Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தோண்டியெடுக்கப்பட்டது தீவிரவாதிகளின் மற்றும் குடும்பத்தினரின் சடலங்கள்!



அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருதில் தற்கொலை குண்டுத் தாக்குதல் மேற்கொண்டு பலியான தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரதும் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்ட பிரதான நீதவான் அசங்கா ஹெட்டிவத்த முன்னிலையில் இந்த சடலங்கள் இன்றைய தினம் தோண்டி எடுக்கப்பட்டதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா தலைநகர் கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளிலுள்ள மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர விடுதிகளை இலக்கு வைத்து ஐ.எஸ் ஆயுததாரிகள் ஏப்ரல் 21 ஆம் திகதி தொடர் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.
இந்த தாக்குதல்களால் சுமார் 250 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். தற்போது வரை அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஐ.எஸ் சர்வதேச பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய சிலருக்கும் ஸ்ரீலங்கா பாதுகாப்பு தரப்பிற்கும் கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி கல்முனை – சாய்ந்தமருது 'சுனாமி கிராமத்தில்' உள்ள வீடு ஒன்றில் வைத்து இடம்பெற்ற துப்பாக்கி சண்டையின் பின்னர் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து சந்தேகநபர்கள் உள்ளிட்ட 15 பேர் பலியாகினர்.
இதற்கமைய குறித்த வீட்டில் இருந்து 6 சிறுவர்களினதும் 6 ஆண்களினதும் 3 பெண்களினதும் சடலங்கள் மீட்கப்பட்டன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஸீமின் தந்தை, அவரின் சகோதரர்கள் இருவர் மற்றும் ஒரு சகோதரரின் மனைவி ஆகியோரும் சடலங்களாக மீட்கப்பட்டவர்களில் அடங்குகின்றனர்.
இந்த குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் சடலங்கள், கடந்த மே மாதம் 2 ஆம் திகதி அம்பாறை பொது மயானத்தில் இஸ்லாமிய மத செயற்பாடுகளின்றி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அடக்கம் செய்யய்பட்டது.
இந்த நிலையில் மரபணு பரிசோதனைகளுக்காக தற்கொலை குண்டுதாக்குதலில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு இரசாயன பகுப்பாய்வு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அவற்றில் நான்கு உடற் பாகங்கள் அழுகிய நிலையில் காணப்பட்டதால் சடலத்தின் உடற்பாகங்கள் சில மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அம்பாறை முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ருச்சிர நதீரவின் தலைமையில் அம்பாறை மாவட்ட பிரதான நீதவான் அசங்கா ஹெட்டிவத்த முன்னிலையில் இந்த உடற்பாகங்கள் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments