Home » » விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்தவர்கள் படுகொலை! சஹ்ரானுடன் தொடர்பு வைத்தவர்களை கதிரையில் இருத்தி விசாரணை!

விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்தவர்கள் படுகொலை! சஹ்ரானுடன் தொடர்பு வைத்தவர்களை கதிரையில் இருத்தி விசாரணை!

தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்தவர்களை படுகொலை செய்தவர்கள் சஹ்ரானுடன் தொடர்பு வைத்தவர்களை கதிரையில் இருத்தி விசாரிக்கின்றனர் என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ. மயூரன் தெரிவித்துள்ளார்.
வவுனிய தோணிக்கல் ஐக்கிய விளையாட்டுக்கழகத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் கம்பெரலிய நிதியில் அமைக்கப்பட்ட கடின பந்து பயிற்சித் திடல் மற்றும் அலுவலகத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,
முழு வளங்களும் எமது வீரர்களுக்கு கிடைக்க வேண்டும் அதனூடாக அவர்கள் விரும்புகின்ற விதத்திலே தங்களுடைய எதிர்காலங்களை அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் நாங்கள் எங்களுடைய திட்டங்களை முன்னெடுக்கின்றோம்.
இன்று வவுனியா மாவட்டத்தை பொறுத்தவரையில் சிலர் விளையாட்டுத் துறையினூடாக தங்களுடைய அரசியலை செய்கின்றார்கள். அவர்களுக்கான உபகரணங்களை பத்தாயிரம் பதினையாயிரம் ரூபாவுக்கு கொடுத்துவிட்டு அரசியல் பேசுபவர்களாகத்தான் இன்று வன்னி மாவட்டத்தில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் காணப்படுகின்றார்கள்.
பொருட்களை கொடுத்து விட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிப்பதனையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று அரசாங்கத்தோடு இருக்கின்றது. நான் மட்டுமே எதிர்கட்சி வரிசையில் இருக்கின்றேன் என்று சொல்லுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட இந்த மாவட்டத்திலே இருக்கின்றார்கள்.
ஆனால் நாங்கள் விளையாட்டை விளையாட்டாக பார்க்கின்றோம். நாங்கள் அரசியலுக்காக இங்கே இருக்கின்ற விளையாட்டு கழகங்களை பாவிக்க தயாராக இல்லை. அதேபோல் பல கோடி ரூபாய்களை நாங்கள் விளையாட்டுக் கழகங்களுக்கு அவர்களுடைய தேவைகளை அறிந்து ஒதுக்கீடுகளை செய்திருக்கின்றோம்.
நீங்கள் உங்களுடைய திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கு எங்களாலானா உதவிகளை நிச்சயமாக செய்வதற்கு தயாராக இருக்கின்றோம். அதற்கான வளங்களை அதற்கான தேவைப்பாடுகளை அதனை செய்து தருவதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
இதுபோல பல்வேறு விளையாட்டு மைதானங்களை புனரமைப்பு செய்திருக்கின்றோம். அரசியலை நோக்கும்போது இந்த நாட்டிலே இருக்கின்ற இப்போதைய அரசாங்கம் அல்ல கடந்த காலங்களில் இருக்கின்ற அரசாங்கம் கூட தங்களுடைய இரட்டை முகங்களை எங்களுக்கு காட்டி கொண்டிருக்கின்றது.
சில நாட்களுக்கு முன்னர் ஒரு கொடூரமான பயங்கரவாத தாக்குதல்கள் தேவாலயங்களில் நடைபெற்று அதற்கான காரணம் யார் என்பது கூட கண்டறியப்பட்ட பிறகும் அவர்களோடு நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தவர்களை கூப்பிட்டு கதிரையிலே அமரவைத்து அவர்களிடம் விசாரணை செய்கின்ற ஒரு அரசாங்கத்தின் புதுமுகங்களை இப்பொழுது பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.
எங்களைப் பொறுத்த வரையில் எங்களுடைய தேசிய போராட்டம் எங்களுடைய உரிமைப் போராட்டம் தொடர்பாக தமிழீழ விடுதலைப்புலிகள்போராடிக்கொண்டு இருந்தபோது இந்த நாட்டைப் பொறுத்தவரையில் அவர்களும் ஒரு பயங்கரவாதிகளாகவே கருதப்பட்ட காலத்தில் அவர்களோடு தொடர்புகளை வைத்துக் கொண்டிருந்த எங்களுடைய தேசத்தலைவர்கள், எங்களுடைய அரசியல் பிரதிநிதிகள், எங்களுடைய மக்கள் படுகொலை செய்யப்பட்ட வரலாறுகள் தான் இந்த மண்ணிலே இருக்கின்றது.
ஆனால் இப்பொழுது நடைபெற்ற இந்த பயங்கரவாத தாக்குதலோடு நேரடியாக தொடர்பில் இருந்த இந்த பயங்கரவாத தாக்குதலை நடத்திய சஹ்ரான் என்கின்ற இஸ்லாமிய பயங்கரவாதியோடு கிழக்கு மாகாணத்தினுடைய முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா நேரடியாக இருக்கின்ற புகைப்படங்கள் அவர்களோடு உரையாடுகின்ற ஒளிநாடாக்கள் இருக்கின்ற போதும் அவர்களை இந்த நாட்டினுடைய அரசாங்கம் கதிரையிலே அமரவைத்து கேள்விகளை தொடுக்கின்றது.
ஆனால் எங்களுடைய இளைஞர்கள் எத்தனையோ பேர் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தார் என்ற சந்தேகத்தில் இன்னும் இன்னும் சிறைகளிலே வாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குரிய எதிர்காலம் இந்த சிறைகளிலே முடியப்போகின்றது.
அவர்களுக்குரிய அத்தியாயங்கள் இனி முடியப் போகின்றது. அவர்களுக்கான வாழ்வு, வாழ்வியலுக்கான சந்தர்ப்பங்கள் இந்த நாட்டிலே நிச்சயமாக கிடைக்கப் போவதில்லை. ஆனால் இந்த நாட்டினுடைய அரசாங்கம் நினைத்தால் அவர்களை வெளிப்படையாக இப்பொழுது விசாரணை செய்வது போல விசாரணை செய்திருக்கலாம்.
ஆனால் இன்னும் எத்தனையோ பேர் விசாரணை செய்யப்படாமலேயே சிறைகளிலே இருக்கின்றார்கள். இந்த நாட்டின் அரசாங்கம் இரட்டை முகத்தை இதனூடாக காட்டுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |