Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மோசமடைந்தது தேரரின் உடல் நிலை; வைத்தியர்கள் விரைவு!

அம்பாறையில் தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படவேண்டுமென்று கோரி சாகும் வரையான உண்ணாப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள பௌத்த தேரரின் உடல்நிலை தற்போது மோசமடைந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குமணன் கூறுகிறார்.
கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரின் உடல் நிலையே இவ்வாறு மோசமடைந்துவருவதாக குமணன் கூறுகிறார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்திற்கு முன்பாக இன்று காலை 9 மணி முதல் சாகும்வரை உண்ணாப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவ சிறி க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள், சந்திரசேகரம் ராஜன் கல்முனை மாநகரசபை உறுப்பினர், அழகக்கோன் விஜயரெட்னம் கல்முனை மாநகரசபை உறுப்பினர், ஆகியோர் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.
இவர்களுடன் சமூக அமைப்புக்கள், கல்முனை வாழ் தமிழ் இளைஞர்களும் இணைந்து போராட்டத்தில் இணைந்துள்ளனர்.
இந்த நிலையிலேயே உண்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விகாராதிபதியின் உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும் தற்பொழுது உடலில் குளுக்கோசின் அளவு மோசமாக குறைவடைந்துள்ளதால் ஸ்தலத்திற்கு வைத்தியர்கள் வரவளைக்கப்பட்டுள்ளதாகவும் செய்தியாளர் கூறுகிறார்.
இதுதொடர்பான மேலதிக விபரங்களை அறிய எமது செய்திச் சேவையுடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

Post a Comment

0 Comments