Home » » அதிபர் , ஆசிரியர்களின் போராட்டம் தொடர்பாக கல்வி அமைச்சு விடுத்த அறிவித்தல்

அதிபர் , ஆசிரியர்களின் போராட்டம் தொடர்பாக கல்வி அமைச்சு விடுத்த அறிவித்தல்


ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை பகடையாக பயன்படுத்தி குறுகிய அரசியல் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு ஒரு சில தொழிற்சங்கங்கள் கொண்டு செல்லும் வேலைத்திட்டம் தொடர்பில் மக்கள் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும். என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நேற்று கல்வி அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு அனைத்தும் தயாராக உள்ள நிலையில் அதனை தமது சங்கங்களின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியென காண்பித்து ஆசிரியரகள்; மற்றும் அதிபர்களின் கவனத்தை திசைத்திருப்புவதற்கு முயற்சி

ஆசிரிய சேவையின் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு கல்வி அமைச்சின் ஊடாக தயாரிக்கப்பட்ட யோசனைகள் தற்போது அரச துறை சம்பள கலந்தாய்வுக்கான விசேட ஆணைக்குழுவுக்கு முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கான பரிந்துரைகள் வெகுவிரைவில் கிடைத்த பின்னர் சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு இருக்கும் போது ஒரு சில தொழிற்சங்கங்கள் மக்களை திசைத்திருப்பும் வகையில் முன்னெடுத்து வரும் வேலைநிறுத்த போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் பின்னால் குறுகிய அரசியல் நோக்கம் உள்ளது. அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையில் உள்ள தொடர்ப்பை நீக்கி, அரசாங்கத்தின் மீது எதிர்ப்பை வலுவாக்குவதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதேபோன்று 2016.03 அரச நிர்வாக சுற்று நிருபத்தின் ஒழுங்குவிதிகளின் பிரகாரம் அனைத்து அரச ஊழியர்களின் சம்பள அளவு திட்டம் திருத்தம் செய்ததுடன் ஆசிரியர்களின் சம்பளமும் இதனுடன் திருத்தி அமைக்கப்பட்டது. இதன்பிரகாரம் 2016 ஆம் ஆண்டுக்கு முன்னர் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 16,120 ரூபாவே அடிப்படை சம்பளமாக கிடைக்கப்பெற்றது. எனினும் தற்போது அந்த தொகை 33,330 ரூபாவாக இரு மடங்கு அதிகரித்துள்ளது. இந்த சம்பள அதிகரிப்பை மறந்து சம்பள அதிகரிப்புகள் எதுவும் செய்யவில்லை என குரல் எழுப்பும் தொழிற்சங்கங்களுக்கு நாம் இதனை மீண்டும் நினைவூட்ட விரும்புகின்றோம்.

ஆசிரிய சேவையில் முன்னெடுக்கவுள்ள சம்பள திருத்தங்களை எதிர்வரும் காலங்களில் உரிய முறையில் முன்னெடுப்பதுடன் சம்பள பற்றாகுறை பிரச்சினைக்கான உரிய தீர்வினை ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சும்பள முரண்பாடுகளை நீக்குவதற்கான யோசனைகள் கல்வி அமைச்சின் ஊடாக 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அரச துறை சம்பள கலந்தாய்வு விசேட ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த யோசனைகள் கீழ்வருமாறு,

• தற்போது சேவையில் உள்ள பயிற்சி மற்றும் பட்டதாரிகள் அல்லாத ஆசிரியர்களை பட்டதாரிகளாக மாற்றுவதுடன் தொழில் தகைமைகளையும் வழங்குதல். இதன் பிரகாரம் 2025 ஆம் ஆண்டாகும் போது கல்வியியல் பட்டதாரிகள் மாத்திரமே ஆசிரியர் சேவைக்கு சேர்க்க வேண்டும். மேலும் அவர்களுக்கு உரிய சம்பள தொகையை பெற்றுக்கொடுக்க வேண்டும். தற்போது ஆசிரிய சேவைக்கான யாப்பில் உள்ள தர நிலைகளுக்கு பதிலாக ஆசிரிய சேவையை மூன்று தரங்களை கொண்ட சேவையாக மாற்றியமைத்தல்.

• இதற்கு குறிப்பிட்ட காலம் தேவை என்பதனால் தற்போது ஆசிரியர்களுக்கு உள்ள சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வாக தற்போதுள்ள சம தகைமைகள் கொண்ட சேவைக்கு இடைக்கால சம்பள யோசனையொன்றை முன்வைத்தல்.

• ஆசிரிய மற்றும் அதிபர் சேவையை ஏனைய சேவைகளில் இருந்து வேறுப்படுத்தி விசேட சேவையாக கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுத்தல்.

• ஆசிரியர்களும் அதிபர்களுக்கும் தொழில் அபிவிருத்தி வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் அவர்களுக்காக தொழில் திறமை கொள்கையொன்றை தயார்ப்படுத்தி தரநிலைக்கு அமைவாக தொழில் கொடுப்பனவொன்றை வழங்கல்.

இந்த யோசனைக்கான பரிந்துரை கிடைத்தவுடன் உடனடியாக சம்பள முரண்பாட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. -(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |