல் ஸ்டார்க் பந்துவீசியபோது அவரது முன்னங்கால் எல்லையைத் (பொப்பிங் க்றீஸ்) தாண்டியிருந்தது. ஆனால், அதனை மத்தியஸ்தர் கவானி கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

ஸ்டார்க்கின் அடுத்த பந்தில் க்றிஸ் கேல் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டம் இழந்தார். முன்னைய பந்தை மத்தியஸ்தர் நோ போலாக அறிவித்திருந்தால் க்றிஸ் கேலுக்கு ப்றீ ஹிட் கிடைத்திருக்கும். ஆனால் அப்படி நடைபெறாததால் அநியாயமாக க்றிஸ் கேல் ஆட்டமிழந்தார்.

‘‘இவற்றை எல்லாம் சுட்டிக்காட்டிய எனக்கு அபராதம் விதிக்கப்படுமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் மத்தியஸ்தர்களின் செயற்பாடுகள் குழப்பத்தை தோற்றுவித்தது’’ என்றார் ப்றத்வெய்ட்.

‘‘நாங்கள் பந்துவீசியபோதுகூட தலை உயரத்தை அண்மித்தவாறு சென்ற பந்துகள் வைட்களாக அறிவிக்கப்பட்டன. எனது நினைவுகளின் பிரகாரம் ஒரே ஓவரில் வழங்கப்பட்ட மூன்று தீர்ப்புகள் உண்மையில் மோசமானவை என்பதுடன் குழப்பத்தைத் தோற்றுவித்ததுடன் வீரர்களை தங்குமறையில் முணுமுணுக்கவைத்தது’’ என்றார் ப்றத்வெய்ட்.

‘‘280 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடும்போது 180 ஓட்டங்கள் வரை பெறக்கூடிய க்றிஸ் கேல் ஆட்டமிழந்தமை எமது ஆரம்பத்துக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது. ஆனால் மத்தியஸ்தர்கள் அதி சிறப்பாகவே செயற்பட முயற்சிப்பர். வீரர்களாகிய நாங்களும் திறமையை வெளிப்படுத்துவதற்காக ஆடுகளம் செல்கின்றோம். இதன் காரணமாக மத்தியஸ்தர்களுக்கும் வீரர்களுக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெறவில்லை’’ என அவர் குறிப்பிட்டார்.

மைக்கல் ஹோல்டிங்
‘‘இந்தப் போட்டியில் மத்தியஸ்தர்களின் செயற்பாடுகள் மிக மோசமாக இருந்தது. நாங்கள் விளையாடிய காலத்தில் தற்காலம் போன்று கடுமையான விதிகள் இருக்கவில்லை. ஒரு கேள்வியை ஒரு தடவைதான் எழுப்புவோம். மத்தியஸ்தரை நோக்கி இரண்டு, மூன்று, நான்கு தடவைகள் கேள்வி எழுப்பவும் மாட்டோம், எழுப்பியதும் இல்லை’’ என்றார். 
‘‘மத்தியஸ்தர்கள் மிரட்டப்பட்டனர். அதாவது அவர்கள் பலவீனர்கள் என அர்த்தப்படும். இருவரும் (கவானி மற்றும் பல்லியகுருகே) மிக மோசமாக மத்தியஸ்தம் வகித்தனர்’’ எனவும் ஹோல்டிங் குறிப்பிட்டார். 
கேல் மாத்திரம் மூன்று தடவைகள் தனக்கு எதிரான தீர்ப்புகனை மீளாய்வுக்கு உட்படுத்தினார். மிச்செல் ஸ்டார்க்கின் ஒரே ஒவரில் இரண்டு மீளாய்வுகளை அவர் கோரினார். முதல் இரண்டும் நிராகரிக்கப்பட்டன. முதல் சந்தர்ப்பத்தில் விக்கெட் காப்பாளரிடம் பிடிகொடுத்து கேல் ஆட்டமிழந்ததாக கவானி சமிக்ஞை செய்தார். உடனடியாகவே கேல் மீளாய்வு கோரினார். பந்து துடுப்பில் படாமல் விக்கெட்டை உராய்ந்தவாறு சென்றது.

ஆனால் பெய்ல்கள் அசையவில்லை. அடுத்த இரண்டு சந்தர்ப்பங்களில் எல்.பி.டபிள்யூ. தீர்ப்புகளுக்கு எதிராக கேல் மீளாய்வு கோரினார். ஒன்றில் வெற்றிகண்டார். மற்றையதில் ஆட்டமிழந்தவராக மூன்றாவது மத்தியஸ்தர் அறிவித்தார். ஆனால் அதற்கு முந்தைய பந்து நோபோலாக இருந்தபோதிலும் கவானி அதனைப் பொருட்படுத்தவில்லை. ஸ்டார்க்கின் முன்னங்கால் கோட்டை வெகுவாகத் தாண்டியிருந்ததை சலன அசைவுகளில் நிரூபணமானது. எனின் அடுத்த பந்து ப்றீ ஹிட்டாக இருந்திருக்கவேண்டும். ஆனால் மத்தியஸ்தரின் கவனக்குறைவால் கேலின் விக்கெட் பறிக்கப்பட்டது.
‘‘இந்த சம்வத்தை வீரர்கள் தங்குமறையிலுள்ள தொலைக்காட்சி திரையில் கண்ணுற்றேன். நான் வெறுமனே சிரித்தேன். என்னால் நம்பவே முடியவில்லை. இன்றைய தினம் எதுவுமே எங்களுக்கு சார்பாக அமையவில்லை என்றுதான் நான் நினைகின்றேன்’’ என அணித் தலைவர் ஜேசன் ஹோல்டர் கூறினார்.

இது இவ்வாறிருக்க, இவ்வாறு அடிக்கடி தவறு செய்யும் மத்தியஸ்தர்களை ஐ.சி.சி. சிறப்பு மத்தியஸ்தர்கள் குழாத்திலிருந்து நீக்குவதுடன் அவர்களுக்கும் அபாரதம் விதிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டால் நலமாக இருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்களும் இரசிகர்களும் தெரிவிக்கின்றனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |