Home » » இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் தாக்குதல் மேற்கொள்வதற்கு முன்னர் நடந்தது என்ன? பல தகவல்களை அம்பலப்படுத்திய நபர்! முக்கிய செய்திகள்

இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் தாக்குதல் மேற்கொள்வதற்கு முன்னர் நடந்தது என்ன? பல தகவல்களை அம்பலப்படுத்திய நபர்! முக்கிய செய்திகள்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் தகவல் தொழில்நுட்ப பொறியியலாளரான அக்ரம் அஹக்கம் என்பவர் தற்போது பயங்கரவாத விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
தெஹிவளை பிரதேசத்தில் வசித்து வந்த இந்த நபர் கடந்த 27 ஆம் திகதி இராணுவ புலனாய்வு பணிப்பாளர் சபையின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
தற்கொலை தாக்குதல் நடத்திய நபர்களுடன் தொடர்புகளை வைத்திருந்தமை, சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டமை மற்றும் அதற்கு உதவிய குற்றச்சாட்டுக்களின் கீழ் அக்ரம் கைது செய்யப்பட்டார்.
விசாரணைகளில் இவர் வழங்கிய தகவல்களுக்கு அமைய 2014 ஆம் ஆண்டு முதல் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புகளை வைத்திருந்த இலங்கை நபர்களுடன் சமூக வலைத்தளம் ஊடாக தொடர்புகளை கொண்டிருந்ததாக கூறியுள்ளார்.
இதற்கு அமைய கடந்த 2015 ஆம் ஆண்டு களுபோவில பிரதிபிம்பாராம வீதியில் இஸ்லாம் சமயம் கற்பிக்கப்படும் இடத்திற்கு அவர் சென்றுள்ளார். அங்கு தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அஹமட், ஆதில் அமீஸ்,உமேய்சீர், இன்சாப், சஸ்னா மொஹமட் ஆகியோரை சந்தித்துள்ளார்.
இந்த இடத்திற்கு வந்திருந்த இமாட் என்ற நபர் ஐ.எஸ். அமைப்பில் இணைவதற்காக துருக்கி சென்றுள்ளதுடன் 2015 ஆம் ஆண்டு நடு பகுதியில் இலங்கை திரும்பியுள்ளார்.
இலங்கை திரும்பிய இமாட், மத போதனைகளை நடத்தி வந்துள்ளார். இந்த மத போதனைகளில் தெஹிவளை தற்கொலை குண்டுதாரி ஜமீல், ஷங்கரி-லா ஹொட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய ஒரு குண்டுதாரியான இல்ஹாம் இப்ராஹிம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்த போதனைகள் வீடுகளில் நடத்தப்பட்டதாக அக்ரம் தகவல் வெளியிட்டுள்ளார்.
கொழும்பை சூழவுள்ள பகுதிகளில் சேர்த்து கொள்ளப்பட்ட சிலர், சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமான கல்முனையை சேர்ந்த ஹூஸ்னி முபாரக் என்பவரின் திருமணத்திற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து இவர்கள் காத்தான்குடியில் தேசிய தவ்ஹித் ஜமாத் அலுவலகத்தில் மொஹமட் சஹ்ரானை சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்புக்கு அமைய சஹ்ரான், அவரது சகோதரர் சொய்னி உட்பட சிலரும், கொழும்பை சேர்ந்த சிலரும் இணைந்து அடிப்படைவாத குழுவை உருவாக்கியுள்ளனர். உமேய்ர் என்ற நபருக்கு இந்த குழுவின் தலைமை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு இறுதி காலத்தில் மல்வானை பிரதேசத்தில் தனியார் நிறுவனம் ஒன்றின் அடிப்படைவாத போதனைகளை நடத்திய இந்த குழுவினர் அங்கு உறுதிமொழியையும் எடுத்துக்கொண்டனர்.
2016 ஆம் ஆண்டு இல்ஹாம் இப்ராஹிம் தனது செம்பு தொழிற்சாலை வெள்ளத்தில் மூழ்கியமைக்கு கிடைத்த 5 கோடி ரூபாய் இழப்பீட்டு தொகையை சஹ்ரானிடம் வழங்கியுள்ளார்.
இதன் பின்னர் கண்டி, அருப்பொல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கூடிய இந்த நபர்கள் விகாரைகளில் புத்தர் சிலைகளை உடைக்க வேண்டும் எனவும் அப்போது மோதலான சூழ்நிலை ஏற்பட்டால் தற்கொலை தாக்குதல் நடத்த தயாராக இருக்க வேண்டும் எனவும் உடன்பட்டுக்கொண்டதாகவும் அக்ரம் விசாரணைகளில் கூறியுள்ளார்.
இதனையடுத்து சில பயிற்சி கருத்தரங்குகள் நடத்தப்பட்டுள்ளன. இவற்றின் இறுதியில், தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தும் அணியில் இணைய விரும்புவோர் யார் என சஹ்ரான் கேட்டுள்ளார்.
தெஹிவளையில் தாக்குதல் நடத்திய ஜமீல் மற்றும் கொச்சிக்கடையில் தாக்குதல் நடத்திய அலாவுதீன் அஹமட் முவான் ஆகியோர் தற்கொலை தாக்குதல் நடத்தும் அணியில் இணைய முன்வந்துள்ளதுடன் சஹ்ரானுடன் வந்திருந்த 5 பேரும் இதில் இணைந்துள்ளனர்.
தான் பணியாற்றும் தனியார் நிறுவனத்திற்கு கடந்த பெப்ரவரி மாதம் வந்த ஜமீல் மற்றும் முவான் ஆகியோர் தன்னை சந்தித்ததாகவும் அக்ரம் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதலின் பின்னர் அக்ரம் என்ற இந்த சந்தேக நபர் தனது முகநூல் பக்கத்தில் தாக்குதலை கண்டித்து பல பதிவுகளை இட்டுள்ளதுடன் அபு காலித் என்ற பெயரிலும் சமூக வலைத்தள கணக்குகளை பயன்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |