திருகோணமலையில் தமிழ்-முஸ்லிம் மக்களின் பெருமளவு காணிகளை அடாத்தாக அபகரிக்க முற்படும் பிக்கு ஒருவர் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்மந்தன் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
குறித்த கடிதத்தில் சம்மந்தப்பட்ட பிக்குவின் அடாத்தை தடுத்து நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
அந்த கடிதத்தினை இங்கு முழுமையாக இணைக்குன்றோம்,
ஆர். சம்பந்தன்
பாராளுமன்ற உறுப்பினர்
திருகோணமலை மாவட்டம்
தொலைபோசி இல: : 011 2 559787
15.05. 2019
1) மேதகு மைத்திரிபால சிறிசேன
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு சனாதிபதி
சனாதிபதி செயலகம்
கொழும்பு – 01
2) கௌரவ ரணில் விக்கிரமசிங்க
பிரதம மந்திரி அலுவலகம்
அலரி மாளிகை
கொழும்பு -03
மேதகு சனாதிபதி அவர்களே, கௌரவ பிரதம மந்திரி அவர்களே,
பின்வரும் அவசரமான முக்கிய விடயத்தை உங்களுடைய கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேசச் செயலகப் பிரிவில் அடங்கும் புல்மோட்டை கிராம உத்தியோகத்தர் பிரிவினுள் 'அரசிமலை' என்று அறியப்படும் பகுதியில் ஒரு பிக்கு வாழ்ந்து வருகிறார்.
குச்சவெளி பிரதேசச் செயலகப் பிரிவில் உள்ள பல காணிகளை அவர் அண்மைக் காலமாக பல்வேறு விகாரைகளுக்குரியதென உரிமைகோரி, அவை நில அளவை செய்யபபட்டு தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்படவேண்டுமெனவும் கோரி வருகின்றார். அவர் அவ்வாறு உரிமைகோரும் விகாரைகள், தொல்பொருள் பெறுமதி கொண்டவையென அவர் தெரிவிக்கும் கட்டமைப்புகளின் அழிவடைந்த சிதைவுகளாகும்.
குச்சவெளி பிரதேசச் செயலகப் பிரிவினுள் ஒவ்வொன்றும் 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆறு (6) காணித்துண்டுகள், 320 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு (1) காணித்துண்டு, 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட இன்னுமொரு காணித்துண்டு, 53 ஏக்கர் பரப்பளவு கொண்ட இன்னுமொரு காணித்துண்டு, ஒவ்வொன்றும் ஏறத்தாழ 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட மேலுமொரு ஐந்து (5) காணித்துண்டுகள் மற்றும் 02 ஏக்கர் பரப்பளவு கொண்ட இன்னுமொரு காணித்துண்டு என்று எல்லாமாக ஏறத்தாழ மூவாயிரத்து எழுநூற்று இருபத்தைந்து (3725) ஏக்கர் காணி தொடர்பாக அவர் உரிமை கோருகின்றார்.
இக்காணிகள் குச்சவெளி கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள பின்வரும் பல்வேறு பழமைவாய்ந்த கிராமங்களில் அமைந்துள்ளன:
1) தென்னமரவாடி
2) புல்மோட்டை
3) யான் ஓயா
4) செம்பிமலை – குச்சவெளி
5) குச்சவெளி
6) இல்லகந்தகுளம்
7) சலப்பையாறு
பல தலைமுறைகளாக பல நூற்றாண்டுகாலம் இப்பகுதிகளில் வாழ்ந்துள்ள தமிழ்பேசும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களே இக்கிராமங்கள் அனைத்திலும் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வருகின்றனர். இம்மக்கள் குடியிருப்பிற்காகவும் பண்ணைத் தொழிலுக்காகவும் தாம் பயன்படுத்திய காணிகளிலிருந்து ஆயுத மோதலின் காரணமாக புலம்பெயர்ந்து சென்று தற்போது இக்காணிகளுக்குத் திரும்பி வந்து அங்கு தமது குடியிருப்பையும் பண்ணைத் தொழிலையும் தொடர்வதற்காக அவற்றைப் பெற்றுக்கொள்ள முயல்கின்றனர்.
ஏறத்தாழ 30 ஆண்டு காலம் குடியிருக்காது அல்லது பயன்படுத்தாது இருந்த பெரும்பாலான இக்காணிகளில் மரம் செடிகள் வளர்ந்து அவை காடுகளாகி உள்ளன.
இப்பிக்குவின் இத்தகைய செயல்கள் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தாம் வரலாற்று ரீதியாக குடியிருந்த தமது கிராமங்களுக்கு அவர்கள் திரும்பிச் செல்வதைத் தடுக்கும் எண்ணங்கொண்டதாகத் தோன்றுகிறது.
இப்பகுதிகளில் ஓரிரு சிங்கள பௌத்த குடும்பங்கள் தானும் வாழ்ந்திருக்கவில்லை என்று எனக்கு அறிவிக்கப்படுகிறது. அதை நானும் அறிவேன். யுத்த காலத்தில்கூட எவ்வித சேதங்களுக்கும் உள்ளாகாத, திருகோணமலைக்கு வருகை தருவோர் உள்ளிட்ட மக்கள் வழிபாடு செய்யும் பண்டைய பௌத்த வழிபாடடுத் தலங்கள் இப் பிரதேசத்தின் சில பகுதிகளில் காணப்படுகின்றன.
எமது பண்டைய வரலாற்றின் சில காலப்பகுதியில் தமிழ் மக்களும் புத்த சமயத்தைப் பின்பற்றினர் என்பதை எடுத்துக் காட்டுகின்ற தமிழில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளைக் கொண்ட சில பகுதிகளில் பண்டைய பௌத்த வழிபாட்டுத் தலங்கள் உள்ளன.
இப்பிக்கு தனது மனதில் கொண்டுள்ள நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக இக்காணிகள் அனைத்தையும் நில அளவை செய்விப்பதற்கு முயன்று வருகிறார். தமிழர்களும் முஸ்லிம்களுமான இப்பகுதியின் தமிழ்பேசும் குடியிருப்பாளர்கள் இம்முயற்சிகளை எதிர்ப்பதோடு, தலைமுறை தலைமுறையாக தமது முன்னோர் வாழ்ந்த இக்கிராமங்களில் உள்ள காணிகள் இந்த வகையில் சூறையாடப்படுவதைத் தடுக்க உறுதிபூண்டுள்ளனர்.
பாதுகாக்கப்படவேண்டிய தொல்பொருள் பெறுமதிகொண்ட ஏதேனும் சிதைவுகள் இப்பகுதியில் இருந்திருக்குமாயின், மக்கள் இடம்பெயர்வதற்கு முன்னரான பல தசாப்த காலப்பகுதியில் அச் சிதைவுகள் அவ்வாறு பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும். அத்தகைய நடவடிக்கையேதும் மேற்கொள்ளத் தேவையில்லை என்று கருதப்பட்டதாலேயே அவ்வாறு செய்யப்படவில்லை.
கவலையளிக்கும் விதமாக, தொல்பொருள் திணைக்களத்திலுள்ள சில அதிகாரிகள் இப்பிக்கு போன்ற ஆட்களின் செயற்பாடுகளின் செல்வாக்கிற்கு பெரிதும் உட்பட்டுள்ளனர் என்று தமிழர்களும் முஸ்லிம்களுமான தமிழ்பேசும் குடிமக்கள் கருதுகின்றனர்.
இத்தகையதொரு நிலைமை திருகோணமலை மாவட்டத்தில் மாத்திரம் நிலவவில்லை. வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இத்தகைய செயற்பாடுகள் பற்றிய பல முறைப்பாடுகள் நிலவி வருகின்றன. வன பாதுகாப்புத் திணைக்களம்ரூபவ் வன சீவராசிகள் திணைக்களம் மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றின் காணி தொடர்பான செயற்பாடுகளும் இடம்பெயர்ந்த அகதிகள் தமது காணிகளுக்குத் திரும்பிவந்து அவற்றை உரிய முறையில் பயன்படுத்துவதற்கும் காணியற்ற தமிழ் மக்கள் காணிகளைப் பொற்றுக்கொள்வதற்கும் பெரும் தடையாக இருந்து வருகின்றன.
பல்வேறு சந்திப்புக்களின்போது நாங்கள் இவ்விடயங்களை பல சந்தர்ப்பங்களில் உங்கள் கவனத்திற்குக் கொண்டுவந்திருக்கிறோம். இப்பிரச்சினைகள் முழுமையாகத் தீர்த்து வைக்கப்படுவது அவசியமாகும்.
இப்பிக்குவின் நடவடிக்கைகள் இன, மத நல்லிணக்கத்திற்கு ஒரு பெரும் தடையாக உள்ளன. இந்நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டு முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென்மென்பது முக்கியமானதாகும்.
இவ்விடயங்களை உங்களது கவனத்திற்குக் கொண்டுவருவதோடு, அமைதி சீர் குலைக்கப்படுவதைத் தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டுமென நான் வினயமாகக் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
தங்களுண்மையுள்ள,
இரா. சம்பந்தன்
பாராளுமன்ற உறுப்பினர் - திருகோணமலை
தலைவர் - தமிழ் தேசிய கூட்டமைப்பு
பிரதிகள்:
1) கௌரவ சஜித் பிரேமதாச (பா.உ) வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார
அலுவல்கள் அமைச்சர்.
வீடமைப்புரூபவ் நிர்மாணத்துறை மற்றும் கலாசார
அலுவல்கள் அமைச்சு, 8 ஆம் மாடி, செத்சிறிபாயரூபவ் பத்தரமுல்லை.
2) கௌரவ கயந்த கருணாதிலக்க (பா.உ) காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு
அமைச்சர்.
காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு,
செத்சிறிபாய,
பத்தரமுல்லை.
3) நில அளவையாளர் நாயகம், நில அளவையாளர் நாயகத் திணைக்களம்,
150, கிருல வீதி, கொழும்பு – 05.
4) தொல்பொருள் ஆணையாளர்,
தொல்பொருள் திணைக்களம்,
சேர் மாக்கஸ்
பெர்னாண்டோ மாவத்தை,
கொழும்பு – 07.
5) நில அளவை அத்தியட்சகர்,
நில அளவைத் திணைக்களம்,
திருகோணமலை.
6) மாவட்டச் செயலாளர்,
அரசாங்க அதிபர்,
மாவட்டச் செயலகம்,
திருகோணமலை.
7) பிரதேச செயலகம்,
குச்சவெளி,
திருகோணமலை.
0 comments: