கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தினை பிரதேச செயலகமாகத் தரமுயர்த்த வேண்டும் என்று கோரி மட்டக்களப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்றைய தினம் காலை நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தின தேரர் கலந்து கொண்டுள்ளார்.
நான்காவது நாளாகத் தொடர்ந்து வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அத்துரலிய ரத்ன தேரர் இதில் கலந்து கொண்டுள்ளார்.
இதன் போது கருத்துத் தெரிவித்த அவர்,
கல்முனையில் இரண்டு பிரதேச செயலகங்கள் இருக்கின்றன. இதில் வடக்கு பிரதேச செயலகம் உப பிரதேச செயலகமாக இருக்கிறது. அது தரமுயர்த்தப்படவில்லை. அதனை பூரணமான பிரதேச செயலகமாக தரமுயர்த்து வேண்டும் என்றுதான் கோருகிறோம்.

இதில் வாழ்ந்துவரும் தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று கோருகின்றோம். எதிர்பார்க்கிறோம். அந்தக் கோரிக்கையை முன்வைத்து எமது பிக்குகள், மற்றும் மதத் தலவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இன்றைய தினம் இதற்கான தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்பதனை இங்கு கூறிக் கொள்ள விரும்புகிறோம். இப்பிரதேச செயலகம் தொடர்பில் தொடர்ச்சியாக கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்துள்ளது, ஆனாலும் நிறைவேற்றப்படவில்லை.

அதற்கான உறுதி விரைவாகத் தரப்பட வேண்டும். இதற்கு அரசாங்கம், கடந்த அரசாங்கம் என்பனவும் ஒப்புக் கொண்டிருக்கிறது. எனவே இப்பிரதேச செயலகத்தினை உடனடியாக தரமுயர்த்திக் கொடுக்க வேண்டும்.
அடிப்படைவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதனை விடவும் சாதாரண மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்பட வேண்டும் என்பதனைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.






0 Comments